இரண்டு ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் சரத்குமார் இவர்களின் பிணை மனு உச்சநீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நடந்த வாதங்கள் மிகவும் சுவையாக இருந்தன. கனிமொழியின் மனித உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாக அவரின் வழக்கறிஞர் கூறியபோது உச்சநீதிமன்ற நீதிபதி “ஊழல் செய்வது அதைவிட மிகப்பெரிய மனித உரிமை மீறிய செயல்” என திருப்பித்தாக்கினாரே பார்க்கலாம். மனித உரிமை எப்படி பாடாய்ப்படுகிறது பாருங்கள். முகேசு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கோதாவரிப்படுகை எண்ணெய்த் துரப்பணத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக புது செய்தி வந்திருக்கிறது. உச்சநீதிமன்றப் பார்வையில் முகேஷ் அம்பானி நிகழ்த்தியுள்ள மனித உரிமை மீறல் இது.பெட்ரோலிய அமைச்சகத்தின் பல முக்கிய அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் என்ன செய்யப் போகிறது? பார்க்கலாம். முகேஷ் அம்பானியின் வீட்டை நம்மில் எல்லோருமே ஒரு தடவையாவது வலைத்தளத்தில் பார்த்திருக்கலாம். இரவில் பட்டினியோடு படுக்கச்செல்லும் பல லட்சம் மும்பைவாசிகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள அம்பானியின் சொர்க்க பூமியில் கோதாவரி எண்ணெய்த் துரப்பண ஊழலில் சேர்த்த பணமும் புதைக்கப்பட்டிருக்கலாம். அம்மாளிகையை சுத்தமான சொக்க சுய சம்பாத்தியத்தில் அம்பானி கட்டியிருந்தால்கூட அதுவும் ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல்தான்.
ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் ஆதரவாளர்களின் மீது நள்ளிரவில் காவல்துறை நடத்திய தாக்குதல்களை என்னவென்று சொல்வது? பசுமை வேட்டையைப் போல காவி வேட்டையும் நடத்தப்பட்டுள்ளது. பாபாவை பார்த்து அரசு ஏன் பயப்பட வேண்டும்? சில லட்சம் பேர் மட்டுமே அறிந்திருந்த பாபாவின் முகத்தை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் உற்று நோக்கி அறிய முக்கியக் காரணம் அரசு நடத்திய மனித உரிமை மீறல்தான். மகாத்மா காந்தியடிகள் உண்ணாவிரதம் நடத்திய போது இன்றைய மத்திய அரசைப் போல், அன்றைய ஆங்கிலேய அரசு செயல்பட்டிருந்தால் எப்படியிருந்திருக்கும்? பொது நலத்திற்காக ஒருவர் உண்ணாவிரதம் போன்ற அமைதி வழிகளில் போராடும் போது அரசு அவர்களிடம் செவி சாய்க்க வேண்டும். அது செவிட்டு அரசாங்கமாக இருந்தாலும் பரவாயில்லை. அது மட்டும்தான் அறரீதியான, தார்மீகக் கடமையாக ஒரு அரசுக்கு இருக்க முடியும்.
மேற்கு வங்கத்தில் கடந்த 34 வருட கம்யூனிச ஆட்சியில் நடைபெற்ற ஏராளமான மனித உரிமை மீறல்களை ஊடகங்கள் வெளிக்கொணரத் தொடங்கியிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டிற்கு பக்கத்தில் மரணப்படுகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தோண்ட தோண்ட எலும்புகள். கடந்த பல வருடங்களில் காணாமல் போய்க்கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் எலும்புகளாக அவை இருக்கலாம். பலநூறு தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட மரிச்சா ஆபி படுகொலைச் சம்பவங்களும் கூட ஊடகங்களில் பரவலாக வரத்தொடங்கிவிட்டன. மனித உரிமை மீறல்கள் குறித்த சுயமான ஆய்வு ஒன்றை சி.பி.எம். கட்சி செய்ய வேண்டும்.
தாங்கள் உற்பத்தி செய்த மருந்துப்பொருட்களை சோதனை செய்து பார்க்க பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் மூன்றாம் உலகநாடுகள். சென்ற வருடம் பாப்பிலோமா வைரஸ்க்கான தடுப்பூசியை சோதனை செய்வதற்காக ஆந்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த பலநூறு பழங்குடி இனப்பெண்களை தேர்ந்தெடுத்து மருந்து செலுத்தப்பட்டதில் ஏழு பழங்குடி இனப்பெண்களின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது. ‘பாத்’ என்ற அமெரிக்க அரசு சாரா நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தோடும், ஆந்திரப்பிரதேசம், குஜராத் அரசுகளோடும் இணைந்து நடத்திய இந்த சோதனை தற்போது மத்திய அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பழங்குடி இனப்பெண்களை சோதனை எலிகளாக மாற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக அதிகாரிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது? சோதனைக்கு நகர்ப்புறப் பெண்களை தேர்ந்தெடுத்திருந்தால் விரைவான மருத்துவ வசதியைப் பெற்று அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று இது சம்பந்தமாக விசாரித்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. இக்குற்றத்திற்கு யார் பொறுப்பு எனச்சொல்ல அக்குழு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதிகாரத்தின் கைகள் அதிகாரத்தை நோக்கி நீளுமா என்ன? பழங்குடி இனப்பெண்களின் மனித உரிமைக்கு யார் பொறுப்பு?
தினந்தோறும் பலநூறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்து கொண்டே உள்ளன. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், கார்ப்பொரேட்டுகளின் தொடர்ந்த விரிவாக்கத்தால் தொடர்ச்சியாக உயிர்கள் பறிக்கப்படுகின்றன. லஞ்சம் வாங்கி திகார் சிறையில் வைத்தால் அதை மனித உரிமை மீறலாகக் கருதுபவர்கள் தமிழக மீனவர்களை இலங்கை சிறைப்படுத்திய போது மீனவர்களின் மனித உரிமைப் பற்றி கவலைப்படவில்லை. ஊழல்தான் பிரதான மனித உரிமை மீறல் எனப் போதிக்கும் உச்சநீதிமன்றம், தனது மீனவக்குடிமகன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படும் போது மெளனம் காத்து நின்றது. அக்டோபர் 2008 முதல் மே 17 2009 வரை ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஈழத்தமிழ்மக்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை தவிர்க்க முடியாத ஒரு சாதாரண நிகழ்வாக சோ சித்தரிக்கிறார். சோவின் அறப்பிறழ்வைதான் இது காட்டுகிறது.‘எங்கே மனித உரிமை?’ என அவரது பாணியில் நாம் தொலைக்காட்சித் தொடர் போட முடியாது.
மனித உரிமை மீறல் என்பது மனிதனின் இருப்பை ஒன்றுமில்லாமல் செய்வது. புழுப்பூச்சி போல மனிதனை நசுக்கி ஒழிப்பது. மனிதன் உயிர் வாழ்வதற்கு உள்ள மிக அடிப்படையான உரிமையை இல்லாமலாக்குவது. உலகெங்கிலும் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு கணமும் மனிதர்களின் உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதை தடுக்க நாம் என்ன செய்தோம்? என்ன செய்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்விகளுக்கு நாம் என்ன விடையளிக்க போகிறோமோ அதை பொறுத்துதான் பிரபஞ்சத்தின் இருப்பும் உறுதி செய்யப்படும். மற்றப்படி சோவின் கேள்வி-பதில் ஞானத்தில் மனித உரிமையை நாம் கிஞ்சித்தும் எதிர்பார்க்க முடியாது. சமீபகாலத்தில் ஈழத்தமிழ் மக்களைப் போல உலகில் வேறு எம்மக்களும் இவ்வளவு மோசமான மனித உரிமை மீறலை சந்தித்தது கிடையாது. இங்கிலாந்தின் சானல்-4 தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றக் காட்சிகளால் மனித சமுதாயம் வெட்கித் தலைகுனிந்தது. தங்கள் நாட்டு மக்களை கொன்றொழிக்கும் உலக அரசுகள் மட்டுமே இலங்கையின் போர்க்குற்றவாளியான ராசபக்சேவை வரவேற்று உபசரிக்க முடியும். ஒரு வண்ணத்துப்பூச்சியைக் கொன்றால் கூட பிரபஞ்சத்தை இணைக்கும் இழை ஒன்று அறுபடுவதாக ஓசோ போன்ற ஞானிகள் கூறுவார்கள். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கும் ஈழத்தில் மட்டும் இலங்கையின் எல்லைக்கோடு ஏன் அறுபடக்கூடாது. ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு எப்படி சாத்தியமாகும்? ஒன்றுபட்ட பாகிஸ்தானுக்குள்தான் வங்கதேசம் என்ற தீர்வு காணப்பட்டதா? ஒன்றுபட்ட இந்தோனேசியாவில்தான் கிழக்கு தைமூர் பிரச்சினை தீர்க்கப்பட்டதா? ஒன்றுபட்ட யூகோஸ்லாவியாவிற்குள்தான் கொசாவா பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்ததா?
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு கேட்கும் இங்குள்ள கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தங்களின் நேர்மையான பதிலை சொல்லட்டும். ஈழத்தமிழர்கள் உலக சமுதாயத்தின் உதவியுடன் தங்கள் தேசத்தை நிர்மாணிக்கும்போது தமிழகத்திலிருந்து கிளம்பும் வெற்று எதிர்கூச்சல்கள் அதை எழுப்புபவர்களுக்குள்ளேயே அடங்கிப்போகும்.
------------------------
அம்ருதா,ஜூலை,2011
No comments:
Post a Comment