Wednesday, 2 November 2011

இதமளிக்காத உண்மைகள்

                 
   ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் ஊடகங்களால் வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு வாசகத்தைப் போட்டார்கள்: “கம்யூனிசம் என்பது மிக அருமையான தத்துவம்; ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராதது”. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை ஊகித்து இத்தகைய வாசகத்தை அவர்கள் கோர்த்திருக்கலாம். தேர்தல் முடிவுகளும் கூட ஊடகங்கள் கணித்தபடி அமைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் போட்ட வாசகம் என்றைக்குமே உண்மையாக மாறிவிட முடியாது. “எல்லோரும் ஒன்று; எல்லோருக்கும் உண்டுஎன்ற தாரக மந்திரத்தை தன்னில் கொண்டு சோசலிச,கம்யூனிச ஆட்சி அமைக்கப்படும் போது உருவாகும் நல்லத்தொடக்கம் மக்களின், தொண்டர்களின் தொடர்ந்த கண்காணிப்பின் மூலம்தான் கடைசி வரை நீடிக்க முடியும். கம்யூனிசத்தின் இறுதி லட்சியமாகிய அரசு உதிர்ந்து போவது என்பதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், அந்த உன்னத இலட்சியத்தை நோக்கி முன்னேறாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கம்யூனிச அரசின் தொடக்ககால வேலைத் திட்டத்தை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு, அதுவும் கட்சித்தொண்டர்களின் சர்வாதிகாரம் என குறுகிப் போனதுதான் மேற்கு வங்கத்தில் நாம் காணும் வேதனையான நிகழ்வுகளுக்கான மூலகாரணம்.

                இந்தியா என்ற அரை காலனிய, அரை முதலாளித்துவ நாட்டின் ஓர் அங்கமாக மேற்கு வங்காளம் இருக்கலாம். ஆனால் அது கம்யூனிசக் கொள்கைகளால் ஆளப்படும் ஒரு மாநிலம். புத்ததேவோ, பிரகாஷ்காரட்டோ கம்யூனிசத்தின் கொள்கைகளை வளைக்கவோ, திரிக்கவோ முடியாது. அவ்வாறு திரித்து ஆட்சி நடக்குமானால் அது கம்யூனிச ஆட்சி அல்ல. தோற்றுப்போனது கம்யூனிச அரசு என்று சொல்ல முதலாளித்துவ ஊடகங்களுக்கு எவ்வித தார்மீக அருகதையும் கிடையாது.

                பெரும் தொழில்களுக்கும், சோசலிசத்திற்கும் ஒத்து வராது என்ற எங்கெல்சின் பொன்வாக்கியம் மேற்குவங்கத்தில் மதித்து நடைமுறைப் படுத்தப்பட்டதா? ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துப் போகவிடப்பட்டன. அதற்கான காரணங்கள் பலவாறாக இருந்தாலும் அடாவடித்தனமான தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளும் முக்கியக் காரணம் என்று ஆதாரங்களுடன் ஊடகங்கள் பேசும்போது நம்வாய் அடைபட்டுத்தான் போகிறது. கம்யூனிச,சோசலிச அரசுகளின் நோக்கங்கள் முதன் முதலாக கட்டமைக்கப்படும் போது நம் நரம்புகள் புடைத்தெழுந்து, உணர்ச்சிகள் இன்ப வெள்ளத்தில் கொப்பளிக்கத்தான் செய்கின்றன. எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் நிலம், எல்லோருக்கும் இலவச கல்வி, அனைவருக்கும் சுகாதாரம். வீறுகொண்டு எழுந்த மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு இதையயல்லாம் நிறைவேற்ற என்ன 34 ஆண்டுகளா வேண்டும்? அனைவருக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. மற்றபடி   தொழில்   துறையிலும், கல்வியிலும்,    சுகாதாரத்திலும், இருப்பிட வசதியிலும், பிறமாநில அரசுகளின் செயல்பாடு அளவுகூட மேற்கு வங்கத்தில் இல்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு இதைத்தான் முதலில் செய்து முடித்திருக்க வேண்டும். விவசாயத்துறையின் தேக்கத்திற்குப் பின்னர் பல்லாயிரக்கணக்கான சிறு, குறுந்தொழில்கள் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை அது உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.
       மேற்குவங்க அரசின் நிலச் சீர்திருத்தம் பெரிய உதவி எதையும் செய்துவிடவில்லை. மிகச் சிறுசிறு  துண்டுகளாக்கப்பட்டுவிட்ட விவசாய நிலங்களின் மூலம் உருப்படியான லாபம் எதுவும் கிடைப்பதில்லை. மாநிலத்தை தொழிற்மயப்படுத்தத் தவறியதன் விளைவுதான் இத்தகையக் கொடிய வறுமைக்குக் காரணம்என கொல்கத்தாவில் உள்ள இந்தியப்புள்ளியியல் கழகத்தின் பொருளாதார நிபுணர் அபிருப் சர்கார் உறுதிபடத் தெரிவிக்கிறார். தொழிற்மயமாக்கம் செய்யப்படவில்லை என்ற வாதத்தை வைக்கும் போது டாட்டாவின் நானோ தொழிற்சாலையையும், சலீமின் இரசாயனத் தொழிற்சாலையையும் மக்களும் எதிர்க்கட்சிகளும் விரட்டி அடித்ததைப் பற்றி கோபம் கொப்பளிக்கப் பேசும் மார்க்சிஸ்ட் தொண்டர்களைப் பார்த்திருக்கிறேன். பல்லாயிரம் கோடி முதலீடு செய்து சில ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை என்ற எலும்புத்துண்டுகளை மக்களை நோக்கி வீசி எறிவதல்ல தொழிற்மயமாக்கம். இந்தோனேசியாவில் இலட்சக்கணக்கான கம்யூனிஸ்ட் தோழர்களைப் படுகொலை செய்த சுகர்னோவின் நண்பர் சலீமின் குழுமத்தை (சுகர்னோவின் பினாமிதான் சலீம் என்ற செய்தியும் உண்டு) நந்தி கிராமுக்கு வரவழைத்து 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்து அமைக்கப்படும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையில் சில நூறு பேருக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்புகள் மட்டும் தொழிற்மயமாக்கலல்ல. ஒரு காலத்தில் தொழிற்மயமாக்கத்தில் முன்னணியில் இருந்த மாநிலம்தான் மேற்கு வங்காளம். 1980-களில் கல்யாணி மற்றும் ஹால்டியா தொழில் நகரங்களின் மூலம் தேசத்தின் மொத்த உற்பத்தியில் 13 சதவீதத்தை மேற்கு வங்கம் பெற்றிருந்தது. தொழில் வளர்ச்சியில் மேற்குவங்கத்தைவிட முன்னணியில் இருந்த மாநிலங்கள் மஹாராட்டிரமும், குஜராத்தும்தான். கல்யாணி தொழில் நகரம் பி.சி.ராய் முதல்வராக இருந்த போது உருவாக்கப்பட்டு, சித்தார்த்த சங்கர்ராய் முதல்வராக இருந்த போது வேகமாக வளர்க்கப்பட்டு 150 தொழில் நிறுவனங்களோடு ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கிய விருட்சமாக  விளங்கியது. ஆனால் இன்று வெறும் 30 சிறிய, நடுத்தர தொழில்களோடு தள்ளாடிக்கொண்டிருக்கிறது கல்யாணி. கம்யூனிச அரசு 80-களில் தோற்றுவித்த ஹால்டியா தொழிற்பேட்டை 150 நிறுவனங்களை கொண்டிருந்தது. ஆனால் இன்று?

                மேற்கு வங்க அரசின் கிராமப்புற வளர்ச்சி நிறுவனம் 2007 முதல் 2010 வரை மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற மாவட்டங்களில் எடுத்த ஆய்வு முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.முதலாவதாக உணவைப்    பற்றி  பார்ப்போம். ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவு கூட இல்லாமல் காலம் கடத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 20 லட்சம். அதாவது கிட்டத்தட்ட 80 லட்சம் முதல் 90 லட்சம் பேர் வரை. சுமார் நான்கு சதவிகித மக்கள் அதாவது 4.9 லட்சம் குடும்பங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட உண்ணமுடியாத அளவிற்கு வறுமையில் வாடுகிறார்கள். அடுத்து சுகாதாரத்தைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் நிகழும் பெரும்பாலான மரணங்களைப் பின்னணியிலிருந்து இயக்குவது ஊட்டச்சத்துக் குறைபாடும், பட்டினியும்தான்.  கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கிடையேயான இடைவெளி மிக மிகக் குறைவு என்ற மேற்கு வங்க அரசின் கூற்று சரியல்ல என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கு வங்க கிராமப்புற ஏழைகளின் நிலை நாட்டிலேயே வறிய மாநிலமான ஒரிசாவின் கிராமப்புற ஏழ்மை நிலையை ஒத்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
              அனைவருக்கும் கல்வி என்பது ஒரு லட்சியக்கனவாகத்தான் இன்றைக்கும் இந்தியா முழுவதும் படர்ந்திருக்கிறது. மேற்குவங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. தொடக்கப்பள்ளிகளில் தேர்வுகள் கிடையாது. ஆங்கிலமும் கற்பிக்கப்படமாட்டாது என்ற அரசின் முடிவுகள் பள்ளி இடை நின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு கல்வியின் தரத்தையும் சீர்குலைத்தது. நிலைமை மோசமடைவதற்குள் புத்ததேவ் அரசு மீண்டும் பள்ளித் தேர்வையும், ஆங்கிலத்தையும் கொண்டு வந்து விட்டது. சித்தார்த்த சங்கர்ரே தனது ஐந்து வருட ஆட்சியில்  40,000  பள்ளிக்கூடங்களைக் கட்டிய போது, கம்யூனிச அரசு 34 வருடங்களில் மொத்தம் 52,000 பள்ளிக்கூடங்களையே தோற்றுவித்திருக்கிறது. உயர்நிலைப்பள்ளி வரை ஆசிரியர் மாறுதல் தடை செய்யப்பட்டிருப்பதால் பல கிராமப்புறப் பள்ளிகளின் மாணவர்களது நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க தொடக்கப்பள்ளிகளில் மட்டும் ஆசிரியர் பற்றாக்குறை நாற்பதாயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி வளர்ச்சி 2010 குறியீட்டின் படி 28 மாநில, 7 யூனிய பிரதேச அரசுகளில் மேற்கு வங்கம் 32-வது இடத்தை பெற்றிருக்கிறது. பள்ளி இடை நிற்றலின் தேசிய சராசரி 3.7 சதமாக இருக்க மேற்கு வங்கத்திலோ அது 4.7 சதமாக உள்ளது.

                அடுத்த பத்தாண்டுகளில் நூற்றாண்டு கொண்டாட்டத்தை அனுசரிக்க இருக்கும் இந்தியக் கம்யூனிச இயக்கங்கள் தாங்கள் கடந்து வந்த பாதையையும், உலகம் முழுவதிலும் உள்ள கம்யூனிச இயக்கங்களின் கடந்த காலப் பயணங்களையும் சுய மதிப்பீடு செய்து கொள்வது இன்றைக்கு மிக மிக அவசியம். லெனின், ஸ்டாலின், மாவோ என யாருடைய கொள்கைகள் அடிப்படையானாலும் பெரும் கனவுகளையும், நம்பிக்கைகளையும் தாங்கி தொடங்கும் கம்யூனிச அரசுகள் அடுத்த சில பத்தாண்டுகளில் தாங்கள் தாங்கிப்பிடித்த கம்யூனிசக் கொள்கைகளின் பழு தாளாமல் அவற்றை இறக்கி வைத்து விட்டு, மனித முகம் இழந்து, முதலாளித்துவ கார்ப்பொரேட்டுகளின் அடிவருடிகளாக தேய்ந்துபோவதன் சூட்சுமம் மட்டும் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. லெனினுடைய அரசில் சிறுபான்மை  தேசிய   இனங்களின் அமைச்சராகப் பொறுப்பு வகித்து, பின்லாந்து என்ற   தேசத்தை   தனியே   பிரிந்து போக அனுமதி அளித்த அந்த உயர்ந்த தோழர் ஸ்டாலின்தான், 1934-ல்வெற்றிப்பேராயம்என்றழைக்கப்பட்ட மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 134 உறுப்பினர்களில் 98 பேர் வரை அதாவது 70 சதம் பேரை 1937-38 காலத்தில் கைது செய்து தீர்த்துக்கட்டினார். ஸ்டாலினை மிகத்தீவிரமாக கண்காணித்திருக்க வேண்டிய இதே மத்தியக்குழுதான் 1937 பிப்ரவரியில் ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு பச்சைக்கொடி காட்டியது. இட்லரின் ஐந்தாம் படையினர் சிலர் மத்தியக்குழுவிற்குள் ஊடுருவி இருக்கலாம் என நம்பிய ஸ்டாலின், 100 நிரபராதிகள் தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை, ஒரு துரோகி தப்பித்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதை  உறுதியோடு கடைப்பிடித்தார். 1956 பிப்ரவரியில் நடைபெற்ற 20-வது கட்சிப் பேராயத்தில் ஸ்டாலினை தாக்கிப் பேசிய குருச்சேவ் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். 1960 களில் சீனாவின் கலாச்சாரப் புரட்சி எப்படி சீரழிவிற்குள்ளாகியது என்பதை அத்தேசம் அறியும். 1975 முதல் 78 வரை கம்பூச்சியாவில் கம்யூனிசத்தின் பெயரால் போல்பாட் நிகழ்த்திய கொடுமைகளை உலகம் அறியும். இப்படியாக கம்யூனிச அரசுகள் காலப்போக்கில் சீரழிந்து போவதன் மர்மம் என்ன?         
     தேசிய அளவில் முதலாளிகளையும், கார்பொரேட்டுகளையும் தாராளமயக்கொள்கைகள் திணிக்கப்படுவதையும் கடுமையாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தில் மட்டும் அம்மாநில அரசு பன்னாட்டு நிறுவனங்களான டெள கெமிக்கல் கம்பெனி (அமெரிக்கா) சலீம் (இந்தோனேசியா) மற்றும் இந்தியப் பெரும் முதலாளிகளான டாடா, ஜிண்டால் இவற்றின் பிரதிநிதிகளை அழைத்து, வரிச்சலுகை உட்பட ஏராளமான சலுகைகளை அறிவித்து தொழில் தொடங்க அழைப்பதை அனுமதிப்பது எப்படி? கட்சியின் மத்தியக்குழுவின் தீர்மானங்களும் வேலைத் திட்டங்களும் மேற்கு வங்கத்திற்காக வளைக்கப்பட்டதா? அல்லது மேற்கு வங்கக் கட்சியும், அரசும் மத்தியக்குழுவை எதிர்த்து செயல்பட்டதா? மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், வேலைகள், கொள்கைகள் சரியயன்றால் இந்தியா முழுமைக்கும் அதை விரிவுப்படுத்த கட்சி தயாராக இருக்கிறதா? மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் போல (உதாரணத்திற்கு மாயாவதி அரசு நொய்டா விவசாயிகளை சுட்டுத்தள்ளியது) சிங்கூர், நந்திகிராம், லால்கர் மக்களை துப்பாக்கிச் சூட்டின் மூலமும், குண்டாந்தடிகள் மூலமும், பெண்களை மானபங்கப்படுத்தியதன் மூலமும் அடக்கி ஒடுக்கிய மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் தங்கள் செயல்களை நியாயப்படுத்திட மார்க்சின் எந்த வரிகளை மேற்கோள் காட்டுவார்கள்? அல்லது இதனை ஜனநாயகத்தின் அறம் எனக்கட்சி ஏற்றுக்கொள்ளுமா? சிங்கூர் நிகழ்வுகளுக்குப் பின்னர் கட்சியும், அரசும் திருந்தியிருக்குமேயானால் இப்படிப்பட்ட மோசமான தோல்வியை அது தவிர்த்திருக்கும். நந்திகிராமிலும், லால்கரிலும் கட்சி காட்டிய முதிர்ச்சியற்ற தன்மை மமதாவையும், மாவோயிஸ்டுகளையும் மேற்கு வங்கத்தில் நங்கூரமிட்டுப் பாய்ச்சியது.

                நந்திகிராமை மீண்டும் கைப்பற்றுதல் என்ற மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அரசின் திட்டங்கள் துப்பாக்கி குண்டுகளின் உதவியுடன் 2007-ம் ஆண்டு அக்டோபர் இறுதியிலும், நவம்பர் மாத ஆரம்பத்திலும் நிறைவேற்றி முடிக்கப்பட்ட பிறகுநந்திகிராம்: மனசாட்சியின் குரல்என்றக் கட்டுரையில் முதலாவது மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசில் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தவரும், சிறந்த அறிவு ஜீவிகளுள் ஒருவருமான அசோக்மித்ரா பின்வருமாறு எழுதுகிறார்.

                முப்பதாண்டுகளுக்கு முன்னால் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட இடது முன்னணி அரசாங்கம் மக்களுடன் இணைந்து, அவர்களிடம் சங்கமித்து, அவர்களின் வாதங்களைக் கேட்டறிந்து, அதனை உணர்ந்த பின்தான் அரசாங்கத் திட்டங்கள் வடிவம் பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டது.  இதமளிக்காத  உண்மைகளை இனி மறைத்துக்கொண்டே இருக்க இயலாது. சில பத்தாண்டுகளுக்கு முன்னால் மார்க்சிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் எவ்வாறு இருந்தது என்பதனை விவரிக்க எஸ்.டி.பர்மனின் பாடலை, யாரும் இரவல் வாங்கலாம். ‘நீங்கள் நேற்றைய நீங்கள் அல்ல.’ 90% உறுப்பினர்கள் 1977 க்குப் பின் கட்சியில் இணைந்தவர்கள். 70% 1991-க்குப் பின் வந்தவர்கள். அவர்களுக்கு இந்தக் கட்சி செய்த தியாகங்கள் குறித்து எதவும் தெரியாது. சோசலிசம், புரட்சி சார்ந்த அவர்களின் தத்துவார்த்த ஈடுபாடுகள் வழக்கொழிந்து வரும்    
       நாட்டார் கதையைப் போன்றது. இன்றைக்குப் புதிய கருத்தியல்வளர்ச்சிஇருப்பதால், இங்குள்ள பலரும்சுயவளர்ச்சியின்தேடலுடன்தான் கட்சியுடன் தங்களை ஐக்கியப்படுத்தியுள்ளனர். அவர்கள் இங்கு எதையும் இழக்க அல்ல, பெறவே வந்துள்ளனர். ஆட்சி செய்யும் கட்சியில் ஐக்கியமாவது என்பதன் வாயிலாக பல்வேறு சிறப்புரிமைகளை தமதாக்கிக் கொள்வதற்கு வெவ்வேறு தந்திரங்களை கற்றுக் கொண்டிருக்கின்றனர். இப்படி முன்னுரிமை பெற சிறந்த வழி எஜமானரை துதிபாடுவதே.  இன்று கட்சி என்பது  துதிபாடுபவர்கள், அரசவை விகடர்கள் நிறைந்த திறந்த களமாக உருமாறிவிட்டது. அதைவிட இங்கு சமுதாய விரோதிகளின் செல்வாக்கு மேலோங்கி வருகிறது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமூக விரோதிகளின் துணை தேவைப்படுகிறது. அவர்கள் திரைக்குப் பின்னால் மறைவில் இருப்பார்கள். இக்கட்டான தருணங்களில் அழைக்கப்படுவார்கள். 1970-களில் இத்தகைய சமூக விரோதிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமையை எட்டிவிட்டார்கள். எனக்கு அச்சமாக உள்ளது, அது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நேர்ந்துவிடுமோ என்று. தியாகங்கள் பல புரிந்து நீண்ட நாட்களாக கட்சியில் இருக்கும் அந்த முதிய தலைமுறையினர், மனவேதனையுடன், சங்கடங்களுடன், சோர்ந்து போய் உள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்ப்பை முறையாய்  தெரிவித்தால் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தும்.  இதற்கு மேல் கட்சி அவர்களைத் தூக்கி வெளியே எறிந்தால் அவர்களுக்கு எந்த ஆதரவு கிடைக்கும்? மம்தாவின் நடத்தை, சார்பு, திட்டம், செயல்புரியும் விதம், பேச்சு என எல்லாம் பாசிசத்தைக் குறிக்கிறது. நான் எனதாக இன்னும் உணரும் கட்சியின் தலைமைக்குத் தாழ்மையுடன் பணிகிறேன். தயவு செய்து மீண்டும் யோசியுங்கள், மாவோயிசத்தைக் கண்டு நடுக்கம் கொள்ளும் நீங்கள் அந்த நடுக்கத்தில் மேற்குவங்கத்தை பாசிச சாக்கடையில் வீசி விடுவீர்களா?” 

                1977  ஜூன் 21 அன்று ஜோதிபாசுவோடு இணைந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நால்வரில் இன்று உயிரோடு எஞ்சியிருக்கும் அசோக்மித்ரா, தோழர்கள் மேற்கு வங்கத்தை பாசிச சாக்கடையில் வீசிவிட்டதைக் கண்டு மனம் கலங்கித்தான் போயிருப்பார்.

                மனித முகத்தையும், ஜனநாயகத் தன்மையையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும்  உறுதிப்படுத்தவல்ல, சோசலிசத்தை மையமாகக்கொண்ட வளர்ச்சி முறையானது செல்வச் செழிப்பில் நிறைவைத் தராது போனாலும் பாதுகாப்பான வாழ்கையையும், மனநிறைவையும் எல்லோருக்கும் தராதா?” என்ற இந்திய மார்க்சிய அறிஞர் ரந்திர்சிங்கின் சிந்தனை மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த மண்ணுக்கேற்ற மார்க்சியமாக அதனை மாற்றிட  நமக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.

                தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தை ஒரு அமைதிப்புரட்சி என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வர்ணித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய என் நண்பர் ஒருவர் இது மேற்கு வங்கத்திற்கும் பொருந்தும்தானே என்று கேட்டார். என்னால் வேதனையுடன் சிரிக்கத்தான் முடிந்தது.
                                                            -------------------------------
அம்ருதா,ஜுன்-2011



                 

               

No comments:

Post a Comment