Sunday 30 October 2011

பன்மயத்தை சூறையாடும் மதவாதம்

                                  
                சிறு வயது தொடங்கி பல ஆண்டுகள் வரை என் குடும்பத்தினரோடும், என் நண்பர்களுடனும் சேர்ந்து எங்கள் ஊர் தர்காவிற்குப் போய் வந்த நினைவுகள் இன்னமும் மாறாமல் அப்படியே உள்ளன. சர்க்கரை, பேரீச்சம் பழம் கொண்டு சென்று பய பக்தியோடு பாத்தியா ஓதுவதும், பள்ளிவாசலை வளைய வளையச் சுற்றி வருவதும் இன்னமும் பசுமையான நினைவுகள். சேக்தாவூத் ஒலியுல்லா என்ற முஸ்லிம் பெரியவரின் சமாதிதான் தர்காவின் மையம். அதன் எதிரே புறாக்கள் அடையும் ஒரு சிறிய மினார். புறாக்கூண்டு என்றுதான் அதைச் சொல்வோம். வருடா வருடம் நடக்கும் சந்தனக்கூடு விழாதான் எங்களின் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தின் ஊற்று. பத்து நாட்கள் கந்தூரி விழாவின் இறுதிநாள் நிகழ்வுதான் சந்தனக்கூடு. மாலை 5 மணிக்கெல்லாம் புறப்பட்டுச் சென்றால் நள்ளிரவு வரை கூடும் கூட்டத்தை ரசித்துக் கொண்டும், ராட்டினம் சுற்றிக் கொண்டும், திருவிழாவிற்காக வரவழைக்கப்படும் நிஜக் கரடியை சீண்டிக்கொண்டும், துப்பாக்கியால் பலூனை உடைத்துக் கொண்டும்…அது ஒரு சந்தோஷமான நிகழ்வுதான். கூட்டத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்களாகத்தான் இருப்பார்கள். தொலைதூர ஊர்களிலிருந்தெல்லாம் இஸ்லாமியர்கள் வருவார்கள். இந்துக்களானாலும், முஸ்லீம்களானாலும் வருடா வருடம் நடக்கும் கந்தூரி விழாவில் கலந்து கொள்ள வசதியாக வேண்டுதல்களை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்.

                தர்காவிற்குச் சென்று வழிபடுவதால் மட்டும் ஒரு இந்து மதம் மாறி இஸ்லாத்திற்குப் போய்விடுவார் என்று அர்த்தம் கிடையாது. ஓரிறை வழிபாட்டை வலியுறுத்தும் இஸ்லாம் மதத்திற்குள்ளாகவே பன்மயத்தை வளர்க்கும் முயற்சிகளுள் ஒன்றாகவே தர்கா வழிபாட்டை முஸ்லிம் சீர்திருத்தவாதிகள் பார்க்கின்றனர். இது போன்ற விழாக்கள்தான் பல்வேறு மதத்தவர்களை உள்ளடக்கிய ஒரு சமூகத்தளத்தில் பன்மயத்தையும், சகிப்புத் தன்மையையும் வளர்க்கின்றன. அதற்கான எளிய வழியும் இதுதான். ரமலான் பண்டிகையின் போது அப்பாவின் நண்பர் ரசாக் டாக்டர் வீட்டிலும், என் நண்பர் மன்சூர் வீட்டிலும்தான் விருந்து. அதுபோலவே தீபாவளியன்று புது சட்டைப்போட்டுக் கொண்டு அம்மா தரும் பெரிய கேரியலோடு அவர்கள் வீட்டில் நான் ஆஜர். அன்று என் நண்பனின் அம்மா தரும் இரண்டு ரூபாய்தான் எனக்குப் பொக்கிஷம். எங்கள் ஊரில் பன்மயம் இப்படித்தான் வளர்ந்தது. யாரும் எந்த மதமும் மாறவில்லை. இரு மதத்தாரும் அன்பைப் பரிமாறிக்கொள்ள மதங்கள் என்றைக்கும் குறுக்கே வந்ததில்லை.


                                                                         2      
                2007 ஜுன் மாதம் ஐதராபாத்தின் மக்கா மசூதியில் குண்டு வெடித்த பின்னர் ஒரு மாதம் கழித்து அங்குச் சென்றிருந்தேன். சார்மினாரிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த அம்மசூதி அடைக்கப்பட்டு கிடந்தது. சிதைவுகள் கூட அகற்றப்படாமல் இருந்ததாக நினைவு. அங்கு கிடைத்த ஒரு ஆங்கில இதழைப் புரட்டிய போது மக்கா மசூதி சம்பவம் பற்றி கவர்  ஸ்டோரியே போட்டிருந்தார்கள். சம்பவத்தினை விவரித்த அவ்விதழ் இறுதியில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைக் குற்றம் சாட்டுவதில் போய் நின்றது. குண்டு வெடிப்பு என்றால் குல்லா, தாடி வைத்துக்கொள்வதன் மூலம் மத அடையாளத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கிற முஸ்லிம்கள்தான் அதற்குக் காரணம் என்ற பொதுப்புத்தி இந்திய சமூகத்தில் மட்டுமல்ல உலகம் முழுமையும்    விரவிக்கிடக்கிறது. பாகிஸ்தானில்   மசூதிக்குள் குண்டுவெடிப்பது போல தற்போது இந்தியாவிலும் முஸ்லிம் தீவிரவாதிகள் மசூதிகளுக்குள்ளேயே குண்டு வைக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதுதான் எங்கெனும் பேச்சு. குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன் ஐதராபாத் நகரில் எராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறைப்படுகின்றனர். அந்நகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் அப்போதுதான் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்த சேக் அப்துல்கலீம் என்பவரும் அவர்களுள் ஒருவர். குண்டுவெடிப்பை நிகழ்த்த உதவியாக சிம்கார்டு ஒன்றை வாங்கி திவிரவாதிகளுக்குக் கொடுத்தார் என்பதும், 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துப் பொருட்களை சேமித்து வைத்திருந்தார் என்பதும் கலீம் மீதான குற்றச்சாட்டுகள். ஒரு பண்ணை வீட்டில் வைத்து நான்கு நாட்கள் கலீமை சித்ரவதைப்படுத்துகிறார்கள். பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டு இருமுறை நர்கோ அனாலிசிஸ் சோதனைக்கும் உட்படுத்துகிறார்கள்.

                                                                       3                                                                                               
                மலேகான் நகரில் நடைபெற்ற இரண்டு குண்டுவெடிப்புகள் (2006, 2008) ,அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு (2007) , இந்தியா- பாகிஸ்தான் நல்லுறவுச் சின்னமான சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டுவெடிப்பு (2007) , ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு (2007); இவை எல்லாவற்றிலும் சேர்த்து 121 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது, இதற்கெல்லாம் காரணம் இந்து தீவிர தேசியவாதிகள் அல்லது இந்து தீவிரவாதிகள் என்று கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்ள காரணம் சுவாமி அசிமானந்தா என்ற இந்துத்வா செயல் வீரர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாபாகுமார் சர்க்கார் தீவிர இந்துத்வா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுவாமி அசிமானந்தாவாக பெயர் மாற்றம் பெறுகிறார். அந்தமான் தீவுகளில் ஆதிவாசி மக்களிடையே பணி புரியும் இந்துத்வா அமைப்புகளுள் ஒன்றானவனவாசி கல்யாண் ஆசிரமம்என்னும் அமைப்பில் இணைந்து பணிபுரிய அவர் அந்தமான் செல்கிறார். 1993 முதல் 1997 வரை அந்தமானில் பணிபுரிந்த சுவாமி அசிமானந்தா குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தின் ­ப்ரிதாம் என்னுமிடத்தில் ஆசிரமம் நிறுவிக்கொண்டு அங்கு தங்குகிறார். அங்கு சிறுபான்மை மக்களுக்கெதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார். டிசம்பர் 1998-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தி ஒன்றைப்  பார்ப்போம்.
                கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கப்படுவதோடு அவர்கள் மீதான தாக்குதல்கள் அச்சமுதாயத்தினரின் மீது அச்ச உணர்வைப் பரப்பியுள்ளது. இப்பிரச்சினைக்கு மூலக்காரணம் இம்மாவட்டத்திற்கு அசிமானந்தாவின் வருகையும், அங்கு அவர் ஏற்படுத்திய பஜ்ரங்தள் கிளையுமே
                கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்கள் தாக்கப்பட்டன, எரிக்கப்பட்டன, பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் தொடர் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் நரேந்திர மோடியின்  பி.ஜே.பி. அரசு அசிமானந்தா மற்றும் பஜ்ரங்தள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நிகழ்ச்சிகளில் நரேந்திரமோடியும், அசிமானந்தாவும் ஒரே மேடையில் தோன்றினர்
                                                                                                                               
                                                                            4
                ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு வரை இந்தியா என்ற ஒற்றை தேசம் என்றைக்குமே இருந்ததில்லை. அதை ஒரு துணைக்கண்டம் என்று மட்டுமே பள்ளிக்கூட புத்தகங்களில் படித்திருக்கிறோம். பல இனங்கள், பல பண்பாடுகள்,  பல  மொழிகள், பலகலாச்சாரங்கள் கொண்ட பகுதிதான் இந்தியத்துணைக் கண்டம்.  இந்தியாவில் மொத்தம் 11 மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த 211 மொழிகள் பேசப்படுவதாக மானிடவியல் துறைப்பேராசிரியர் பக்தவத்சலபாரதி மதிப்பிடுகிறார். ஏ.எல்.பாஷ‌ம் கூற்றுப்படி முண்டாமொழி பேசுவோர் (ஆஸ்திரிய - ஆசிய மொழி) பழங்கற்காலத்திலேயே இந்தியாவிற்குள் வந்தடைந்தனர். அதை அடுத்து திராவிட மொழி பேசுவோர் புதுக்கற்காலத்தில் இந்தியாவிற்குள் வந்தனர். இறுதியாக இந்திய -ஆரிய மொழி பேசும் ஆரியர்கள் கி.மு.2000 வாக்கில் வந்தனர். சுவாமி விவேகானந்தரும், இராமகிருஷ்ண பரமஹம்சரும் இந்திய நாட்டின் பன்மயக்கலாச்சாரத்தை நன்கு அறிந்திருந்தனர். அதனால்தான் கடவுளைப்பற்றிய இந்துக் கருத்துகளுக்கும், முஸ்லிம் அல்லது கிறித்துவக் கருத்துகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஜலத்துக்கும், தண்ணீருக்கும் இடையில் உள்ள வேறுபாடுதான் என இராமகிருஷ்ணரால் கூற முடிந்தது. இந்து மதத்தின் பெருமைகளை உலகம் முழுவதும் பறைசாற்றிய சுவாமி விவேகானந்தர் உயர்ஜாதி ஆதிக்கத்தையும் பெண்கள் ஒடுக்கு முறையையும் தீவிரமாகத் தாக்கியிருக்கிறார். ஏழை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்ற சாதுக்களையும், பிராமணர்களையும் “சூத்திரர்களின் எழுச்சி அகற்றும் என சூளுரைக்கிறார்.         

     1923-ல் வி.தா. சவர்க்கார் “இந்து என்பவர் யார்?” என்னும் நூலை வெளியிடுகிறார். இந்துத்துவாவை ஒத்திசைவான, வன்மையான கருத்தமைப்புகள் கொண்ட தத்துவமாக அவர் முன் வைத்தார். 1925-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நிறுவப்பட்டது. அதன் தலைவரான சுதர்சன் ஒரு பேட்டியில் “பல மலர்கள், ஒரு மாலை; பல ஆறுகள், ஒரு கடல்; என இந்து தேசியத்தை வர்ணிக்கிறார். அதாவது சுதர்சனின் கூற்றுப்படி எல்லா மலர்களும் இந்துத்வா என்னும் ஒரே மாலையாகத் தொடுக்கப்படும்; எல்லா ஆறுகளும் ஒரே இந்துக் கடலில் சங்கமமாகும். இந்தியாவில் கூட்டுக் கலாச்சாரத்தை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். நோக்கமல்ல என்று சுதர்சன் திட்டவட்டமாக கூறுகிறார். இந்தியாவில் ஒரு கலாச்சாரம், இந்துக் கலாச்சாரம் மட்டுமே இருக்க முடியும். ராமரை கடவுளாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் நாட்டின் வீர புரு­னாக எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் சுதர்சன். 1971 ஜூன் 20 தேதியிட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வாரப்பத்திரிக்கையான ஆர்கனைசரில் தரப்பட்டுள்ள மேற்கோளையும் பார்ப்போம்: “முஸ்லிம்கள் இராமரைத் தம் வீரபுருஷராகக் கருதட்டும், வகுப்புவாதப் பிரச்சினைகள் எல்லாம் முடிந்துவிடும்

     1925-ல் ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப்பட்டதிலிருந்தே அதன் கலாச்சாரத் திட்டத்தில் இராமர் முக்கியமான இடத்தை வகிக்கிறார். இராமாயணம் நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நடைபெற்ற இதிகாசப் போர். அப்போரில் இராமர் இராவணனை முறியடித்ததாகச் சொல்லப்படும் விஜயதசமி நாளை ஹெட்கெவார்  தேர்ந்தெடுத்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொடங்கியது திட்டமிட்ட செயல். 1927-ம் ஆண்டு இராம நவமி அன்றுதான் அவ்வியக்கத்திற்கு ஆர்எஸ்எஸ் என்ற பெயர் சூட்டப்பட்டது. காவிக்கொடியும்  அன்றுதான் முடிவு    செய்யப்பட்டது.   அது   நிறத்திலும்    வடிவத்திலும் இராமருடைய   கொடி என்று  விளக்கப்பட்டது. எனவே ஆர்எஸ்எஸ் ஆரம்பத்திலிருந்தே தன் சித்தாந்தத்தையும், தன் ஒற்றைக் கலாச்சாரத்தையும்   சுட்டிக்காட்டுவதற்கும், உயர்த்திப்   பிடிப்பதற்கும் இராமரைப் பற்றிய பழங்கதைகளைப் பயன்படுத்திக் கொண்டது. இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்-ன் நெடுங்கால இலட்சியம். அயோத்தியில் இராமர் கோவில் என்பது அதன் கனவு. இக்கனவு இலட்சியங்களை அடைவதற்கான இயந்திரங்கள்தான் பஜ்ரங்தள், வி.எச்.பி. மற்றும் ஏராளமான துணை அமைப்புகள். அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டது. அதன் எதிர்வினையாக நாடு முழுவதும் இந்து - முஸ்லிம் வகுப்புக் கலவரங்கள் வெடித்துக் கிளம்பின. முஸ்லிம்களும் எதிர்வினை புரிந்தார்கள். முப்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மேலும் கலவரம்.

                                                                          5
     2006-ம் ஆண்டு வாரணாசியில் உள்ள சங்கட்மோஷ‌ன் கோவிலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து “குண்டுவெடிப்புக்குப் பதில் குண்டுவெடிப்பு என்றக் கொள்கையை கடைப்பிடிக்க  அசிமானந்தா  உறுதி ஏற்கிறார். ஆர்எஸ்எஸ்-ன் செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் என்பவரும், சுனில்ஜோசி என்பவரும் அசிமானந்தாவை சந்தித்த பின்பு நாச வேலைகள் செய்வதற்கான பொறுப்பு சுனில்ஜோசிக்குத் தரப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்தான் சுனில்ஜோசி என்பதை நாம் நினைவு கூர வேண்டும். எந்தெந்த இடத்தில் நாசவேலைகள் நடத்தப்பட வேண்டும் என்று சுவாமி அசிமானந்தா வழிகாட்டுகிறார்.

     மாலேகானில் மக்கள் தொகையில் 80 சதவிகிதம் முஸ்லிம்கள் என்பதாலும், 1947 பிரிவினையின் போது ஐதராபாத் நிஜாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்பதாலும், அஜ்மீர் ஷரீஃப் தர்காவிற்கு இந்துக்கள் அதிகம் வருகை தருவதை தடுப்பதற்காகவும் இவ்விடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நாசவேலைகளும் நடந்தேறின.

     மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக அபிநவ் பாரத் என்னும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்கியாசிங்கை மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு சிறப்பு போலீஸ் படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே 2008-ல் கைது செய்கிறார். அதன் பின் முன்னாள் இராணுவ அதிகாரி சிறிகாந்த் புரோகித், ஜம்மு சாரதா பீடத்தைச் சேர்ந்த தயானந்த பாண்டே மற்றும் பலரையும் கார்கரே கைது செய்கிறார். இவர்களை விசாரிக்கும் போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுனில்ஜோசி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப்டாங்கே, அசிமானந்தா, பாரத் ரித்தேஸ்வர் ஆகியோர் முக்கிய சதிக்காரர்கள் எனத் தெரியவருகிறது. இவர்கள் எல்லோரும் பல்வேறு இந்துத்வா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இதனிடையில் 2008 நவம்பர் 26 மும்பைத் தாக்குதலில் கார்கரே கொல்லப்படுகிறார். முக்கியக் குற்றவாளியான சுனில்ஜோசி மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். (சுனில் ஜோசி கொலை வழக்கிலும் பெண் சாமியார் பிரக்கியாசிங் கைது செய்யப்பட்டுள்ளார்). அசிமானந்தா தலைமறைவாகிறார். 2010 நவம்பர் 19 அன்று சுவாமி அசிமானந்தா போலீசில் மாட்டுகிறார். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18 அன்று டெல்லி நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்   கொண்டு   ஒப்புதல்   வாக்குமூலம்      தருகிறார். அசிமானந்தாவின்     ஒப்புதல்   வாக்குமூலம்   நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யாருடைய தூண்டுதலோ, நிர்பந்தமோ இல்லாமல் எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாக அசிமானந்தா குறிப்பிடுகிறார்.

                                                                         6                          
     ஐதராபாத்தின் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பல நூறு முஸ்லிம் இளைஞர்களுள் ஒருவரான சேக் அப்துல்கலீம் தன் இளமையையும், எதிர்காலத்தையும் சிதைத்துப் போட்ட 18 மாத சிறைவாசத்திற்குப் பிறகு குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகிறார். சிறையில் உள்ள தன் சகோதரருக்கு செல்போன் கடத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் கைது செய்யப்படும் கலீம், ஐதராபாத்தில் உள்ள சன்சல்குடா சிறையில் அக்டோபர் 2010 வாக்கில் அடைக்கப்படுகிறார். (இக்குற்றச்சாட்டை கலீம் மறுத்திருக்கிறார்) கலீம் சிறை வைக்கப்பட்டுள்ள அதே கொட்டடியில் அசிமானந்தாவும் நவம்பர் 2010-ல் அடைக்கப்படுகிறார். சிறைவாசத்தின் போது அசிமானந்தாவுக்கு பல சிறு சிறு உதவிகளை கலீம் செய்கிறார். மெக்கா  மசூதி குண்டு வெடிப்புக்குப் பின்னர் தான் பட்ட வேதனைகளை கலீம் அசிமானந்தாவிடம் தெரிவிக்க, சுவாமி கண்ணீர் விட்டதாக கலீம் தெரிவிக்கிறார். மக்கா மசூதி குண்டு வெடிப்பில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு தன் சொத்துக்களையும், சேமிப்பையும் தரப்போவதாகக்கூட அசிமானந்தா கலீமிடம் தெரிவிக்கிறார். அசிமானந்தா பற்றிய விபரங்கள் பின்னர்தான் கலீமுக்குத் தெரிய வருகிறது. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கலீம் தன்னடக்கத்துடன் கூறுகிறார்: “அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்திற்குக் காரணம் நான் அல்ல, எல்லாம் இறைவனின் செயல்.

     ஒற்றைக் கலாச்சாரத்தை நிறுவவும், பன்மயத்தை அழித்தொழிக்கவும், இந்து நாட்டை அமைக்கவும், இராமர் கோவிலைக் கட்டவும் சூளுரைத்துக் கிளம்பிய காவிப்படைகள் கலீமின் முன்னால் அசிமானந்தா வடித்த கண்ணீர் துளியால் சக்தி இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன.
          
                                                                           7
     பிள்ளையார் சிறுபிள்ளைப் பிராயத்திலேயே சிவபெருமான் மற்றும் தேவ கனங்களோடு போர் புரிந்ததை சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்தேன். கடந்த இருபது ஆண்டுகளாக எங்கள் ஊரில் நடக்கும் பிள்ளையார் ஊர்வலம் மிக வலிமையாக மாறிப்போய் விட்டது. பிள்ளையாரைச் சுற்றி நடந்து வரும் பல ஆயிரக்கணக்கான போலீசார் குறித்து நான் சொல்லவரவில்லை. ஊர்வலத்தை மையப்படுத்தி ஊரில் நடக்கும் மதக்கலவரங்களையும், மோதல்களையும் பற்றியே நான் குறிப்பிடுகிறேன். தலைவரோ, அம்மாவோ யார் ஆண்டாலும் ஊர்வலத்தின் போது ஊரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் இன்னமும் குறைந்தபாடில்லை. மக்களின் அச்ச உணர்வும் அப்படியேதான் உள்ளது. சந்தனக்கூடு திருவிழாவின் போது முன்பு போல் ஊர் கலகலப்பாக இல்லை. தர்காவில் கூட்டம்   இல்லை.   மதம்  ஊரை  இரண்டாகப்     பிளந்து   போட்டிருக்கிறது.   
   பிரான்ஸ் நாட்டில் ஒரு சிறைச்சாலை கட்டப்பட்டது. சுற்றியுள்ள சிறையின் அறைகளைக் கண்காணிக்க நடுவில் உயரமான கோபுரம் ஒன்று கட்டப்பட்டது. கோபுர உச்சியிலிருந்து காவலர்கள் சிறைகளைக் கண்காணிக்க முடியும். ஆனால் சிறையில் இருப்பவர்களால் காவலர்களைக் காணமுடியாது. இதுவே பாசிச அதிகாரத்தின் வடிவம் என்று ஃபூக்கோ கூறுவார். மதவாதிகள் நம்மைச் சுற்றி விதைக்கும் வெறுப்பும் பாசிசத்தின் வடிவம்தான் என்பதை நாம் உணர வேண்டும். இந்தியச் சூழலிலும் சரி சர்வதேசச் சூழலிலும் சரி பாசிசத்தை எதிர் கொள்ள பன்மைக் கலாச்சாரம், பன்மை அடையாளம் இவைகளை முன்னிறுத்துவதுதான் இன்றையத் தேவையாக இருக்கிறது.

     கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவ வழக்கில் தனி நீதிமன்றம் 31 பேருக்கு தூக்கு தண்டனையை அளித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட 95 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வி.எச்.பி. கோரியிருக்கிறது. நீதிமன்றத்தால வழங்கப்பட்டுள்ள தண்டனைதான் உண்மையானது, நேர்மையானது, நியாயமானது என்றால் ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் விதத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின உயிர்களைக் காவு வாங்கிய இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தண்டனை என்ன?
                       ----------------------------

அம்ருதா,ஏப்ரல்-2011