Sunday 13 November 2011

கேள்வியாகும் நெய்தல் வாழ்க்கை

   இப்போது நீங்கள் வாசிக்கப்போகும் இந்தக்கட்டுரை இந்த வருடம்(2011)பிப்ரவரியில் எழுதப்பட்டது.ஆனால் இன்றும் இது பொருந்தும்.யார் கண்டது?தமிழனின் தலைவிதிப்படி அடுத்த 50 ஆண்டுகளுக்கும் கூட இது  பொருந்தலாம்!!

                                            
                                  
                மீண்டும் இரண்டு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுக்கொண்டே இருக்கும் விவசாயிகளைப் போல தங்களின் வாழ்வாதாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களிடமும், அன்னிய நாட்டிடமும் இழந்து வரும் தமிழக மீனவர்கள் தங்களது பூர்வீக நிலமான கடலிலிருந்தும் பிடுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். புலிகளுக்கு உதவுகிறார்கள், போதைப்பொருட்கள் கடத்துகிறார்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்றெல்லாம் கடந்த காலங்களில் மீனவர்கள் அனுபவித்தக் கொடுமைகள் இன்னமும் அப்படியே தொடருகின்றன. இருபது கடல் மைல்களும், அதற்கும் குறைவாகவும் இடைவெளியுள்ள தமிழகம் மற்றும் இலங்கையின் கடற்கரைகளில் மீனவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களில். உலகின் மீன் வளம் மிகுந்து காணப்படும் பகுதிகளில் ஒன்றான பாக்சலசந்தி, மன்னார் வளைகுடாவில் பெருவாரியான மீன் வளம் பெரும் முதலாளிகளின் மீன்பிடி டிராலர்களால் ஏற்கனவே மிக மோசமாக சுரண்டப்பட்டுவிட்ட நிலையில் எல்லைக்குள்ளாக மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே செய்யும். தமிழக, இலங்கை மீனவர்கள் கடல் எல்லைகளைப் பார்ப்பதில்லை. கடல் எல்லைகளை தேசங்கள் தங்கள் சுய நலன்களுக்காக ஏற்படுத்திக்கொண்டவை. இன்னும் சிறிது காலத்தில் சந்திரனிலும், செவ்வாயிலும் கூட வேலி போட்டு வளங்களை சுரண்டப்போகும் நாடுகள்தான் இப்புவியின் தேசங்கள். இத்தேசங்களை ஆள்வோரின் சுயநலத்தாலும், சூழ்ச்சியாலும்தான் எல்லைக்கோடுகள் உருவாக்கப்படுகின்றன அல்லது மாற்றப்படுகின்றன. அவ்வாறு வரையப்படும் எல்லைக்கோடுகள் எதிர்காலத்தில்  எத்தனை ஆயிரம் மக்களின் வாழ்க்கையை நாசம் செய்யப்போகின்றன என்பதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை இருக்க முடியும்? எல்லைக்கோடு பாராமல் மீன்பிடி தொழில் செய்த தமிழக, இலங்கை தமிழ் மீனவர்கள் மீன் வளத்தை மட்டுமல்லாமல் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றை வளர்த்தார்கள். வளமான தமிழ் கலாச்சாரம் தமிழ் நிலத்திலும், இலங்கையின் வடக்கு-கிழக்கிலும் செழித்தோங்கியது.

                தமிழகத்தின் மீது மட்டுமல்ல, இந்தியாவின் மீதும் இலங்கைக்கு எப்போதுமே சந்தேகக் கண்தான். ஆத்மார்த்தமான நட்புறவு அல்ல அது. இலங்கையின் வரலாற்றுப் போக்கில் பல முக்கியமான, ஆபத்தான தருணங்களில் அதன் இறையாண்மை காக்க இந்தியா உதவியுள்ளது. 1971-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தீவிர இடது சாரிகளால் அந்நாட்டிற்கு அச்சுறுத்தல் எழுந்த போது அந்நாட்டின் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக எழுப்பிய அபயக் குரலுக்கு ஓடோடிச்சென்று உதவியது இந்தியா. சில இராணுவ ஹெலிகாப்டர்களையும், கடற்படைக் கப்பல்கள் சிலவற்றையும் கூட அங்கு அனுப்பியது. 55 மில்லியன் டாலர் அளவுக்கு இராணுவ உதவிகளை இந்தியா செய்ததாக அன்றைய நாளேடுகள் மதிப்பிட்டன. சீனாவும் இராணுவ உதவிகளை செய்தது. ஆனாலும் இந்திய-சோவியத் நட்புறவு ஒப்பந்தத்தை சந்தேகத்தோடு நோக்கியது இலங்கை. உடனே இலங்கையை மகிழ்விப்பதற்காக, குளிர்விப்பதற்காக அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங்கை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா.  

                பாகிஸ்தானோடு நடைபெற்ற போரின் போதும் வங்காளதேசம் என்ற நாடு உருவாக்கப்பட்ட விதம் குறித்து இலங்கை திருப்தியடையவில்லை. வங்கதேச விவகாரம்  இந்தியாவால் உருவாக்கப்பட்ட தேவையற்ற ஒரு சர்ச்சை எனக் கருதிய இலங்கை, அப்போரினால் ஏற்பட்ட மனிதகுல இடப்பெயர்வும், அதனையயாட்டி இந்தியாவிற்கு             ஏற்பட்ட இன்னல்களும் சர்வதேச சமூகத்தால்தான் தீர்க்கப்பட வேண்டுமேயயாழிய தனியயாரு நாடால் (இந்தியாவால்) அல்ல என்றும் கருதியது. அதனால்தான் கிழக்கு வங்காளத்திலிருந்து அன்னியத் துருப்புகள் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டுமென்று .நா.அவை தீர்மானம் கொணர்ந்த போது அதை இலங்கை ஆதரித்தது. 1972 மார்ச் மாதம் வரை வங்காளதேசத்தை இலங்கை அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

                இத்தகைய ஒரு நல்லெண்ணமற்ற உறவுகளுக்கு இடையில்தான் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்ட இந்தியா ஏராளமான பொருளுதவிகளையும் செய்தது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் பற்பல தொழிற்சாலைகளை அங்கு நிறுவுவதிலும் இந்தியா உதவியது. அதாவது  நண்பேன்டா! நான்தான் உன் நண்பேன்டாஎன்று இந்தியா நடந்து கொண்ட விதம் நமக்கு சிரிப்பை மட்டுமல்ல, வேதனையையும் வரவழைக்கும். நமது அண்டை நாடுகளில் இலங்கை தவிர மற்ற எந்த நாடும் இவ்வளவு உரிமைகளை நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டதில்லை. இதற்கெல்லாம் ஒரே காரணம் சர்வதேசக் கடல் வணிகப்பாதையில் இலங்கை கேந்திரமான இடத்தில் அமைந்திருப்பதாலும், சீனாவிடமிருந்து அது பெற்றுள்ள அபரிதமான கவனத்தினாலும்தான்.

               
                1948-ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையை இலங்கை பறித்தபோது இந்தியா நடந்து கொண்ட விதம் இலங்கைக்கு மிகுந்த தைரியத்தை அளித்தது. தமிழர்களை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தின் உச்சக்கட்டம்தான் 2009-ல் நடந்த மிகப்பெரும் தமிழினப்படுகொலைகள். 10 லட்சம் மலையகத் தமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கிய இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவில்லை. அடிமை வணிகத்தின் போது கப்பல் கப்பலாக ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து நீக்ரோக்களை அமெரிக்கா கொண்டு சென்று அந்த நாட்டை நிர்மாணித்த பிறகு கருப்பர்களை மீண்டும் ஆப்பிரிக்காவிற்கே திருப்பி அனுப்புவது போன்றதுதான் இக்குடியுரிமை ரத்து. கங்காணிகளால் ஆடு, மாடுகள் கிடைக்கு அழைத்துச் செல்வதுபோல அழைத்துச் செல்லப்பட்ட திருநெல்வேலி, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்ட மக்கள்தானே மலையகத் தமிழர்களும் அவர்களது சந்ததிகளும். “கண்டிச்சீமைஎன ஆசை வார்த்தை காட்டி 1823 முதல் தொடங்கி 1939 வரை நீடித்த இந்த அடிமைக் குடியேற்றத்தில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கண்டிக்காடுகளில் அட்டைப்பூச்சி கடிக்கும், மலேரியாவுக்கும், பட்டினிக்கும் உயிரை விட்டிருப்பார்கள். புதுமைப்பித்தனின் துன்பக்கேணியை வாசித்தால் அதன் ரணம் நமக்குப் புரியும். இலங்கை நாட்டை நிர்மாணிக்கும் போதும், தேயிலைத் தொழிலை வளர்த்து அந்நாட்டின் பொருளாதாரத்தை சிறக்கச் செய்த போதும் உயிர்நீத்த பல்லாயிரம் தமிழர்களின் உயிரை யாரடா தருவது என இலங்கை அரசைப் பார்த்து கேட்காமல், குடியுரிமை ரத்தை மெளனமாக வேடிக்கைப் பார்த்தது இந்தியாவின் மத்திய அரசு. தமிழ்நாட்டின் மாநில அரசு அவ்வப்போது முக்கி முனங்கியது, தற்போது செய்து கொண்டிருப்பது போல.      
       இந்திய -  சீனப்போரின் போதும், அதன் பிறகும் தனிமைப்பட்டுப் போயிருந்த இந்தியாவிடம் நண்பனைப் போல நடித்த இலங்கை 1964-ல் சாஸ்திரி- சிறிமாவோ ஒப்பந்தத்தை இந்தியாவின் மீது திணித்தது.ஏறத்தாள ஆறு இலட்சம் மலையகத் தமிழர்களை,  அவர்களது குடும்பங்களைப் பிரித்து இந்தியாவிற்கு மூட்டைக் கட்டியது. இச்சம்பவங்களின் மூலம் இந்தியாவின் விவேகமின்மையை மிகத் தெளிவாக புரிந்து வைத்திருந்தது இலங்கை. எனவேதான் இந்த நிமிடம் வரை இலங்கை இந்தியாவிடம் செலுத்தும் நட்பு வெறும் காகிதப்பூப்போல அலங்காரமாய் காட்சித்தருகிறது.   மன்மோகன்சிங்கும், எஸ்.எம்.கிருஷ்ணாவும், நிருபமாராவும், சிவசங்கர் மேனோனும் அப்பூவைக் கண்டு வியந்து, வியந்து அதிசயிக்கிறார்கள்.

                இக்காகிதப்பூ எப்படி உருவானது என்று பார்ப்பதற்கு முன்னால் கச்சத்தீவு விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு ஆரம்பக் காலங்களில் எப்படி அமைந்தது என்று பார்ப்போம். பாக் நீரிணையில் அமைந்திருக்கும் கச்சத்தீவு இலங்கையின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தெற்கேயும், ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் அமைந்துள்ள, 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சிறுதீவு. தமிழக மீனவர்கள் அங்கே அடிக்கடி செல்வது வழக்கம். தங்கள் வலைகளை உலர்த்தவும், மீன்களைக் காயவைக்கவும் அவர்கள் இத்தீவைப் பயன்படுத்தி வந்தார்கள். புனித அந்தோணியார் தேவாலயம் என்ற கத்தோலிக்க தேவாலயம் அங்கே இருக்கிறது. தங்களைப் புயலிலிருந்தும், கடல் கொந்தளிப்பிலிருந்தும் புனித அந்தோணியார் காப்பதாக மீனவர்கள் நம்புகிறார்கள். இந்த தேவாலயத்தை 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவரான சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் நேர்ந்துகொண்டு கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் இத்தேவாலயத்தில் நடக்கும் ஒரு வார கால திருவிழா காலத்தில் ராமேஸ் வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்திலிருந்து ஒரு கத்தோலிக்க பாதிரியார் இங்கு வந்து பூசை வைப்பார் என்கிறது இராமநாதபுரம் கெஜட்டியார்.

                கச்சத்தீவு இராமநாதபுரம் ராஜாவின் ஜமீனின் ஒரு பகுதியாக 1880 முதல் 1949 செப்டம்பர் 7 வரை, அதாவது ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படுவது வரை இருந்தது. ராஜா அந்தத் தீவைக் கட்டுப்படுத்தியதோடு, அதன் உரிமையாளராகவும் இருந்திருக்கிறார். அவருக்குக் கீழிருக்கும் ஜமீனுக்கு அவர் வழங்க வேண்டிய பெஷ்குஷ் (குத்தகைத் தொகை), இந்தத்தீவு அவருக்குச் சொந்தம் என்ற வகையிலேயே கணக்கிடப்பட்டது. இந்தத்தீவைச் சுற்றி மீன்பிடிக்கும் உரிமை, மேய்ச்சல் உரிமை, பிற காரியங்களுக்குப் பயன்படுத்தும்   உரிமை    ஆகியவற்றை அவர் குத்தகைக்கு விட்டிருந்தார். அது பற்றிய குறிப்புகள் இராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ளது. 1947 வரை அவர் வரி வசூலும்  செய்து வந்தார். அதற்குப்பிறகு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் படி இந்த ஜமீன் சென்னை மாகாணத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

                1947 – 48-ல் இராமநாதபுரம் திவானாக இருந்த வி.பொன்னுச்சாமியின் பெயரில் கச்சத்தீவின் மீது மட்டும் ஒரு குத்தகை ஒப்பந்தத்தை செய்தார் முகமது மீரசா மரைக்காயர். இந்த ஒப்பந்தத்தில் ஒரு வரைபடம் இருக்கிறது. இராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமான சங்குப்படுகை அந்த  வரைபடத்தில் இடம் பெற்றிருக்கிறது. கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது என்பதற்கு அசைக்க முடியாத    ஆதாரமாக   இந்த வரைபடம்திகழ்கிறது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாரதிய ஜனதாக்கட்சியின் முன்னாள் தலைவருமான ஜனாகிருஷ்ணமூர்த்தியும், இராமநாதபுரம் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினரான முகமதுஷெரீப்பும் கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்குத்தான் சொந்தம் என்பதை ஏராளமான ஆதாரங்களுடன் நிறுவுகிறார்கள். கச்சத்தீவு இராமநாதபுரம் ராஜாவுக்கே சொந்தம் என்று சென்னை உயர்நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது.


     ஜமீன்தாரி முறை இந்தியாவில் ஓழிக்கப்பட்ட பின்பு எப்படி ஜமீன்தாரிகள் அரசின் சொத்தானதோ அது போலவே கச்சத்தீவும் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டு இந்திய அரசின் சொத்தானது. ஆனால் கொடிகார என்ற இலங்கை அறிஞர் தான் எழுதிய  “இந்திய-இலங்கை உறவுகள் என்னும் ஆய்வுக் கட்டுரையில் இரண்டாம் உலகப் போரின் போது சிலோன் அரசாங்கத்தின் கப்பல் படையின் சுடு இலக்காக கச்சத்தீவு இருந்தது எனக்குறிப்பிட்டு குட்டையை குழப்பினார். அதற்கான ஆதாரம் எதையும் அவர்   தரவில்லை. ஆனால் நம் பிரதமர் நேரு குழப்பியதோ அதை விட மோசம்.  “ஜமீன்தாரி முறை வேறு, இறையாண்மை வேறு. கச்சத்தீவைப் பொறுத்த வரை நாம் உண்மையான இறையாண்மையை அதன் மேல் செலுத்தவில்லை. அதாவது நேரு சொல்ல வந்த செய்தி இதுதான்:  “கச்சத்தீவு நமக்கு உரிமை இல்லை. ஒரு வேளை இந்தியாவிற்கு கச்சத்தீவின் மேல் இறையாண்மை இல்லாதிருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கு என்றும் உண்டு என்ற உண்மையை வரலாறுதான் நம் ஆட்சியாளர்களின் மேல் ஓங்கி அறைய வேண்டும்.

     1956 முதல் 1967 வரை இந்தியாவும், இலங்கையும் மாறி மாறி தங்களது கடல் எல்லைகளை விரிவுப்படுத்திக் கொண்ட  சம்பவங்களும் உண்டு. இரு நாடுகளின் ஒருதலைப் பட்சமான இம்முடிவுகள் என்றைக்குமே தீர்வை நோக்கி செல்லாது என்பது இரு நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும் எல்லைக்கோடு பிரச்சினைகள்தான் நம் அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இனிப்பாயிற்றே.இந்த விளையாட்டு திகட்டிப்போய்தான் காகிதப்பூ உருவாக்க முனைந்தார் அன்னை இந்திரா.

     1973 ஏப்ரலில் இலங்கையில் மூன்று நாட்கள் பயணம் செய்தார் இந்திராகாந்தி அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக. காகிதப்பூ தயாரானது.  “கச்சத்தீவு என்பது ஒரு தீவே அல்ல. ஒரு பாறை மட்டும்தான் என்று நமது பிரதமர்  திருவாய் மலர்ந்தார். சிறிமாவோ 1974 ஜனவரியில் டெல்லிக்கு வந்தார். கடலெல்லை குறித்து  “மிகவும் திருப்திகரமான முன்னேற்ற‌ம் ” ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 1974 ஜூன் 26-ல் காகிதப்பூ முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டது. கச்சத்தீவு அன்றைய தினம்தான் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தமிழக மீனவர்களும், மார்ச் மாதத்தில் நடைபெறும் அந்தோணியார் ஆலயத் திருவிழாவிற்கு தமிழக பக்தர்களும் கச்சத்தீவு நோக்கி வரலாம், அதற்கு இலங்கை அரசின் அனுமதி தேவையில்லை என்றும் ஒப்பந்தம் கூறியது. இதைச் சொல்லித்தான் தமிழகத்தின் வாயை மத்திய அரசு அடைத்தது. கச்சத்தீவுக்கும் மேற்காக ஒரு கடல் மைல் தொலைவில் புதிய எல்லைக்கோடு கடலில் உருவாக்கப்பட்டது.
  1975 ஜூன் 25-ல் இந்திரா அவசரகால நிலையைக் கொண்டு வந்தார். உற்ற தோழியைப் பின் தொடர்ந்தார் சிறிமாவோ. இலங்கையிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976 மார்ச் 24 அன்று கடலெல்லை பற்றி மற்றுமொரு ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்டது.  தங்கள் தங்கள் கடல் பகுதிகளில் நிபந்தனைகளற்ற, முழுமையான இறையாண்மையை இரு நாடுகளுக்கும் இவ்வொப்பந்தம் வழங்கியது. அதாவது கச்சத்தீவின் மீது முழு இறையாண்மையை இலங்கை பெற்றது. இப்படியாகத்தான் புதிய கடலெல்லை தமிழக மீனவர்களின் லெட்சுமணக்கோடாக மாறியது.
     தங்களின் உழைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னியச்செலாவணி ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் இருப்பை இலங்கை அரசும், மத்திய அரசும், தமிழக அரசும் கூடவே இயற்கையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.
     போருக்குப் பிந்தைய  சூழலில் இலங்கை நாடு இந்திய, சீன அரசுகளின் காலனியாக மாறிப்போனதுதான் மிச்சம். இலங்கைத் தீவை இந்திய, சீன கார்ப்பொரேட் கம்பெனிகள் கூறுபோட்டுக்கொள்ளத் தொடங்கிவிட்டன. புதுப்புது துறைமுகங்களை சீனா வடிவமைக்கிறது. இலங்கைக் கடற்பரப்பின் வலிமையான மீன் வளம் இலங்கை, சீன அரசின் கண்களை குருடாக்குகிறது. ஆழமான கடலில் நீண்ட நாட்கள் தங்கி மீன் பிடிக்கும் நவீன ரகப் படகுகள் இலங்கை வசம் ஏராளம் உள்ளன. போரின் விளைவால் மிகவும் இரந்துப் போய்விட்ட  ஈழத்தமிழர்களை மீன்பிடித் தொழிலில் ஈடுபடச்செய்ய மறுக்கும் இலங்கை அரசு ஏராளமான சீனர்களை மீன் பிடித்தொழிலில் இறக்கியுள்ளது. தங்களைத் தாக்க வரும் இலங்கைக் கடற்படை வீரர்களுடன் சீனர்களும் தென்படுகிறார்கள் எனக்கூறும் தமிழக மீனவர்களின் கூற்றை இங்கு கவனிக்க வேண்டும். நமக்கான ஒரே தீர்வு 1974, 1976- களில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தல் மட்டுமே. அதன் பின்னர் நமது மீனவர்களின் நலன்கள் பாதிக்கப்படாதவாறு புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளலாம். அப்புதிய ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இந்தியாவின் இறையாண்மையின் கீழ் இருக்கும்.

     நேரு தன் மகள் கூறியது போல கச்சத்தீவு என்பது ஒரு பாறைதான் எனக்கருதி அதன் மீதான இறையாண்மை குறித்து கருத்துத் தெரிவித்திருக்கலாம். இந்தியாவின் பாதிப் பரப்புக்குப் பரந்திருந்த எல்லா ஜமீன்தாரிகளுக்கும் கச்சத்தீவு பற்றிய தனது கருத்தை நேரு ஒப்புக்கொள்வாரா?

     இந்திய ஆட்சியாளர்கள் இறையாண்மை குறித்துப் போடும் பல வேடங்களை நாம் பார்க்கலாம். ஸ்ரீநகரின் லால்செளக் சதுக்கத்தில் இந்தியக் கொடியை ஏற்ற முயன்ற இளைஞர்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியபோது எதார்த்தமாக நடந்து கொண்ட இந்திய ஆட்சியாளர்கள், தனது நாட்டு  மீனவர்களை வேற்று நாட்டு கடற்படை ஒன்று கொன்று கொன்று போடும் போது தனது இறையாண்மை நிர்வாணப்படுத்தப்படுவதை உணராமல் மீண்டும் மீண்டும் அதையே எதார்த்தம் என்றும், நட்புறவு என்றும், ஒப்பந்தங்கள் மீறப்படக்கூடாது, மீனவர்கள் எல்லை மீறக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்களானால் நம் நாட்டை ஆள்வோருக்கு அடிப்படை அறப்பண்புகள் இல்லை என்றும், நீதி நெறிகள் தெரியாது என்றும் அர்த்தம். ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனங்களினால்தான் நமது கடலோர புஷ்பவனங்கள் ஒவ்வொரு மலரையும் பேடித்தனமாக இழந்து கொண்டிருக்கின்றன.
                            ---------------------------

-தீராநதி, மார்ச்,2011