Wednesday 2 November 2011

மகிந்தவை வெல்லப்போகும் நீதி

என் தாய் நாட்டிற்காக தூக்கு தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்என்பதுதான் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சமீபத்தியப் புலம்பல். அதற்கான காரணமும் இருக்கிறது. இலங்கையில் 2009-ல் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு ஐ.நா அமைத்திருந்த குழு தனது அறிக்கையில் இலங்கை அரசு தமிழ் மக்களைப் படுகொலை செய்தது என அப்பட்டமாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. சர்வதேச சமூகம் தன் மீது விசாரணைகளைத் தொடங்கிவிட்டது என்ற பயம்தான் மகிந்தவை அப்படிப் புலம்ப வைத்திருக்கிறது. ஐநா குழு தனது 196 பக்க அறிக்கையை பொதுச் செயலர் பான்-கி-மூன்னிடம் 12.04.2011 அன்று அளித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளை சற்றும் லட்சியம் செய்யாத ஐநா, போர் முடிந்து 13 மாதங்கள் கழித்துதான் மேற்சொன்ன ஆலோசனைக் குழுவை நியமித்தது. போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் அதிகாரம் அதற்கில்லை. மாறாக போர்க் குற்ற விசாரணைகளை எவ்விதம் முன்னெடுத்துச் செல்வது என ஐநாவிற்கு ஆலோசனை வழங்கும் பொருட்டுதான் இக்குழு அமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இலங்கை அரசு ஆதரவைப் பெற்றிருக்க, மேற்குலக நாடுகளின் மனித உரிமைப் போராளிகள் சிலரின் உதவியுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பலனாகவே இக்குழு உருவானது. இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி தாரூஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீபன் ராட்னர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இக்கட்டுரை எழுதப்படும்வரை ஐநா அவ்வறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அறிக்கையின் சுருக்கம் மட்டும் ஊடகங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

                இலங்கை அரசு நடத்தியது ஒரு இனப்படுகொலை என அறிக்கை பகிரங்கமாகக் குற்றம் சாட்டாதது குறித்து நமக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. போரின் கடைசி மாதங்களில் அரசு நடத்திய மிக மோசமான மனித உரிமை மீறல்களை அறிக்கை பட்டியலிட்டுள்ளது. பாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டுவரப்பட்ட 3,30,000 வன்னி மக்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்கள் வந்து தங்கியிருந்த       மூன்று பாதுகாப்பு வளையங்களின் மீது பாதுகாப்புப் படைகள் கொடூரத் தாக்குதல்கள் நடத்தி மக்களைப் படுகொலை செய்துள்ளனர். ஷெல், மோட்டார், பீரங்கிகள் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

                ஐநா அலுவலகங்கள், உணவு விநியோக மையங்கள், வன்னியின் அனைத்து மருத்துவமனைகள், கடற்கரை ஓரங்களில் தப்பிச் செல்ல இருந்த மக்களை அழைத்துச் செல்ல வந்த செஞ்சிலுவை சங்க கப்பல்கள் என பாதுகாப்பு இடங்களாகக் கருதப்பட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்புப் படைகள் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 2009 ஜனவரி முதல் மே வரை இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  இலங்கை அரசு இழைத்த மனித உரிமை மீறல்களை குழுவின் அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
                1. ஷெல் தாக்குதல் மூலம் அப்பாவி மக்களை இலங்கை ராணுவம்                                                         கொன்றொழித்தது.
                2. மருத்துவமனைகள் மீது ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல்                                       நடத்தியது.
                3. போரில் காயமடைந்த மக்களுக்கு எவ்வித மருத்துவ உதவிகளையும் இலங்கை               அரசு வழங்கவில்லை. மாறாக அவ்வுதவிகளைத் தடுத்து நிறுத்தியது.  
                4. போர் முடிந்த பின்பு தப்பிப்பிழைத்த மக்களுக்கும், விடுதலைப்புலிகள் எனக்         கருதப்பட்டவர்களுக்கும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள்.                                       விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு,      அழைத்துச் செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்.    பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளனர்.
                5. அரசை விமர்சித்தவர்களின் மீதும், ஊடகக்காரர்களின் மீதும் அரசு நடத்திய      மனித உரிமை மீறல்கள்.   

                விடுதலைப்புலிகளின் மீதும் அறிக்கை குற்றம் சுமத்துகிறது. பொது மக்களை கேடயமாகப் பயன்படுத்தினர் என்பது அவர்கள் மீதான முக்கியக் குற்றச்சாட்டு.

                ஒரு விடுதலைப்புலியைக் கொன்ற கையோடு நூறு அப்பாவிப் பொது மக்களையும் கொல்வதுதான் மகிந்தவின் யுத்த தர்மமா? பொது மக்களை புலிகளிடமிருந்து மீட்கிறேன் என்று சொல்லிக் கொண்டு புகலிடம் தேடிப் பாதுகாப்பு வளையங்களுக்குள் அடைக்கலம் புகுந்த அப்பாவிப் பொது மக்களின் மேல் ஷெல்லடித்தல்தான் மகிந்தவின் ராஜ நீதியோ? மகிந்தவின் லட்சியம் புலிகள் அல்ல. அவர்கள் இரண்டாம் பட்சம்தான். தமிழ் மக்களின் எண்ணிக்கை நாட்டில் குறைக்கப்படவேண்டும். சிங்களவர்களின் எண்ணிக்கை எல்லா மாகாணத்திலும் பெரும்பான்மையாக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த நாடும் சிங்கள மயமாக வேண்டும். தமிழும், தமிழரும் வேரடி மண்ணோடு சாய்க்கப்பட வேண்டும் என்ற சிங்கள இனவெறிதான் மகிந்தவையும் அவன் கூட்டாளிகளையும் பிடித்து ஆட்டுவித்தது. இன்னமும் ஆட்டுவிக்கிறது. அதனால்தான் ஒட்டுமொத்த தமிழினத்தை பூண்டோடு அளிக்க புலிகளுடனான இறுதிப்போரை மகிந்த பயன்படுத்திக் கொண்டார். இதனால்தான் காயம்பட்டுக்கிடக்கும் அப்பாவிப் பொது மக்கள் தங்கியிருந்த மருத்துவமனைகளின் மீது பீரங்கி, ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மிக மோசமாக காயமடைந்தவர்களுக்குக்கூட மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டன. இதை எல்லாம் ஐநா வேடிக்கைப்பார்த்தது.

                சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மிக மோசமாக மீறியுள்ள இலங்கை அரசின் செயல்பாடுகளை ஐநா- வோ, வேறு சர்வதேச அமைப்புகளோ தடுத்து நிறுத்தவில்லை என்ற தன் ஆதங்கத்தையும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

                   போரின் இரு தரப்பு மீதும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று குழுவின் அறிக்கை தெரிவித்தாலும், விடுதலைப்புலிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர், பாதுகாப்பு அமைச்சர், போர் தளபதிகள் மீது போர்க்குற்ற விசாரணைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

                ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டு வந்த தீர்மானம் 2009-ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது. போர்க்குற்றங்கள் சம்பந்தமாக இலங்கை அரசு நடத்தி வரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை திருப்திகரமாக இல்லை. மனித உரிமை மீறல் பற்றி அது விசாரணை நடத்தவில்லை என்றுத் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கை, இலங்கை அரசு புதிதாக விசாரணை நடத்த வேண்டும், அதை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு ஒன்றை ஐநா அமைக்க வேண்டும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. குழுவின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில் ஐநா பொதுச் செயலாளர் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய ஐ.நா விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் மூத்த ஆய்வாளர் அலன்கீனன் தெரிவித்திருக்கிறார்.   

                இலங்கை அரசு செய்ய வேண்டிய கடமைகளாக சிலவற்றை அறிக்கை போதனை செய்திருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுநிர்மான உதவிகள் வழங்க வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பற்றி முழு விபரங்கள் அறிவிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழ் மக்களின் அரசியல் சமூகப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தமிழர்களது பண்பாடு, கலாச்சாரத்தை மதிக்க வேண்டும். போரில் இறந்தவர்கள் பற்றிய முழுத்தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக போரின் இறுதிக்கட்டங்களில் தான் இழைத்த மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

                இதையயல்லாம் இலங்கை அரசு ஏற்குமா என்ன? ஐநா பாதுகாப்பு சபையில் ரத்து அதிகாரம் கொண்ட ரஷ்யாவும், சீனாவும் தனது நண்பனாக உள்ளவரை, இந்தியா தனது உற்றத் துணைவனாக இருக்கும் வரை, மதிப்பு மிக்க சோசலிசத் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ, சாவேஸ் ஆதரவு தனக்கு இருக்கும் வரை மகிந்த எதைக்கண்டும் அஞ்சப்போவதில்லை. ஐநா பொதுச் செயலாளர் பான்கிமூன், ஐநா பிரதிநிதி விஜய் நம்பியார் எல்லோருமே மகிந்தவின் ஆட்கள் தானோ என்ற அவ்வப்பெயரைப் போக்கிட ஐநா பொதுச் செயலர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சுயேச்சையான போர்க்குற்ற விசாரணைக்குழுவை உடனே அமைக்க வேண்டும். அப்பாவிப் பொது மக்களின் மீதான படுகொலைத் தாக்குதல்களும், பெண்களின் மீதான கொடூரக் கற்பழிப்புகளும், குழந்தைகளின் மரண ஓலங்களும் துடைத்தெறிய முடியாத பெரும் கறையை மனித சமூதாயத்தின் மீது ஏற்படுத்திவிட்டது.   போர்க்குற்றவாளிகளான   மகிந்த முதல் பொன்சேகா வரை அனைவரும் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.   இலங்கையின் போர்க்குற்றங்களை மறைக்க உதவும் சர்வதேச நாடுகள் தங்கள் மனசாட்சிப்படி நடந்து கொண்டால் மனித நீதியும், காலம் காலமாக உலகம் சேர்த்து வைத்துள்ள அறமும் மீதியை கவனித்துக் கொள்ளும்.

                கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் நடைபெற்ற சம்பவங்கள் இலங்கைக்கு சரியான முன்னுதாரணமாக இன்றும் திகழ்கிறது. 1994-ம் ஆண்டு அந்நாட்டில் ஹூட்டு, டுட்சி இன மக்களுக்கிடையே நடந்த மோதல்கள், பின் டுட்சி இன மக்களை முழுவதுமாக அழித்தொழிக்கும் இனப் படுகொலையாக மாறியது. ஏறத்தாழ 8 லட்சம் ருவாண்டா மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெரும்பான்மையோர் டுட்சி இன மக்கள். இலட்சக்கணக்கான டுட்சி இனப்பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு இலங்கைப் படுகொலைகளின் போது ஐநாவும், உலக சமுதாயமும் எப்படி அலட்சியமாக நடந்து கொண்டார்களோ அதுபோலத்தான் ருவாண்டா படுகொலைகளின் போதும் நடந்து கொண்டனர். பின்னர் தன் தவற்றை உணர்ந்த ஐநா அப்போர்க்குற்றத்தை விசாரித்து குற்றவாளிகளுக்கு தக்க தண்டனைகள் வாங்கி தந்த விதம் இன்னமும் அப்படியே பசுமையாக நிழலாடுகின்றன.

                ருவாண்டாவின் ஜனாதிபதி ஹேப்பியாரிமானா  ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவர். அவர் 1994 ஏப்ரலில் படுகொலை செய்யப்படுகிறார். அதற்குப் பழிவாங்கும் பொருட்டு எதிர்தரப்பு  டுட்சி இன மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். அரசின் உயர் மட்டத்திலிருந்த ஹுட்டு இன அதிகாரிகளும், ராணுவ தளபதிகளும் இப்படுகொலைகளை நடத்துகின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த ஐநா அமைதிப்படையால் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. ருவாண்டா நாட்டில் தலையிடுவதால் தங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை என்பதே ஐநா பாதுகாப்பு சபையில் இருந்த முக்கிய நாடுகளின் எண்ணமாக இருந்தது. எனவே ஐநா சபை ருவாண்டா நாட்டுப் படுகொலைகளை அதன் உள்நாட்டு விவகாரமாகத்தான் பார்த்தது. ஐந்து லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர்தான் அது ஒரு இனப்படுகொலை என ஐநா அறிவித்தது. அதன் பின்னர்தான் அப்படுகொலைகளைப் பற்றி விசாரிக்க சர்வதேசக் குற்ற நடுவர் ஆணையத்தை ஐநா அமைத்தது. ருவாண்டா அரசின் உயர்மட்டத் தலைவர்களும், ராணுவத் தளபதிகளும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் அதிகாரத்தை இந்த ஆணையம் பெற்றது. ஆணையம் தன் விசாரணையை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்க படுகொலைகளுக்குக் காரணமான 22 பேருக்கு 1998-ல் மரண தண்டனையையும் நிறைவேற்றி வைத்தது.

                மிக முக்கியக் குற்றவாளியான ஹூட்டு இன ராணுவ அதிகாரி தியோஸ்ட பகோசோரா என்பவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு டிசம்பர் 18, 2008 அன்று  அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ருவாண்டா நாட்டு அரசுத் தலைவரின் படுகொலைக்கும் பகோசோராதான் காரணமாவார்.

                ருவாண்டா  போர்க்குற்ற    ஐநா    விசாரணையில் மற்றுமொரு முக்கியமானத் தீர்ப்பும் 1998-ல்    வழங்கப்பட்டது.   போரின் போது    திட்டமிட்டு நடைபெறும் பாலியல்   வல்லுறவுகளும் இனப்படுகொலையின் ஒரு அங்கமே என்பதுதான் அத்தீர்ப்பு. பல்லாயிரக்ணக்கான டுட்சி இனப்பெண்கள் ஹூட்டு படைவீரர்களால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். ருவாண்டாப் படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என அறிவிக்க அமெரிக்கா தயங்கியது. ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து தன் தவற்றை ஒப்புக் கொண்ட கிளிண்டன், “ நான் ஐந்தாயிரம் அமெரிக்கத்துருப்புகளை அனுப்பியிருந்தால் ஐந்து லட்சம் டுட்சி இன மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்என்று பாவ மன்னிப்புக் கோரினார்.

                ஐநா மற்றும் அமெரிக்காவின் காலம் கடந்த ஞானோதயங்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட 8 லட்சம் ருவாண்டா மக்களை உயிரோடு மீட்டுத்தரப்போவதில்லை. ஐநா மற்றும் மேற்குலக நாடுகளின் அலட்சியங்கள் ஒரு லட்சம் தமிழ் உயிர்களை காவு வாங்கியதுதான் மிச்சம். மூன்றாம் உலக நாடுகளின் இனப்பிரச்சினைகளிலும், உயிர்ப்பிரச்சினைகளிலும் தலையிட ஐநாவுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் வலுவான பசை ஏதாவது அந்நாட்டில் இருந்தாக வேண்டும். எண்ணெய் வளமோ, கனிம வளமோ இருக்க வேண்டும். அல்லது தோலின் நிறம் வெள்ளையாக இருக்க வேண்டும். இவைகள் இல்லாத நாட்டின் மனித வளத்தையும், மனித உயிர்களையும் ஒரு பொருட்டாக ஐநாவோ, அமெரிக்காவோ மதிப்பதில்லை. அப்படியே மதித்து அவர்கள் இறங்கி வந்தாலும் இந்தியா, சீனா, ரஷ்யா, பிடல் காஸ்ட்ரோ, சாவேஸ் போன்ற தடைகள் ஏராளம், ஏராளம்!

                ருவாண்டா நாட்டில் நடைபெற்றது.போன்றப் படுகொலைகள் இலங்கையில் நடந்துள்ளன. போரின் இறுதிக்கட்டத்திலும், அதன் பின்னரும் தமிழ்ப் பெண்கள் சிங்களப்படையினரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளனர். மகிந்தவும், கோத்தபயவும், பொன்சேகாவும் மதிப்பிட முடியாத அளவுக்கு மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளனர். ருவாண்டாவில் செய்தது போல் ஐநா சபை ஒரு சுயேச்சையான போர்க்குற்ற விசாரணை நடுவர் ஆணையத்தை உடனே அமைத்து ஒரு கால வரையறைக்குள் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலைதான் என்பதை ஐநாவும், உலக நாடுகளும் உரத்து அறிவிக்க வேண்டும்.

                ஐநா குழுவின் போர்க்குற்ற அறிக்கையை மீண்டும் ஒருமுறை படித்து முடித்து விட்டு, ஈழப்படுகொலை காட்சிப்பதிவுகள் அடங்கியஎன்ன செய்யலாம் இதற்காக?” என்ற ஆவண புத்தகத்தைப் புரட்ட முயற்சிக்கிறேன். கனத்த இதயத்தோடு பாதியிலேயே மூடி வைத்துவிடுகிறேன். போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியா எப்படி இலங்கையை காப்பாற்றியது என்ற விக்கிலீக்ஸ் ஆவணம்இந்துப் பத்திரிக்கை கட்டூரையாக மேஜையில் கிடக்கிறது. “பாதகஞ் செய்பவரைக்கண்டால் அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பாஎன்ற பாரதியின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.
                                                          --------------------------------------

அம்ருதா,மே-2011


                 

No comments:

Post a Comment