புதுச்சேரிக்கு புயல் சேதம் குறித்து பார்வையிடச் சென்ற ப.சிதம்பரத்தை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.ப.சிதம்பரம் கூறிய சமாதானத்தை மக்கள் பொருட்படுத்தவில்லை.இலவசப் பொருட்களை மக்களுக்குத் தருவதற்காக எடுத்துச் சென்ற விஜயகாந்துக்கும் இதே நிலைமைதான்.ஜெயலலிதா போனாலும்,கருணாநிதி போனாலும் இதே இக்கட்டைத்தான் சந்திப்பார்கள்.மக்களை பிச்சைக்காரர்களாக நினைத்துக்கொண்டு இலவசங்களை தூக்கி எறிவது,மக்களை பக்தர்களாக நினைத்துக்கொண்டும்,தங்களை கடவுளாகவும் நினைத்துக்கொண்டும் மக்களுக்கு ஆசி வழங்குவது போல நடந்து செல்வது.மக்கள் இப்போது கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள்.கடந்த 5 நாட்களாக பால் இல்லை,தண்ணீர் இல்லை,குடியிருக்க வீடு இல்லை.அரசு 2000 தருமாம்.அதையும் டாஸ்மாக் வழியாக திருப்பி எடுத்துக்கொள்ளும்.இயற்கை தந்த கடுமையான சோதனையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வல்ல சக்தியைப் பெற்றிருப்பது அரசு மட்டும்தான்.அரசு மனமுவந்து மக்களுக்கு உதவவேண்டும்.அதனை கடமையாகச் செய்யவேண்டுமேயல்லாது பிச்சையிடுவதுபோல செய்யக்கூடாது.பார்வையிட வரும் அரசியல்வாதிகள் மக்களின் துன்பத்தில் பங்கெடுக்கவேண்டுமேயன்றி வெறும் பார்வையாளராக மாறிவிடக்கூடாது.வெறும் நடிப்புக்காக வரும் அரசியல் தலைவர்களை மக்கள் துரத்திவிடவே செய்வார்கள்.மக்கள் இத்தகைய இக்கட்டானத் தருணங்களில் செயலை மட்டுமே விரும்புவார்கள். மக்கள் தங்களின் துன்பங்களிலிருந்து உடனடியாக வெளியேற அரசிடமிருந்து பெரும் உதவியை எதிர்பார்ப்பார்கள்.ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்துவிட்ட அவர்களுக்கு அரசைத் தவிர வேறு யார் நிறைவான உதவியை செய்திட முடியும்? தொண்டு நிறுவனங்கள் செய்வதுபோல அரசும் 1000,2000-த்தோடு நிறுத்திக்கொள்ளுமானால் மக்களின் கோபம் புயலாக மாறும்.மத்திய அரசும் உடனடியாக இடைக்கால நிதியை வழங்க அமைச்சர் சிதம்பரம் முயலவேண்டும். அரசியலை துரத்திவிட்டு முழுமூச்சாக நிவாரணப் பணிகளை அரசு செய்யுமானால் அதற்குரிய பெரும்பலனை ஆள்வோர் அடைந்தே தீருவர்.
Showing posts with label சுவடுகள். Show all posts
Showing posts with label சுவடுகள். Show all posts
Tuesday, 3 January 2012
Saturday, 17 December 2011
முல்லைப் பெரியாறு
முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழ்நாட்டில் அறச்சிக்கலை உருவாக்கியுள்ளது.எல்லைப்புற மக்களின் தன்னெழுச்சி மிக்கப் போராட்டங்களை இருவிதமாக அணுகலாம்.தமிழ்நாட்டின் மீதானப் பற்று என்பது ஒரு கோணம்.தமிழரல்லாதவர்களின் மீதான வெறுப்பின் விளைவு என்பது மறுகோணம்.முதல்கோணம்தான் நமக்கு எப்போதும் வேண்டும்.தமிழ்நாட்டின் மீது அளப்பரிய பற்று வேண்டும்.தமிழ்நாடு என்றால் அதன் மக்களும்,மொழியும்,பண்பாடும்தானே!சாதி மத வேறுபாடிகளின்றி அதன் மக்களை நேசிக்கவேண்டும்.மொழியும்,பண்பாடும் மிகமிக முக்கியம்.எல்லைப் புறத்தில் தமிழகமக்களின் வீறுகொண்ட தொடர்ச்சியானப் போராட்டங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.இன உணர்வும்,மொழி உணர்வும்,மாநில உணர்வும் நமக்கு மிக மிக அவசியம்.இந்த எழுச்சியில் நூறில் ஒரு பங்கு இருந்திருந்தால்கூட இலங்கையில் நம் இனம் காப்பாற்றப்பட்டிருக்கும்.ராஜிவ் காந்தி படுகொலை காரணமாகத்தான் இலங்கைப் படுகொலைகளின்போது இந்தியா மௌனமாக இருந்தது எனக் கூறுபவர்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ராஜிவ்காந்தி படுகொலை என்ற ஒரு வரலாற்றுத் துன்பத்தை ஈழப்படுகொலை என்ற மற்றொரு துன்பியலால் துடைத்துவிட முடியுமா?அப்படித்தான் துடைத்திட முடிவெடுத்தது இந்திய அரசு.அதன் கூட்டணிக் கட்சிகளும்,ராணுவமும் துணை போயின.இரண்டாம் உலகப்போரை அணுகுண்டு போட்டு நிறைவு செய்த அமெரிக்கச் செயலை ஒத்தது இது.தமிழ்நாட்டுத் தமிழர்கள் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். பெரியாறு அணைப்பிரச்சினைகளில் தமிழகத்தின் நியாயப்பாட்டை ஓங்கி நிலைநிறுத்த பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாம் சில இழிவானக் காரியங்களையும் செய்யத் துணிந்துவிட்டோம்.
பெரியாறு அணை எக்கேடு கெட்டால் என்ன?ஆலுக்காசை உடைப்போம்.நாயர் டீக்கடையை அடித்து நொறுக்குவோம் என்கிற ரீதியில் தரம் தாழ்ந்துப் போய்விட்டோம்.கடப்பாரை,மண்வெட்டிகளோடு பெரியாறு அணையை உடைக்கச் சென்ற கேரளக் கட்சிக்காரர்களுக்கும்,நமக்கும் என்ன வேறுபாடு?முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது ஒரு கட்சித் தலைவர் சொன்னது போல மிகச் சிறியப் பிரச்சினை அல்ல.இத்தகையத் தலைவர்களை வைத்துக் கொண்டுதான் நம் எதிர்காலத்தோடு நாம் சூதாடிக்கொண்டிருக்கிறோம்.மிகவும் ஆழமானப் பிரச்சினை அது.நீதிமன்றத்தின் வாசலில் இப்பிரச்சினை உள்ளதால் நாம் அனைவரும் நீதிக்குத் தலைவணங்கவேண்டும்.136 அடி வரை நீர் தேக்கிக்கொள்ளலாம்,142 அடியாக உயர்த்தப்படவும் மாட்டாது,120 அடியாகக் குறைக்கப்படவும் மாட்டாது என்று உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது.மத்தியப் படைகளின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த ஒரு விஷயம் மட்டும்தான் நமக்கு நெருடலாக உள்ளது.ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரதியஜனதாக் கட்சியைச் சார்ந்த சிலர் கடப்பாரைகளோடு அணையைத் தாக்க முயற்சி செய்ததுதான் நமக்கு பீதியைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் அவர்கள் கையில் எடுத்தால் எதையாவது இடிக்காமல் விடமாட்டார்கள்.எனவே அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படைகளை உடனே அனுப்பிவைக்கவேண்டும்.இந்தியாவின் நதிகள் மற்றும் அணைகள் அனைத்தையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என கலாமும் சரியாகச் சொல்லியுள்ளார்.கூடங்குளத்தின் பிதாமகர் கலாமின் அணை(அணு உலை அல்ல)குறித்த வார்த்தைகளை மத்திய அரசு செவிமடுக்கவேண்டும். அதன் கூட்டணிக் கட்சிகள் நிர்ப்பந்தம் தரவேண்டும்.அப்படியும் முடியவில்லையென்றால் கூட்டணியைவிட்டு,ஆட்சியை விட்டு வெளியேறவேண்டும்.(தங்களது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை தமிழர்கள் தந்துவிட்டார்கள்.அவர்கள் அசைவதாக இல்லை).பிரதமர் மன்மோகனுக்கு அணையைப் பற்றிய எந்தக் கவலையுமில்லை.அணு உலை பற்றியக் கவலைதான்.சில மதிப்பீடுகள் குறித்தக் கவலைகள் பிரதமருக்கு இல்லாமலிருக்கலாம்.ஆனால் நாமும் அம்மதிப்பீடுகளை காற்றில் பறக்கவிட்டு விடக்கூடாது.சமாதானமும்,அமைதியும் சிலருக்கு அருவருப்பானச் சொற்களாக இருக்கலாம்.ஆனால் நமது போராட்டம் மீண்டும் உத்வேகம் பெற சமாதானமும்,அமைதியும் கண்டிப்பாக வேண்டும்.தமிழர்கள் என்பதற்காக விரட்டியடிப்பதும்,மலையாளிகள் என்பதற்காகக் கடைகளை உடைப்பதும் பாசிசம் அல்லாமல் வேறென்ன?
---------------------------
Subscribe to:
Posts (Atom)