Friday 13 April 2012

கொடும்பழியைத் துடைக்குமா இந்தியா?

        


  இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசும்,அதன் ராணுவமும் மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது.ஜெனிவாவில் மார்ச் மாத இறுதியில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களவையிலும்,மாநிலங்களவையிலும் மைய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என இந்தியாவுக்கான இலங்கை தூதர் பேட்டியளித்திருக்கிறார்.அதற்கு மறுநாள் தன் கூற்றுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும்போது ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தவும்கூட இலங்கை அரசு திட்டமிட்டிருக்கலாம். அப்படித்தான் போரின் இறுதிகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் அடைத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்மக்கள் அனைவரும் புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என முடிவு செய்து அவர்கள் மீது ராக்கெட் தாக்குதலை,ஷெல்லடிகளை அவர்கள் மீது நிகழ்த்தியது.கோரமான முறையில் அவர்கள் கொல்லப்படும் காட்சிகளைத்தான்   சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் சன் மற்றும் கலைஞர் குழும செய்திகளின் வழியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
      2009 ஜனவரி வாக்கிலேயே விடுதலைப்புலிகளின் தோல்வி நிச்சயம்,அவர்களுக்கு வேறு வழியே இல்லை என உறுதியாகத் தெரிந்தும்,விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்தவும்,சிறைப்படுத்தவும்,சரணடையச்செய்யவும் ஏராளமான வழிகள் உண்டென்று தெரிந்திருந்தும்  அப்பாவித்தமிழ்மக்கள் கொல்லப்படவேண்டும் என்பதற்காகவே,.நா. அதிகாரிகள் அம்மக்களோடு கூடவே இருந்தபோதிலும்கூட அப்பாவித்தமிழ் மக்களின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்க ராஜபக்க்ஷ அரசு முடிவுசெய்தபோது .நா-வோ,அமெரிக்காவோ,மற்ற மேற்கு நாடுகளோ,சோசலிச நாடுகளோ,ஏன் என்னருமை இந்தியாவோ கூட அதைத் தடுத்து நிறுத்தவில்லை.பிரபாகரனைக் கொன்றொழிக்கவேண்டுமென்ற வெறி எத்தனை ஆயிரம் உயிர்களைக் காவு வாங்கிவிட்டது?
    ஈழப்போரின் கொடும்பிம்பங்கள் நம் கண்ணெதிரே கணினிகளில்,தொலைக்காட்சிகளில் அசைவுறும்போது 'கடவுளே!நாமெல்லாம் மனிதர்கள்தாமா?'என்று கண்கலங்கி அரற்றுகிறேன்.கோட்பாடுகள்,கொள்கைகள்,இனங்கள்,தேசியங்கள்,அரசுகள், எல்லைக்கோடுகள் எல்லாவற்றையும் படுகுழிக்குள் புதைத்துவிடவே ஆசைப்படுகிறேன்.பதுங்குகுழிக்குள் அழுதுகொண்டே அடுத்த நொடி என்ன நடக்குமோ எனத்தவிக்கும் இளம்பிஞ்சுகள் இவ்வுலகில் இனி நிமமதியாக வாழ  முடியாதோ?இனி யாரைத் தூற்றி என்ன பயன்?பிரபாகரனோ,மகிந்தவோ,பான்-கி-மூனோ,ஒபாமாவோ,கோத்தபயவோ இழந்துபோன என் பல்லாயிரக்கணக்கான சகோதர,சகோதரிகளை உயிரோடு தரமுடியுமா?துடிதுடித்து செத்துக்கொண்டிருந்தபோது காப்பாற்றாத,தங்கள் தங்கள் சொந்த நலன்களில் மூழ்கிக்கிடந்த, இன்று கூச்சல் போடும் அரசியல்வாதிகள் தற்போது நடத்தும் அரசியலின் துர்நாற்றத்தை சகிக்கமுடியாமல் மரித்துபோன ஒவ்வொரு ஈழத்து ஆன்மாவும் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்துகொள்ளும்.என் வீட்டிற்கு எதிரே நிற்கும் பனையைப் பார்க்கும்போதெல்லாம் ஈழத்துப் பனையை நினைத்துக் கண்ணீர் வருகிறது.ஈழத்தமிழர் விவகாரத்தில் உலக நாடுகள் ஒவ்வொரு முறையும் தங்கள் மனசாட்சியை இழந்துபோய்தான் முடிவுகளை எடுக்கின்றன.
     வங்கதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கர்னல் ஹாரூன்கான்,தென்னாப்பிரிக்காவின் ஓய்வு பெற்ற கர்னல் கிரிஸ்டூ டாய்ட்.இவ்விருவரும் .நா-வைச் சேர்ந்த உயர் அலுவலர்கள்.2009 ஜனவரியில் புதுக்குடியிருப்பு மற்றும் சுதந்திரபுரம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்தவர்கள் இவர்கள்.பல நூற்றுக்கணக்கான மக்களின் உயிரையும் காப்பாற்றியவர்கள்.தங்கள் உயிரையும் பணயம் வைத்து போர்ச்சூழலில் துணிவுடன் செயல்பட்டவர்கள்.டூடாய்ட் ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளின் விளைவாகத்தான் போரின் இறுதிக்கட்டங்களில் மிக அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை வெளியுலகம் அறிந்துகொள்ளமுடிந்தது.சுதந்திரபுரத்தில் ஹாரூனின் அனுபவங்களை கார்டன்வைஸ் தனது நூலில் இப்படி வர்ணிக்கிறார்:‌ “சுதந்திரபுரம் கிராமத்தை ஹாரூன்கான் தலைமையிலான வண்டித்தொடர் அடைந்தபோது,அங்கிருந்த பெரும் வயல்வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள்.உணவு கொடுத்துக் கொண்டிருந்தனர்.அங்கு நீண்ட வரிசை.போரில்லாப் பிராந்தியம் என்று அரசு அறிவித்ததன் விளைவே அவ்வளவு பெருங்கூட்டம் அங்கே.இன்னமும் ஷெல்லடிச் சத்தத்தைக் கேட்கமுடிந்தது.சுதந்திரபுரம் போரில்லாப் பிராந்தியத்தின் தென்முனையில் அமைந்திருந்தது.எங்குத் திரும்பினாலும் மக்கள் நெரிசல்.சாலையில் ஏகப்பட்ட வாகனங்கள்.தற்காலிகமாகத் தங்குவதற்குக் குடிசைகளும் அமைக்கப்பட்டன.வானில் விமானங்கள் பறந்த வண்ணம் இருந்தன.
     உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது.மீண்டும் பதுங்கு குழிகள்.பீப்பாய்கள்,மண்சுவர்கள்,கூரையில் கனமான தென்னை மரத் துண்டுகள்,கீழே தண்ணீர் கசியாமல் இருக்கப் பிளாஸ்டிக் விரிப்புகள்,வழக்கம் போல சுற்றிலும் வாகனங்கள்.
    முற்றிலும் பாதுகாப்பானது அவ்வேற்பாடுகள் எனக் கூறிவிடமுடியாது.நேரடியாக அவ்விடத்தின் மீது குண்டு ஏதும் விழுமானால் எல்லாம் சாம்பல்தான்.ஆனால் சுற்றி விழும் குண்டுகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.அப்படிப்பட்ட பாதுகாப்புக்கூட இல்லாமல்தான் ஆயிரக்கணக்கில் மக்கள் சுற்றிலும் இருந்தார்கள்.ஹாரூன் தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தின் புவியியல் விவரங்களைத் துல்லியமாக டூ டாய்ட்டிற்குத் தெரியப்படுத்த,அவர் கொழும்பில் இருந்த இலங்கை ராணுவத் தலைமையகத்திற்கும் வவுனியாவில் இருந்த தளபதி ஜெனரல் ஜயசூரியாவிற்கும் விவரங்களை அனுப்பினார்.
      ஒரு வயதான மனிதர்,70க்கும் மேல் இருக்கும்,கானை வந்து பார்த்தார்.தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.ஆங்கிலத்தில் பேசினார்.ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்.கடந்த ஓர் ஆண்டில் நான்கு முறை இடம் பெயர்ந்ததாகக் கூறினார்.ஹாரூன் ஒரு நாற்காலியைக் காட்டி அவரை அமரச்சொன்னார்.அருகிலே பெண்ணின் குடும்பமும் தானும் தன் மனைவியும் தனித்தனியே நாங்களே உருவாக்கிக்கொண்ட அரைகுறைப் பதுங்குகுழிகளில் இருக்கிறோம்.சற்று நேரம் கழித்து தன் மனைவி,மகள் மற்றும் 4 பேரப்பிள்ளைகளை அங்கு வருமாறு அழைத்து அறிமுகப்படுத்தினார்.ஒரு மணிநேரம் ஹாரூன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.போர் எப்படி முடிந்தாலும் பேரப்பிள்ளைகள் நன்றாகப் படித்து முன்னேறவேண்டும் என்றார்.
        மதியத்திலேயே மீண்டும் ஷெல்லடி துவங்கியது.வழக்கம்போல துவங்கியது விடுதலைப்புலிகள்தாம்.அரசு தரப்பிலிருந்து கடுமையான பதிலடி.பலர் மாண்டனர்,இன்னும் பலருக்குக் காயம்.ஆனால் அந்தி சாயும் நேரத்தில் சற்று ஓய்ந்ததாகத் தோன்றியது.இரவு உணவு தயாரானது.அவ்வப்போது தெற்கே ஷெல்கள் மின்னுவதை,ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கீழே விழும் இரைச்சலை அவர்களால் கேட்கமுடிந்தது.தான் அழைத்து வந்து கொண்டிருந்த குடும்பத்தினரை உள்ளே போகச் சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில்,சற்று தள்ளி ஒரு பாயில் படுத்துக் கொண்டிருந்த அந்த வங்கி மேலாளரின் அழகான 17 வயது பெண்ணுக்குக் கையசைத்தவண்ணம் தன் பதுங்கு குழிக்குள் நுழைந்தார் ஹாரூன்.அவ்விரைச்சல் மத்தியிலும் சற்றுத் தூங்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு.
   ஒரு மணிநேரம் தான் சென்றிருக்கும்.அலறல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தார் ஹாரூன்.ஷெல்களும்,இராக்கெட்டுகளும் சுற்றிலும் விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. பதுங்கு குழியே அதிர்ந்தது.வெளியே மேலும் மேலும் வெடிச்சத்தமும் சிக்கிய மக்களின் ஓலமும்.ஹாரூனும் மற்றவர்களும் அமைதி காத்தனர்.அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்துதான் ஷெல் மற்றும் இராக்கெட் மழை என்பது தெளிவாகவே தெரிந்தது.இரு தரப்பிற்கும் .நா.அலுவலர்கள் தங்கியிருக்கும் இடத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் ஜி.பி.எஸ்.குறியீடுகள் அனுப்பப்பட்டிருந்தும் அப்படி ஒரு தாக்குதல்.டு டாய்ட்டைத் தொடர்புகொண்டு நிலைமை பற்றி ஹாரூன் சொன்னார்.டாய்ட் ராணுவத் தலைமையகத்திற்குப் பதறியடித்துக் கொண்டு செய்திகள் அனுப்பினார்,தொலைபேசி மூலமாகவும்,செல்போன் செய்திகளாகவும் தொடர்ந்து.
  ஒரு கட்டத்தில் ஹாரூன் தங்கியிருந்த அவர்களது பதுங்கு குழிக்கு மிக அருகில் ஒரு குண்டு வெடித்த சத்தம்.தலை சுற்றியது.காதை அடைத்தது.வாயிலில் விழுந்திருக்கவேண்டும் என நினைத்தார் ஹாரூன்.முனகல்களும்,அலறல்களும் அவரை வேதனையடையச் செய்தன.மெல்லச் சமாளித்துக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தார்.மாலையில் சந்தித்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் தங்கியிருந்த குழிமீது 130 மில்லிமீட்டர் ஷெல் விழுந்திருக்கிறது.சுற்றிலும் உடல்கள்.இரவு மூட்டிய தீ கூட முற்றிலுமாக அணையவில்லை. அதில் உணவு சமைத்து உண்டவர்கள் இறந்திருந்தனர்.உதவி உதவி என யாரோ அலறியவண்ணமிருந்தனர்.ஒவ்வொரு வெடிச் சத்தத்தைத் தொடர்ந்தும் அலறல்...ஆனால் நாங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு உள்ளேயே இருந்துவிட்டோம்.வெளியே தலைகாட்டமுடியாது.அவ்வளவு கடுமையான ஷெல்லடிகள்.முனகிக் கொண்டிருந்தவர்கள் மெல்ல மெல்ல இறந்திருக்கவேண்டும்.நாங்கள் என்ன செய்ய இயலும்...?என்கிறார் ஹாரூன்.

  அதிகாலையில்தான் ஷெல் தாக்குதல் சற்றுக் குறைந்தது.குழியை மறைத்துக்கட்டப்பட்டிருந்த அந்த முரட்டுத்துணியை விலக்கி எட்டிப்பார்த்தார்.அவர் கடைசியாகக் கையசைத்து விடைபெற்ற அப்பதினேழு வயதுப் பெண்ணின் உடலின் ஒரு பாதி வாயிலில் வீசப்பட்டிருந்தது.வயதான அந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அங்குமிங்கும் வெறித்தபடி அலைந்து கொண்டிருந்தார்.அவர் அழவில்லை.இது என் பேத்தி...இது என் பெண்...அதோ அது இன்னொரு பேத்தி....ஹாரூனுக்குச் சுட்டிக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

  தொடர்ந்து செய்திகள் அனுப்பியும் ராணுவம் குண்டுவீச்சை நிறுத்தாததை வைத்துக்கொண்டே அது திட்டமிட்டு பொதுமக்களைப் படுகொலை செய்ததாக நாம் கூறமுடியும் என்றார் ஹாரூன் “.
     இலங்கை அரசு தான் நடத்திய இறுதிப் போருக்குப் பின்னரும்கூட தனிமனித உரிமைகளை எப்படி நசுக்குகிறது,எத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என்பது பற்றி அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு இவ்வாண்டு மார்ச் மத்தியில் 63 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.இறுதிப்போருக்குப்பின்னர் விடுதலைப் புலிகள் என்று கைது செய்யப்பட்ட 12000 இளைஞர்கள் பற்றி அரசு இன்னமும் மௌனம் சாதிக்கிறது என்று குற்றம் சாட்டும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை அவர்கள் இன்னமும் தெற்கிலங்கையில் உள்ள பூசா தடுப்புக் காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,அவர்கள் அனைவரும் சட்டத்தின் பார்வையில் வைக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இறுதிப்போருக்குப் பின்னர் அப்பாவிப் பொதுமக்களையும்,மனித உரிமைவாதிகளையும் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கும் செயல்கள் குறித்தும் ஏராளமானத் தகவல்களோடு அது பேசுகிறது.
   கொழும்புவில் அமைந்துள்ள மனித உரிமை மற்றும் வளர்ச்சிக்கான மையத்தின் திட்ட மேலாளரான ஸ்டீபன் சுந்தர்ராஜ் 2009 -ம் ஆண்டு மே மாதத்தில் வெள்ளை வேன் ஆட்களால் கடத்தப்பட்டார்.அவர் கடத்தப்படவில்லை,கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் அவரின் கதி குறித்து  நம்பகமான தகவல் எதுவும் இதுவரை இல்லை.சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அவர்களது குடும்பத்தார் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரியவிருந்த இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் டிசம்பர்,2011-ல் கடத்தப்பட்டனர்.அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.யாழ்ப்பாணத்தில் அரசின் ஆதரவுடன் இயங்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் நடத்தும் மனித உரிமை மீறல்கள் குறித்து சொல்லி மாளாது.மார்ச்,2011-ல் பூஸா தடுப்பு முகாமிலிருந்து கோலாகலமாக விடுவிக்கப்பட்ட 118 தமிழ்க்கைதிகள் மீண்டும் வேறொரு தடுப்பு முகாமான பூந்தோட்ட முகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.ஒரு தடுப்பு முகாமிலிருந்து மற்றொன்றிற்கு அனுப்பப்படும் கைதிகளின் நிலை குறித்து இலங்கை நீதித்துறை கூட ஒன்றும் செய்ய இயலாது. தமிழ் சிவிலியன்கள் மீதான இலங்கை ராணுவத்தின் கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் விமர்சனம் செய்திருந்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவருக்கு 20 வருட சிறைதண்டனையைப் பெற்றுத் தந்தது இலங்கை அரசு.சர்வதேச சமூகத்தின் நெருக்கடிகளுக்குப் பணிந்து அவர் விடுவிக்கப்பட்டார்.இப்போது அவர் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார். அரசைக் கடுமையாக விமர்சனம் செய்த சண்டேலீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கிளிநொச்சி வீழ்ந்த ஒரு வாரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
      இக்கட்டான நேரத்தில்தான் பெருமளவிற்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தன என்றில்லை.இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியிருப்பது போல,இலங்கை அரசின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட ஜனவரி,2009-க்குப் பிறகும்கூட அப்பாவித் தமிழ்மக்களின் உயிர்கள் ராக்கெட் குண்டுகளாலும்,ஷெல்லடித் தாக்குதல்களாலும் பறித்தெடுக்கப்பட்டன.2011 ஆகஸ்டில் அவசரகாலச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மேலும் கடுமையான ஷரத்துகளை இலங்கை அரசு சேர்த்துள்ளது.இலங்கையில் விடுதலைப் போராளிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு,மக்களின் போராட்டங்களும் நசுக்கப்பட்டுள்ள இச்சூழலில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் போன்ற கடுமையான சட்டங்களுக்கு இலங்கையில் என்ன தேவை என்று சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பவேண்டும்.
     மனித உரிமைகளை நசுக்கி எறிவதில் இலங்கை அரசுக்கு பழுத்த அனுபவம் உண்டு.தமிழர்கள் என்றில்லை.1970 களில் ஜே.வி.பி. கிளர்ச்சிகளிலும் சரி,1988-90 களின் ஜே.வி.பி-ன் இரண்டாம் கட்டக் கிளர்ச்சிகளிலும் சரி, கொத்து கொத்தாக சிங்கள இளைஞர்களை வேட்டையாடி,தலையை எடுத்துவிட்டு முண்டத்தை கொழும்புவின் தெருவுக்குத் தெரு நட்டு வைத்ததுதான் இந்த சிங்கள அரசு.ஆயிரக்கணக்கான சடலங்களை கொழும்புவிற்கு வடக்கே பாயும் ஆற்றில் மிதக்கவிட்டது அரசு.விக்டோரியா பாலத்தின்மீது பொதுமக்கள் அச்சத்துடன் அக்கொடுமையைப் பார்த்து உறைந்து போயினர்.இரண்டாவது கலகத்தின்போது மட்டும் இலங்கை அரசு 40000 முதல் 60000 வரை ஜே.வி.பி. இயக்கத்தினர்,அவர்களது அனுதாபிகள்,எதிர்க்கட்சிக்காரர்கள் அரசால் கொல்லப்பட்டனர்.இவர்களில் பெரும்பாலோர் அப்பாவிகள். ஒருசில குடும்பங்களின் (சேனநாயக்கா,பண்டாரநாயக்கா) ஆதிக்கத்தின் கீழ் காலம் காலமாக வளர்ந்துவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் அசுர வளர்ச்சியையும்,கிராமப்புற மக்களின் கொடிய வறுமையையும்,ஏழ்மையையும் ஒப்பிட்டுப் பார்த்து புரட்சியில் இறங்கிய பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை அடியோடு ஒழித்தது ஸ்ரீமாவோ மற்றும் பிரேமதாசா அரசுகள்.ஜே.வி.பி-யின் முதற்கட்ட எழுச்சியை அடக்க தன்னாலான உதவிகளை இந்திய அரசு மட்டுமல்ல,கம்யூனிச சீனாவும் வழங்கியது.இந்தியாவின் கடற்படைக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிலும் ரோந்து வந்தது.இரண்டாம் கட்ட ஜே.வி.பி. எழுச்சிகளின்போது இந்திய அமைதிகாப்புப் படையின் விமானங்கள் இலங்கையின் துருப்புகளை யாழ்ப்பாணத்திலிருந்து கிளர்ச்சி நடைபெற்ற தென் பகுதிகளுக்கு விரைந்து அனுப்பி அரசுக்கு உதவியது.
        1983 ஜூலை கலவரங்களின்போது தனது கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தது ஜெயவர்த்தன அரசு.அப்போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.சிங்களவர்களின் எழுச்சியாக இதை வர்ணித்தார் ஜெயவர்த்தன.1990-ம் ஆண்டில் தங்கள் படை வீரர்களையும்,போலீஸ்காரர்களையும் விடுதலைப் புலிகளிடம் இழந்ததற்குப் பதிலடியாக இலங்கை ராணுவம் கிழக்கில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் இரண்டே வாரங்களில் 3000 தமிழர்களைக் கொன்று குவித்தது.நூற்றுக்கணக்கானத் தமிழர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.
    .நா.உறுப்பு நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக பொதுச்செயலாளர் பான்-கி-மூன் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க மூன்று வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்றினை ஜுன்,2010-ல் அறிவித்தார்..நா.வின் குழுவை நிராகரித்த ராஜபக்க்ஷ,2002 போர்நிறுத்தம் முதல் 2009 இறுதி யுத்தம் முடிய நடைபெற்ற நிகழ்வுகளை விசாரிக்கவென 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக்குழு' ஒன்றை ஏற்படுத்தினார்.போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்,கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்கள்,மனித உரிமை அமைப்புகள் என பலத் தரப்பினரும் இக்குழு முன் சாட்சியம் அளித்தனர்.தனது இறுதி அறிக்கையை நவம்பர்,2011 வாக்கில் இலங்கை அரசிடம் கொடுத்த குழு,போரின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு மனித உரிமைமீறல் நடந்திருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.சட்டவிரோத தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை உடனடியாக சட்டத்தின் பார்வையில் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியுள்ள LLRC, இணக்கமான தீர்விற்கு எல்லா இன மக்களுக்கும் எவ்வித பாகுபாடும் காட்டாமல் ஆட்சியதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் எனவும் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
    இத்தகைய பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தைதான் அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டுவரவுள்ளது.மிகக் குறைந்தக் கோரிக்கையாக உள்ள இத்தீர்மானத்தையே இந்திய அரசு ஆதரிக்கத் தயங்குகிறது.உண்மையானப் போர்க்குற்றவாளிகளான ராஜபக்க்ஷ,கோத்தபய,பொன்சேகா மற்றும் ராணுவ தளபதிகள் இலங்கையின் LLRC-ன் விசாரணை வரம்புக்குள் வந்துவிடமுடியாது.எனவேதான் இவர்கள் அனைவரின் மீதும் போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சுதந்திரமான சர்வதேச விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வாங்கித்தரப்படவேண்டும்.
    நாடுகளின் எல்லைகள் புனிதமானவையா? மனிதர்களின் மாண்புகள் புனிதமானவையா?
ஆளும் வர்க்கங்கள் உண்மையானவர்களா? மனிதர்கள் உண்மையானவர்களா?
ஆதிக்கப்போட்டிகளும்,அதிகாரமும் நிலையானவையா? குழந்தைகளின் சிரிப்பு நிலையானதா?பழிவாங்கல்கள் உந்நதமானவையா? அன்பும்,அமைதியும்,மன்னிப்பும் உந்நதமானவையா? பாசிசம் போற்றப்படவேண்டுமா? மனித உரிமைகள் போற்றப்படவேண்டுமா?
       இந்தியா போற்றுதலுக்குகந்த நாடுதான்.அறத்தைப்பற்றி சமீபகாலம் வரை அது நன்கு உணர்ந்திருந்தது.அதனால்தான் கிழக்கு வங்காள மக்கள் மொழிவழி தேசியத்தால் கொடுமைப்படுத்தப்பட்டபோது வங்காள தேசத்தை உருவாக்கிக் கொடுத்தது.நாடுகளின் எல்லைக் கோடுகள் எல்லையற்ற இறையாண்மையைக் கொண்டவையல்ல. சீனா என்ன செய்யும்,பாகிஸ்தான் என்ன செய்யும்,பூகோள ரீதியான பாதிப்புகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் அன்றைய இந்தியா மண்டையை உடைத்துக் கொள்ளவில்லை.அப்போது ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் உள்ளத்தில் ஆண்மை இருந்தது.பிரச்னைகளைப் பகுத்துப் பார்த்து நல்ல முடிவெடுக்கும் அறம் குடிகொண்டிருந்தது.
     இலங்கைக்கு எதிரான இத்தீர்மானம் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை என்றாலும் தீராத்துயரில் ஆழ்ந்திருக்கும் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு அது ஒரு பெரிய நம்பிக்கையை அளிக்கமுடியும்.தங்கள் உரிமையை நிலைநாட்டிக்கொள்ள எதிர்காலத்தில் போராடும் உள உறுதியை அவர்கள் பெறமுடியும்.
       இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்து தீர்மானம் தோற்றுப்போகவும் நேரிடலாம்.அவ்வாறு இந்தியா செய்யுமானால் ஆழமான படுகுழிக்குள் அது வீழ்ந்து போகும்.அப்படுகுழிக்குள் அதோடு சேர்ந்திருப்பது தீராத கொடும்பழி மட்டுமே.
                                      ----------------------------------------------------
- அம்ருதா,ஏப்ரல்,2012.