உலகத் தமிழ்ப் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் காலமாகிவிட்டார். விபுலாநந்த அடிகள், கணபதிப்பிள்ளை, வித்யானந்தன், கைலாசபதி என்ற ஈழத்துப்புலமைத் தொடரின் கடைசிக் கொழுந்தான சிவத்தம்பி இன்று நம்மிடையே இல்லை. அவரது தமிழ்ப்புலமையும், அறிவு நேர்மையும், உழைப்பும் தமிழகத்திலும், உலகெங்கிலும் இருந்து கூட சிறந்த மாணாக்கர்களை அவர்பால் ஈர்த்து ஒரு சிறந்த தமிழ்ப்பரம்பரையை உருவாக்கியது. 20-ம் நூற்றாண்டு தமிழீழ இலக்கில வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக் கூறுவர். க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியுமே இவ்விருவரும். மாக்ஸ்முல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருத மொழி இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும், இலக்கண, இலக்கிய வளங்களை பிற மொழிக்கு வழங்கிய மொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, ரோம இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் நிறுவிக்காட்டிச் சங்க நூல்கள் மேற்குலகில் கவனம் பெற உழைத்தவர்கள் இவ்விருவரும்.
கா. சிவத்தம்பி அவர்கள் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் அருகில் கரவெட்டி என்னும் ஊரில் 1932, மே 10-ம் நாள் பிறந்தவர். பெற்றோர் கார்த்திகேசு, வள்ளியம்மை அவர்கள். தந்தையார் பண்டிதராகவும், சைவப்புலவராகவும் விளங்கியவர். கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் தொடக்கக்கல்வியையும், கொழும்பு சாகிராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றவர். இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். 1970-ல் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (Drama in Ancient Tamil Society) என்னும் தலைப்பில் ஆய்வேடு வழங்கி பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பட்டப்படிப்பை வரலாற்று பாடத்தில் தொடங்கினாலும், தன் முனைவர் பட்ட ஆய்விலும் சரி, அதன் பிறகான ஆய்வுகளிலும் சரி தமிழில் பல புதிய முன்னெடுப்புகளைச் செய்தார். சிவத்தம்பி ஒரு சிறந்த நாடக நடிகர் என்பதும், நாடக இயக்குநர், நாடக எழுத்தாளர் என்பதும் நாம் எல்லோரும் அறியாத செய்திகள்.
சிவத்தம்பி தொடக்கத்தில் கொழும்பு சாகிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1978 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 17 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். தொல்காப்பியம், அகத்திணை மரபுகள், நாடகம் பற்றிப் பாடம் நடத்துவதில் சிவத்தம்பிக்கு மிக்க ஈடுபாடு உண்டு. இவரது வகுப்புகள் பெரும்பாலும் நான்கு மணி நேரம் வரை நீண்டு விடுமாம். அவ்வளவு நேரமும் மாணவர்கள் ஆர்வமுடன் அமர்ந்து படித்துள்ளனர்.
வரலாறு, மானுடவியல், சமூகவியல் வழியாக சமுதாயத்தை ஆராய்ந்தவர். சங்க இலக்கியத்தினூடாக பண்டையத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை, சமூகத்தை, பண்பாட்டை, மதத்தை, மானுடத்தை ஆராய்ந்தவர். யாழ்ப்பாணச் சமூகத்தைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டவர். யாழ்ப்பாண வெள்ளாள சமுதாயத்தின் மேலாதிக்கத்தையும், சாதிய மேல்நிலையையும் அதனால் விளைந்த தீங்குகளையும் அஞ்சாமல் எடுத்துரைத்தார். சாதி பற்றுமிக்க ஆறுமுக நாவலரை விமர்சனம் செய்ய அவர் என்றும் தயங்கியது கிடையாது.
இக்காலத் தமிழ் மாணவர்களின் ஆய்வுப் போக்குகள் குறித்து அவர் மிக்க அக்கறை கொண்டிருந்தார். தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரே மாதிரியான ஆய்வுகளை அவர் ஊக்குவிக்கவில்லை. மொழியியல், சமூக வரலாறு, மானுடவியல் ஆகிய துறைகள் தமிழ் இலக்கியத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றியும் ஆய்வு செய்ய மாணவர்களை அவர் வலியுறுத்தினார். நவீன இலக்கியம் பற்றிய ஆய்வு முறைகளிலும் சில புதுமைகளைப் படைக்க அவர் மாணவர்களைத் தூண்டினார். புதுமைப்பித்தனின் கதை மொழி பற்றியும், கல்கியின் கதை மொழி பற்றியும், ஜானகிராமனின் கதை மொழி பற்றியும் ஆய்வுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் கல்கியின் கதை மொழி புதுமைப்பித்தனின் கதை மொழியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றிய ஒரு ஒப்பு நோக்கிய ஆய்வை மாணவர்கள் செய்ய வேண்டும் என சிவத்தம்பி விரும்பினார். ஆய்வு மாணவர்கள் பெறக்கூடிய முனைவர் பட்டம் என்பது உண்மையான ஆய்வை செய்வதற்குரிய ஒரு திறவுகோல் மட்டுமே! ஆய்வு முறைகளைக் கற்றுணர கிடைக்கும் வாய்ப்பு அவ்வளவுதான். உண்மையான ஆய்வு அதன் பிறகுதான் என்பதான மனநிலை தமிழ் ஆய்வுச்சூழலுக்கு இன்னமும் வரவில்லை. எனவேதான் தமிழ் ஆய்வின் சில நவீனப் போக்குகளைப் பற்றி அறிய நாம் மேலை நாட்டு அறிஞர்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது என சிவத்தம்பி வேதனைப்படுகிறார்.
உலகில் 50 சதவீத மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்று என்ற யுனெஸ்கோவின் கூற்றை சிவத்தம்பி ஏற்க மறுக்கிறார். தமிழ் மொழியின் உன்னதம் பற்றி அவர் கூறிய விளக்கம் மிகப்பொருத்தமானது. அவர் கூறுகிறார்; “பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் தங்களிடையே பிணைப்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று பிற மொழி பேசும் மக்களிடம் கரைந்து போதல், தங்கள் மொழி, கலாச்சார அடையாளங்களை இழத்தல். மற்றொன்று பிற மொழி பேசும் மக்களினங்களின் முக்கியக் கலாச்சாரக் கூறுகளை தனதாக்கிக்கொள்ளுதல், தங்களுக்கேற்றார் போல் ஆக்கிக்கொள்ளுதல். முதலாமாவது கரைந்துபோதல், இரண்டாவது கிரகித்துக்கொள்ளுதல். கரைந்து போதலுக்கு அமெரிக்கக் கருப்பினமக்களை உதாரணம் சொல்லலாம். கலப்பின மக்களுக்கென தனியான கலாச்சாரம், மொழி, மதம் இருந்தாலும் கூட அதன் தனித்தன்மையை அமெரிக்க வெள்ளை சமுதாயம் அங்கீகரிப்பது கிடையாது. எனவேதான் கருப்பர்கள் தங்கள் அடையாளத்தை முற்றிலும் இழந்ததோடு வெள்ளைப் பண்பாட்டோடு, மதத்தோடு, மொழியோடு தங்களைக் கரைத்துக்கொண்டனர். ஆனால் தமிழ் மொழிக்கு நிச்சயமாக அவ்வித ஆபத்து எதுவும் நேர்ந்துவிடாது. ஏனென்றால் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் வாழும் பல கோடி மக்களின் தாய் மொழி மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசிய நாடுகளின் அரசியல் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் தமிழ் பெற்றுள்ளது. சங்ககாலம் முதற்கொண்டு இன்று வரையிலும் தமிழின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அது சமாளித்து வந்துள்ளது. தன்னைத் தாக்குபவர்களின் முக்கியக் கூறுகளை அது உட்கிரகித்துள்ளது. களப்பிரர் காலத்தில் சமண, புத்த கலாச்சாரத்தை உள்வாங்கிக்கொண்டு சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் வெளிக்கொணர்ந்தது. வேத மத இந்துக்களின் தாக்குதல்களை உள்வாங்கிக்கொண்டு பக்தி இலக்கியத்தை தமிழ் தந்தது. பின்னர் அது இந்தியா முழுவதும் பரவியது. தமிழ் பழம்பெரும் மொழி. அது பழங்குடிகளின் மொழி அல்ல. அது நாகரிகமான மொழி. எனவேதான் தொல் பழங்காலம் முதல் இன்று வரை வரலாற்றுப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது தொடர்ச்சியை அது உறுதிப்படுத்தி வந்துள்ளது. தனது தனித்தன்மையை அது என்றும் இழந்ததில்லை. எனவே அதன் படைப்பாற்றல் சங்க காலத்தோடு நின்றுவிடவில்லை. புதுமைப்பித்தன் வரைக்கும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. நடராஜர் விக்கிரகமும், ராஜராஜசோழனின் கோவிலும், நாதஸ்வரமும், தவிலும் கூட தமிழ்தான். தலைகீழ் மாறுபாடு கொண்ட வெவ்வேறு மதங்கள் தங்களின் கருத்து வளங்களை தமிழில் சரளமாக வெளிப்படுத்துவதினால்தான், வெளிப்படுத்த முடிவதினால்தான் தமிழை ஒரு சமயச் சார்பற்ற மொழி எனவும் சொல்லுகிறோம்.”
இருபதாம் நூற்றாண்டின் தமிழகத்து தலைவிதியை நிர்ணயித்த இரண்டு பெரும் இயக்கங்களான சுய மரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சி பற்றி நேர்மையான கருத்துக்களை சிவத்தம்பி பதிவு செய்துள்ளார். சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் இணைத்து பெரியார் நடத்தி வைத்த திராவிடர் கழகம் என்ற திருமணத்தை தாலி ஏறுவதற்கு முன்னரே விவாகரத்து பெற்ற திருமணம் என சிவத்தம்பி வர்ணிக்கிறார். பெரியாரை விட்டு அண்ணா பிரிவதற்கும் இதுவே மிக முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார். “பிராமணர் எதிர்ப்பு என்ற நிலையை திராவிடர் கழகம் எடுத்தபோது, அண்ணாவின் நிலை வேறு. மக்களின் சமூகப் பொருளாதார துன்பங்களை களைவதற்கு மொழி, கலாச்சாரம் என்ற அடையாளத்தை அவர் உயர்த்திப் பிடித்தார். அண்ணாவின் ‘பணத்தோட்ட’ த்தை இளைஞனாக நான் இருந்த போது படித்த ஞாபகம் இருக்கிறது. நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சமத்துவத்தைப் பற்றி அண்ணா அதில் எழுதியிருப்பார். சமூக சமத்துவம் மட்டுமல்ல பொருளாதார சமத்துவமும் வேண்டும் என்ற அண்ணாவின் கோரிக்கைதான் பட்டி தொட்டியயங்கும் சென்றடைந்தது.” என சிவத்தம்பி தெளிவுப்படுத்துகிறார்.
திராவிட இயக்கத்தின் சமூக, அரசியல் வேலைப்பாடுகள் பற்றி சிவத்தம்பி வியந்து கூறுகிறார்; “இன்னமும் கூட திராவிடக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணம் பெரியாரும், திராவிட முன்னேற்றக் கழகமும் செய்த அரசியல் வேலைகளும், திரட்டல்களும், அதனால் தமிழகத்தில் ஏற்பட்ட சமூகக் கலாச்சார எழுச்சியும்தான். தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் எல்லோருமே தங்கள் இதயத்தில் பெரியாரை ஏந்தியிருக்கிறார்கள். தங்களின் இந்த உன்னத நிலைக்குக் காரணம் பெரியார்தான் என உறுதியாக எண்ணுகிறார்கள். திராவிட இயக்கம் தமிழ் மக்களின் மொழியையும், அவர்களது கலாச்சாரத்தையும், எண்ணத்தையும் பிரதிபலித்ததால் மக்களையும் தன் பாதையில் அணிதிரட்ட முடிந்தது.”
திராவிட இயக்கத்தின் சாதனைகளையும், வேதனைகளையும் சிவத்தம்பி பட்டியலிடுகிறார்; “திராவிடம் என்ற கருத்தாக்கத்திற்கு ஒரு சிறு சேதாரம் கூட ஏற்படுத்தாமல் அகில இந்திய அளவிலும் தங்களது முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆரும், மு.கருணாநிதியும் நிறுவி இருக்கிறார்கள். முக்கியமாக மு.கருணாநிதியைப் பற்றி சொல்ல வேண்டும். தமிழ் என்றும், சங்க காலம் என்றும் சொல்லிக்கொண்டு அகில இந்தியக் கூட்டணிகளிலும் முக்கியத்துவம் பெற்ற நபராக அவரால் விளங்க முடியும்! அவருடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மிகப்பெரும் ஊடக சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார்கள். மொழியின் பெயரால், திராவிட இனத்தின் பெயரால் நடத்தப்பட்ட இயக்கத்தில் அதன் உயிர் மூச்சாக விளங்கிய அடிமட்டத் தொண்டனுக்கு என்ன பலன்? இதுதான் முக்கியமான பிரச்சினை. திராவிட இயக்கத்திலிருந்து வருகிற எம்.எல்.ஏ, எம்.பி.க்களைப் பாருங்கள். அண்ணா வகுத்துத்தந்த, கடைசி வரை கட்டிக்காத்த கொள்கைகளை பிரதிபலிப்பவர்களாக அவர்கள் இல்லை. திராவிட இயக்கம் தனக்கென பொருளாதாரக் கொள்கைகளை திட்டங்களை என்றைக்கும் கொண்டது கிடையாது. நிலப்பகிர்வு சம்பந்தமான எந்தத் திட்டங்களும் இல்லை. மாணிக்கவாசகர் காலத்தைப் போன்றே இப்போதும் கூட தமிழகத்து கிராமங்கள் வெள்ளச்சேதம் ஏற்படும் பகுதிகளாக தொடர்ந்து இருந்து வருகின்றன. திராவிட இயக்கங்கள் வரலாற்றின் அடுத்தக்கட்ட நகர்த்தலுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை. கம்யூனிசம் நோக்கிய அடுத்தக்கட்ட நகர்த்தல்களை அண்ணாவும், அவரது தம்பிகளும் செய்யவில்லை. மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பவர்கள் என கம்யூனிஸ்டுகளை பார்த்து கேலி பேசும் அண்ணா, பொதுவுடைமைப் பூங்கா என பேசிய அண்ணா, பணத்தோட்டம் எழுதிய அண்ணா தனது உள்ளத்தில் கம்யூனிசக் கருத்துக்களை, எண்ணங்களை, விதைகளை தேக்கி வைத்திருந்தாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அதை செயல்படுத்த முடியவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பது வரை அது நின்றுவிட்டது. ஆனால் ஆட்சியாளர்கள் பெரும் சொத்து சேர்த்துவிட்டார்கள். அண்ணா முதல்வரான போது எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. தன் மனத்திலிருத்திய சமத்துவத்தை அடைய உண்மையிலேயே அவர் முயற்சிகள் செய்தார். துரதிருஷ்டவசமாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து மாறுபாடுகள் அவரது செயல்பாட்டை தடுத்தன. கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியிடம் அண்ணா வேதனையோடு கூறினார்;‘எதிர்பார்த்ததற்கு வெகு முன்னதாகவே தி.மு.க அதிகாரத்திற்கு வந்துவிட்டது’.
திராவிட இயக்கத்தின் உள்ளார்ந்த வெற்றிடங்களையும், இயலாமைகளையும் சிவத்தம்பி பொருத்தமாக எடுத்து வைக்கிறார்.
“புதுமைப்பித்தன் போல, ஜெயகாந்தன் போல, சு.ரா.போல, லா.ச.ரா போல படைப்பிலக்கியவாதிகளை திராவிட இயக்கம் உருவாக்கவில்லை. ‘செவ்வாழை’ படைத்த அண்ணாவே திராவிட இயக்கத்தின் கடைசிப் படைப்பிலக்கியவாதி. அரசியல், சமூகப்பிரச்சாரத்திற்கு தமிழ்நாட்டின் தெருக்கூத்தை திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கேரள, கர்நாடகத்தில் கதகளியும், யக்சகானாவும் சமுதாய அடையாளங்களாக இருக்கும் போது, சமற்கிருத கலப்பற்ற தெருக்கூத்து தமிழ்நாட்டில் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. பிராமண எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு கொள்கைகளை தங்களின் அடித்தளங்களாகக் கொண்டிருந்த சுயமரியாதை, திராவிட இயக்கங்கள் பிராமணரல்லாத பிற எல்லா சாதிகளின் சமத்துவம் என்ற அடிப்படைத் தளத்தை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நீதிக்கட்சியும் இந்த முரண்பாட்டைத் தீர்க்கவில்லை. அதுமட்டுமல்ல. பிராமணர்கள் தங்களோடு ஆட்சியில் இணையவில்லை என்பதற்காக வருத்தமும் பட்டுக்கொண்டனர். ஆனால் சாதி அடுக்கில் தங்களுக்குக் கீழானவர்களோடு தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள நீதிக்கட்சிக்காரர்கள் தயாராக இல்லை. நீதிக்கட்சியும், பிராமணரல்லாதார் இயக்கமும் திராவிட இயக்கத்தின் பொருளாதாரக் கொள்கையைத் தீர்மானித்தன. நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. சாதிப்பிணக்குகளும், சாதிக்கணக்குகளுமே அவர்களுக்கு மிக முக்கியமாக இருந்தன. சாதியக்கணக்குகளில் கவனமாக இருந்தவர்கள் தனியார்மயத்தைப்பற்றி வாய் திறக்கவில்லை. பொதுத்துறை பலவீனமாக்கப்பட்டால் ஒட்டு மொத்த அடித்தளமும் நொறுங்கிப்போகும். உலகமயத்தின் நாசகாரப்போக்கை அவதானிக்க அவர்களால் முடியவில்லை. திராவிட இயக்கத்தின் மிகப்பெரும் முரண்பாடு இது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் முற்போக்கான முன்னெடுப்பு இல்லாமல் தேங்கிப்போயுள்ளது”.
திராவிட இயக்கத்தலைவர்களின் வர்க்க நலன்கள் பற்றியும் சிவத்தம்பி ஆராய்கிறார்; “ திராவிட இயக்கத்தின் இன்றைய நிலைமைக்கு வர்க்க குணம் கொண்ட தலைவர்கள்தான் காரணம் என நான் சொல்லமாட்டேன். திராவிட இயக்கத்தின் தலைவர்கள் எல்லோரும் மிக சாதாரணமான நிலையிலிருந்து மேல்நிலைக்கு வந்தவர்கள். கலைஞர் அடிப்படையில் மிகப்பெரும் மூலதனம் உடையவர் என நீங்கள் கூற முடியாது. திருக்குவளையின் மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய இன்றைய நிலை ஆச்சரியப்படத்தக்கது. பிரம்மாண்டமானது. ஆனால் இவர்கள் அரசியல் சமத்துவத்திற்குப் பிறகான பொருளாதார சமத்துவத்தை ஏற்க மறுப்பவர்கள். அரசியல் அதிகாரத்தை ஏற்ற பின்னர் வர்க்க நலன்களுக்குள் புதைந்து போவார்கள். இத்தகைய சாதிய-வர்க்க தொடர் இணைப்பை, சாதிய-வர்க்க முரண்பாட்டை கெயில் ஓம்வெத் போன்ற அறிஞர்கள் விரிவாக விவாதித்துள்ளனர். வர்க்க நலன்களுக்கு சாதகமாக சாதி பயன்படுத்திக்கொள்ளப்படும் போது இவர்கள் நேரடியாக வர்க்கத்திற்குள் சென்று விடுகின்றனர். நம்முடைய சமுதாயம் அடிப்படையில் ஒரு படிநிலைச் சமுதாயமாக இருப்பதால் சாதிதான் படிநிலையின் ஆரம்பத்தில் இருக்கிறது. ஆனால் நவீனத்துவ காலத்தில் படிநிலையின் அலகு பொருளாதாரமாக மாறுகிறது. படிநிலையின் உச்சத்தை ஒருவர் தொடும் போது அவருக்கு சமூக, பொருளாதார அதிகாரங்கள் மிக மிக அவசியமாகின்றது. நீங்கள் அவர்களைக் குற்றம் சொல்லக்கூடாது. அவர்களைப் பொறுத்தவரை சமூக இயக்கம் என்பது வேறு வர்க்கத்துக்குச் செல்வது. அவர்களுக்கு அதை பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் நிலப்பிரபுக்களாக மாறுவதில்லை. தொழில் கட்டும் பெரும் முதலாளிகளாக மாறுகிறார்கள். அவர்கள் மாறும் போது அவர்கள் சார்ந்த சாதிகளின் தொன்மங்களும் மாறுகிறது. முழு ஊடகமும் அவர்கள் கைகளில் உள்ளது. இதுதான் வர்க்க நலன். அந்த வர்க்கத்தின் ஒரு உறுப்பினராக மாறும் மறுகணமே உங்களின் முழு எண்ணப்போக்கும் மாறிவிடும்.”
உலகமயச்சூழலுக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப பழக்கப்பட்டுப் போய்விட்ட நம் சந்ததிகள் பற்றி வருத்தமுடன் பேசுகிறார் சிவத்தம்பி; “நம்மை மேற்குலகத்திற்கு பணி ஒப்படைப்பு செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். பணி ஒப்படைப்பு என்றால் அவர்கள் தொழில் நுட்பத்தில் உயர்ந்த இடத்திலும், நாம் கடைக்கோடியிலும் இருக்கிறோம் என்பதை உணர மறுக்கிறோம். தற்போதைய உலகமயச்சூழலில் சமூக நீதிக்கானப் போராட்டம் என்பது உலகமயத்தை, தனியார்மயத்தை எதிர்த்து நடத்தக்கூடிய போராட்டமாகத்தான் இருக்க முடியும்”.
காலனிய காலத்தின் கட்டாயத்தின் பேரில் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமும் சரி, திராவிட இயக்கமும் சரி தங்களது காலனிய மனப்பான்மையை இன்னமும் முழுமையாக மாற்றிக்கொள்ளவில்லை என சிவத்தம்பி சாடுகிறார். திருக்குறள், சங்க காலம் என்றெல்லாம் பெருமை பீத்திக்கொள்ளும் நம்மால் தமிழைப் பயிற்று மொழியாகக்கூட மாற்ற முடியவில்லை எனக் கேலி செய்கிறார். கன்னடர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கன்னடத்திலும், மலையாளிகள் தங்கள் குழந்தைகளுக்கு மலையாளத்திலும் கல்வி கற்பிக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழில் ஏன் கல்வி கற்பிக்கப்படவில்லை என நம்மை கேள்வி கேட்கிறார்.
“இன்னமும் நாம் காலனிய மனநிலையில் இருக்கிறோம். ஆங்கில உலகத்துக்குள்ளாக தமிழ் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். அதனால்தான் நம் குழந்தைகளுக்குக்கூட தமிழை மறுக்கிறோம். சமற்கிருத ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்க வேண்டும் என்பதே நம் பேச்சாக உள்ளது. பிரிட்டிஷாரின் மிச்ச சொச்சமான ஆங்கிலத்திலிருந்து நாம் மீட்கப்படும் போது நம்முடைய அதிகார வர்க்கமும் இவ்வளவு மோசமானதாக இருக்காது. நம்முடைய உணர்வுகளுக்கு அது மதிப்பளிக்கும்” என்கிறார் சிவத்தம்பி.
திராவிட இயக்கம் ஓட்டுக்கட்சிகளாக தேய்ந்து போனது பற்றி சிவத்தம்பி போட்டுடைக்கிறார்; “திராவிட இயக்கத்தை தமிழ் தேசியத்திற்குள்ளாக மட்டும் பார்க்காமல், இந்திய தேசியத்திற்குள்ளாக மட்டும் பார்க்காமல் இன்னும் விரிவாக அது எப்படி காலனியத்தின் குழந்தையாக இருந்தது, தவழ்ந்தது, காலனியத்திற்குப் பின் தமிழ்நாட்டில் அது எப்படி முக்கிய சக்தியாக பரிணமித்தது, காலனியத்திற்குப் பிறகான தமிழ்நாட்டிற்கு அது எத்தகையப் பங்களிப்பைச் செய்தது? எனப் பார்க்கும் போதுதான் நீங்கள் பார்க்கலாம். 1967 முதல் எந்த முதலமைச்சரும் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வரவில்லை. சமுதாயத்தில் காணப்பட்ட பிளவும், விரிவும் சரி செய்யப்படவில்லை. மேடும், பள்ளமும் நிரவப்படவில்லை. இதிலிருந்துதான் தலித் இயக்கம் பிறக்கிறது. திராவிட இயக்கத்தின் வலிமையான இழைகள் பலமிழக்கும் போதுதான் வன்னியர் இயக்கம் தோன்றுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி தோன்றுகிறது.
இன்னமும் கூட திராவிட இயக்கம் தமிழ் மக்களுக்கு கொஞ்ச நஞ்சம் முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் அவர்கள் கையில் ஓட்டு இருப்பதனால்தான்!”
உலகத் தமிழ் மாநாடுகளைப் பொருத்தவரை சிவத்தம்பிக்கு பல கசப்பான அனுபவங்கள் உண்டு. சனவரி, 1981-ல் மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழ் மாநாட்டின் போது பொது அமர்வுக் கருத்தரங்கத்தில் திரை நடிகரும் அன்றைய முதல்வருமாயிருந்த எம்.ஜி.ஆர் பற்றிய அவரது கட்டுரை மாநாட்டுக்குழுவினரால் நிராகரிக்கப்பட்டது. கட்டுரைகள் எதுவும் முகம் பார்த்து தேர்வு செய்யப்படவில்லை, அதன் தரம் பார்த்தே தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன என்று மேடையில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் பெரியவர் வ.சுப்பையாபிள்ளை சொன்ன போது,‘இல்லை, பொய் சொல்கிறீர்கள். இவரின் கட்டுரையை யாரின் முகவரியை காக்க நீக்கினீர்கள்?’ என்று பேராசிரியர் முனைவர் மு.ராமசாமி அவரிடம் சண்டையிட்டதும் தனிக்கதை. 1995-ல் நடைபெற்ற தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டின் போது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் எனக் குற்றம் சுமத்தப்பட்டு சிவத்தம்பி வெளியேற்றப்பட்டார்.2010-ல் நடைபெற்ற கோவை செம்மொழித் தமிழ் மாநாட்டின் போது தமிழக அரசால் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டார். சுய விருப்பமற்று மாநாட்டில் பங்கெடுத்த சிவத்தம்பியின் சோர்வும், உற்சாகமின்மையும் அவரை அறிந்தவர்களால் மட்டுமே உணர முடிந்தது. தமிழறிஞர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதற்கு மேற்சொன்ன நிகழ்வுகள் சாட்சி.
ஈழத்தமிழர்கள் மிக மோசமாக இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர், கோலாகலமாக நடைபெற்ற கோவை செம்மொழி உலகத் தமிழ் மாநாட்டிற்கு வருகை தர சிவத்தம்பி ஒப்புக்கொண்டமையும், ‘ஒவ்வொரு தமிழனையும் தன்னை ஒரு இலங்கையனாக, ஒவ்வொரு இலங்கைத் தமிழனையும் தன்னை ஒரு தமிழனாக உணரச் செய்வதுதான் முற்போக்கு இலக்கியத்தின் பணியாக இருக்க முடியும்’ என்ற அவரது சமீபத்திய பேட்டியும் அவரது ஆன்மபலத்தில் ஏற்பட்ட குறைபாடாகவும், அவரது தடுமாற்றமாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய சோகம் என்ன தெரியுமா? சிவத்தம்பியின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு சம்பிரதாய இரங்கல் கூட தெரிவிக்காததுதான். சிவத்தம்பி தான் வாழ்ந்த நாட்டிற்கு விசுவாசமாக இருந்தார். தன் தாய் மொழி தமிழுக்கு உயிர் போகும் வரை சேவைகள் செய்தார். பிறரை வெறுக்காமல் தமிழினத்தை நேசித்தார். அவரோடு முரண்பட நமக்குப் பல காரணங்கள் இருந்தாலும் அவரை நேசிக்க, அவரது தமிழை சுவாசிக்க எந்தத் தடையும் இருக்க முடியாது.
------------------------------------
அம்ருதா,ஆகஸ்ட்,2011
No comments:
Post a Comment