Sunday, 30 October 2011

பசுமை வேட்டையாடும் நீதி

                                                 
                                  
                எவருமே எதிர்பாராத வண்ணம் டாக்டர் பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை தரப்பட்டிருக்கிறது. ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தேசத் துரோகியான  பினாயக்சென் ராய்ப்பூர் சிறைச்சாலையில் ஆயுள்தண்டனைக் கைதியாக்கப்பட்டிருக்கிறார். கொலை குற்றவாளிகளைப் போல தனிமைச்சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் சதீஸ்கர் மாநிலத்துப் பழங்குடி மக்களுக்கு சேவை செய்தே தேய்ந்துபோன அவருக்கு நீதிமன்றம் சரியான தண்டனையைத்தான் கொடுத்திருக்கிறது. சிறைப்பட்டிருக்கும் மாவோயிஸ்டுகளின் தலைவர் நாராயன் சன்யாலுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளைத் தருவதற்காக டாக்டர்  பினாயக் சென் அவ்வப்பொழுது ராய்ப்பூர் சிறைக்குச் செல்வதுண்டு. சன்யாலின் கைக்குத் தேவைப்படும் அறுவை சிகிச்சைக்காகவும், அவரது குடும்பத்தினரின் மிகுந்த அக்கறையோடு கூடிய வலியுறுத்தலினாலும்தான் டாக்டர்  பினாயக் சென் அடிக்கடி சன்யாலை சந்திக்க நேர்ந்தது. அவ்வாறு சந்திக்கும் போது கூட என்ன பேச்சு பரிமாறப்பட்டது என்பதை சிறைக்காவலர்கள் உன்னிப்பாகக் கவனித்தும் வந்தனர். சந்திப்புக்கு முன்னும், பின்னும் பலமான சோதனைகளும் நடத்தப்பட்டன. அப்படி இருக்க சன்யால் தந்த கடிதங்களை மாவோயிஸ்ட்டுகளிடம் சேர்ப்பிப்பதற்காக மேற்கு வங்க வியாபாரி பியூஷ்குகாவிடம் டாக்டர்  பினாயக் சென் கொடுத்தார் என்பதுதான் அவர்மீதான தேசத் துரோக குற்றச்சாட்டு.

                நமது நீதி வழங்கும் அமைப்பை நினைத்துப் பார்க்கும் போது சில நேரங்களில் சிரிப்பு வரும். பல நேரங்களில் வேதனைதான் மிஞ்சும். சட்டப்புத்தகங்களின் அட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரே நேர்க்கோட்டு பாதையில் நீதி பயணிக்குமானால் அது மக்களுக்கு உண்மையான நீதியைத் தரமுடியாது. எனவேதான் நீதிபதிகளுக்கு அறநெறிகளும், மனசாட்சியும் கட்டாயத்தேவைகள். குறைந்த பட்சம் தங்கள் முன்னோர் வழங்கியுள்ள தீர்ப்புகளின் மனசாட்சிகளையாவது பற்றிக்கொள்ள வேண்டும்.


                டாக்டர்  பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நோக்கும் போது நீதித்துறையும் பசுமை வேட்டையில் தனது பங்கை செலுத்தியுள்ளதோ என்றுதான் சந்தேகப்பட வேண்டியுள்ளது. தராசின் முள்ளாக இருக்க வேண்டிய நீதிமன்றம் டாக்டர்    சென்னை குத்திக்கிழித்ததுதான் சோகத்தின் உச்சம்.


                குகாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட  கடிதங்களின் உண்மைத் தன்மை ஒருபுறம் இருக்கட்டும். பசுமை வேட்டையாடப்படும் மக்களின் அடிப்படையான பிரச்சினைகளுக்குரிய தீர்வை நோக்கி கவனம் எதுவும் செலுத்தாத மத்திய, மாநில அரசுகள் நிராயுதபாணியான ஒரு எளிய மனிதரை துரத்தி, துரத்தி பழிவாங்க முயல்வதின் அர்த்தம் சாமானிய மனிதர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அரசையும், அதன் அடிப்படைப் பண்புகளையும் புரிந்துகொண்டுள்ள ஒருவருக்கு இது ஒன்றும் புரியாத புதிர்   
அல்ல. பசுமை   வேட்டைக்கு    எதிர் வரிசையில் நின்று மனித   உரிமைகளுக்காகவும், நாட்டின் வளங்கள் கொள்ளை போகாமல் தடுப்பதற்காகவும், சில நேரங்களில் அரசுக்கு எதிராகவும், சில நேரங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும், மொத்தத்தில் அறநெறித் தளத்தில் நின்று குரல் கொடுப்போரையும், எழுதுவோரையும் இருண்ட அமைதியை நோக்கித்தள்ள அரசு செய்யும் முயற்சிகள்தான் இவையாவும்.தண்டேவாடா பகுதியில் பணிபுரிந்த காந்தியவாதியான ஹிமான்சுகுமாரின் ஆசிரமம்கூட அதற்காகத்தான் இடித்துத் தள்ளப்பட்டது.

                நோம்சாம்ஸ்கி, ரோமிலாதாப்பர், அமர்த்தியாசென், முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிந்தனையாளர்களும், அறிஞர்களும் தண்டனை குறித்து அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். டாக்டர் சென் மிக விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டம் கேலிக்கூத்தாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என அமர்த்தியாசென் வேதனைப்பட்டிருக்கிறார். நாடு முழுவதும் மனித உரிமை அமைப்புகளும், மக்கள்  இயக்கங்களும் பினாயக்சென்னிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்துகிறார்கள். பல உலக நாடுகளிலும் கூட கண்டனக்குரல்கள் எழும்பியிருக்கின்றன. எதிர்ப்பார்த்ததுபோல பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மெளனம் சாதிக்கின்றன.

                பசுமை வேட்டையையயாட்டி தோற்றுவிக்கப்பட்ட எதிர் மாவோயிஸ்ட் படைகளான சல்வாஜூடுமையும், அதன் அக்கிரமமான செயல்களையும் காட்டமாக எதிர்த்தவர் டாக்டர் பினாயக்சென். பிரச்சனை என்பது பினாயக்சென்னின் ஆயுள் தண்டனை அல்ல, பெரு முதலாளிகளுக்கு நிலங்களை மட்டுமல்ல மலைத்தொடர்களையே தாரை வார்க்கும் அரசின் போக்குதான். வெளியேறிய, வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்ப முடியவில்லை. மலை வளமும், பழங்குடி மக்களின் நலமும் காக்கப்படுமானால்  டாக்டர் சென்னிற்கும், ஹிமான்சுகுமாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் அங்கே என்ன வேலை இருக்க முடியும்? பாக்சைட் உள்ளிட்ட கனிம வளங்களுக்காக காடுகளும், மலைகளும் சூறையாடப்பட்டு அவ்விடங்களை கார்ப்பொரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் முடிவுகள் எவ்விதத்தில் நியாயம்? காந்திய வழிகளில் பணிபுரியும் டாக்டர் பினாயக்சென்னையும், ஹிமான்சுகுமாரையும் அரசு வேறு வழிகளில் அச்சுறுத்தும் போது நிலைமை மோசமடைவதற்கு மட்டுமே அது இட்டுச்செல்லும் என அரசுகள் ஏன் புரிந்துகொள்ள வில்லை?

                ஆங்கிலேய அரசு நமக்கு தந்துவிட்டு போனதுதான் இந்த தேசத் துரோக தொழுநோய் சட்டம். அவர்கள் தொழுநோயிலிருந்து குணமாகிவிட்டார்கள். ஆனால் நம் நாட்டை இத்தொழுநோய் அரித்து தின்றுகொண்டிருக்கிறது. நம்மை ஆளும் அரசை எதிர்த்துப் பேசவும், அதன் கொள்கைகளை மறுத்துப் பேசவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் குடிமக்களுக்கு உள்ள உரிமைதான் ஒரு நாட்டில் ஜனநாயகம் நீடித்து நிலைப்பதற்கான அடிப்படை தேவை. அப்படி மறுத்துப்பேச, எதிர்த்துப் போராட ஒருவர் கிளம்பினால் அவர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படும். நீதிமன்றமும்   அதற்கு   உதவி செய்யும்.                      மாவோயிஸ்டுகளை நாம் ஆதரிக்கவில்லை. மாவோயிஸ்டுகளை பழங்குடி மக்கள் ஆதரிப்பதை அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் அடிப்படையான சுகாதார வசதிகளை அவர்களால் பெற இயலவில்லை. டாக்டர் சென் அத்தகைய அடிப்படை மருத்துவ உதவிகளை பழங்குடி மக்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் தந்தார். பல்லாயிரக் கணக்கான மருத்துவர்கள் ஆண்டுதோறும் மருத்துவப்பட்டம் பெற்று வெளி வந்த போதிலும் கிராமப்புறங்களை சீண்டிப்பார்க்க அவர்கள் அஞ்சும் நிலையில் மலைப்புறங்களுக்குச் சென்று பழங்குடிகளுக்கு மருத்துவம் செய்ய யாருக்கும் துப்பில்லை. தங்கள் தெய்வமாக டாக்டர் சென்னை பழங்குடி மக்கள் கருதினாலும், மாவோயிஸ்டுகள் அவரைப் பாராட்டினாலும் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறையை அவர் எப்போதும் ஆதரித்தது கிடையாது. அவர் வகுத்துத் தந்த சுகாதாரத் திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் முன் மாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. நியாயமாக அவருக்கு பாரத ரத்னா விருதுதான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 1897-ல் திலகருக்கும், 1922-ல் காந்தியடிகளுக்கும் தரப்பட்ட தேசத் துரோகச் சட்டம்தான் அவருக்கு பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அப்பாவிப் பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களது குடிசைகளை கொளுத்திவிட்டு, அவர்களை தங்களது முகாம்களில் அடைத்து வைத்துள்ள அரசுப் படைகளும், சல்வாஜூடுமும் செய்தவை மட்டும் தேச சேவைகள்!!.

                கேலிக்கூத்தான இவ்வழக்கு விபரங்களைப்பற்றி பார்ப்போம். மாவோயிஸ்டுகளின் தலைவர் சன்யாலை சிறையில் பினாயக்சென் சந்தித்த போது அவரிடமிருந்து கடிதங்கள் பெறப்பட்டு, பின்னர்அதனை பியூஷ்குகா என்ற மேற்கு வங்க வியாபாரியிடம் மகிந்திரா ஹோட்டலில் தந்தார் என்பதும், மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதம் ஒன்று டாக்டர் சென் வீட்டில் இருந்தது என்பதும், “ருபான்தார்என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி டாக்டர் சென்னும், அவரது மனைவியும் நகர்ப்புற மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார்கள் என்பதும், தேடப்படும் பெண் மாவோயிஸ்டான அமிதாஸ்ரீவஸ்தவா என்பவருக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பினாயக்சென்னின் மனைவி இலினாசென் வேலை வாங்கி தந்தார் என்பதும், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான  ISI- க்கு மின் அஞ்சல் ஒன்றை இலினாசென் அனுப்பினார் என்பதும், ஒரு வீடியோ பதிவில் காட்டியுள்ள படி மாவோயிஸ்டுகளிடம் சென் உரையாடிக்கொண்டிருந்தார் என்பதும், மாவோயிஸ்டுகளின் மறைவிடங்களுக்கு சென்னும், அவரது மனைவியும் சென்று வந்தார்கள் என்பதும் டாக்டர் பினாயக்சென் மீது சுமத்தப்பட்டுள்ள தேசத் துரோக குற்றச்சாட்டின் அடிப்படைகள். அக்குற்றச்சாட்டுகளும், அதை நிரூபிக்க அரசுத் தரப்பு செய்த முயற்சிகளும் கற்பனையோடு கூடிய நகைச்சுவை நாடகமாக நம் கண்முன் விரியும்!

                பினாயக்சென் தனிப்பட்ட முறையிலோ, டாக்டர் என்ற முறையிலோ அல்லாமல் பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் என்ற முறையில், பி.யு.சி.எல்.அமைப்பின் முத்திரையுள்ள அனுமதி கடிதத்தோடுதான் 33 தடவை சன்யாலை சந்தித்துள்ளார். நாராயன் சன்யாலின் உடல்நிலை குறித்த உரையாடல்தான் பெரும்பாலும் நடந்துள்ளது. கடிதங்கள் பரிமாற்றம் செய்துகொள்ளும் வாய்ப்புகள் அறவே இல்லை என சிறைத்துறை  அதிகாரிகள் இருவர் சாட்சியம் அளித்துள்ளனர். சென்னும், குஹாவும் மஹிந்திரா ஹோட்டலில் சந்தித்தனர் என்பதை அந்த விடுதியின் உரிமையாளரும், மேலாளரும் மறுத்துள்ளனர். டாக்டர் சென்னின் வீட்டில் நடந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்ற குறிப்பேட்டிலும், ஆவணங்களிலும் சென்னின் கையயழுத்தும், விசாரணை அதிகாரியின் கையயாப்பமும், போலீஸ் தரப்பு சாட்சியங்கள் இருவரின் கையயாப்பமும் இருக்க, மாவோயிஸ்டுகளால் சென்னிற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் கடிதத்தில் மட்டும் சென்னின் கையயழுத்தோ, விசாரணை அதிகாரியின் கையயழுத்தோ இல்லை. சென்னின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் வழக்கத்திற்கு மாறாக சீலிடப்படாத ஒரு பையில் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது, அதனால்தான் அக்கடிதம் தனியாகத் தயாரிக்கப்பட்டு பின்னர் அப்பையில் இடைச் செருகப்பட்டிருக்கலாம் என்ற சென்னின் வழக்கறிஞரின் வாதத்தை நீதிபதி வர்மா கண்டுகொள்ளவில்லை. ருபான்தார் என்பது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டு சென் மற்றும் இலினா சென்னால் நடத்தப்படும் ஒரு தொண்டு நிறுவனம். மத்திய, மாநில அரசுகள் அதற்கு நிதியுதவியும் செய்து வருகின்றன என்பதுதான் நாம் மிகவும் ரசிக்க வேண்டிய செய்தி. போலீசாரால் தேடப்படும் அமிதாஸ்ரீவஸ்தா என்ற மாவோயிஸ்டும், இலினா சென்னால் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக சேர்த்து விடப்பட்ட அமிதா ஸ்ரீவஸ்தாவும் பெயர் ஒற்றுமை கொண்ட இருவேறு நபர்கள் என நிரூபிக்கப்பட்டுவிட்டது. இலினா சென் பாகிஸ்தானின் ISI-க்கு மின்னஞ்சல் அனுப்பவில்லை. Indian Social Institute (ISI)-க்கு அனுப்பியுள்ளார். சல்வா ஜூடுமால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களிடையே சென் உரையாடிய காட்சிப்பதிவைதான் அவர் மாவோயிஸ்டுகளுடன் உரையாடியதாக போலீசாரால் திரித்துக்கூறப்படுகிறது என்பதை அப்படக் காட்சியை எடுத்த வீடியோ பதிவாளரைக் கொண்டு சென்னின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் நிறுவினார். மாவோயிஸ்டுகளின் மறைவிடங்களுக்கு சென்னும், அவரது மனைவி இலினாவும் சென்று வந்ததாக யாரோ கூறினார்கள், நாங்கள் நேரில் பார்க்கவில்லை என இதில்  சம்மந்தப்பட்ட இரு போலீசார் தெரிவித்துவிட்டனர்.

                இப்படியான வழக்கு விசாரணை, கேலிக்கூத்துகளுக்கு மத்தியில்தான் டாக்டர் சென் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

                2005, 06-ம் ஆண்டுகளில் சதீஸ்கர் பி.யு.சி.எல்-ன்  செயலாளராக டாக்டர் சென் இருந்த போது அரசால் ஆதரிக்கப்பட்ட சல்வாஜூடும் குண்டர்படை ஆதிவாசி மக்களின் மேல் ஏற்படுத்திய சேதத்தை வெளி உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். சதீஸ்கர் மாநில அரசுக்கும், கார்ப்பொரேட்டுகளுக்கும் இடையே கையயாப்பமிடப்படும் ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியும் அம்பலப்படுத்தினார். மாநிலத்தில் நடக்கும் மோதல் கொலைகள், கற்பழிப்புகள் மட்டுமின்றி காவலில் நடக்கும் லாக்கப் மரணங்களையும் கூட வெளிப்படுத்தினார். அதனால் கோபமடைந்த அப்போதைய சதீஸ்கர் காவல்துறைத் தலைவர் ரத்தோகிபி.யு.சி.எல் அமைப்பு சரியாகக் கவனிக்கப்படும்என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் 2007-ம் ஆண்டு மே மாதம் டாக்டர் சென் கைது செய்யப்படுகிறார்.          
                                       பியுஷ்குகாவும், டாக்டர் சென்னும் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி வர்மா குறிப்பிடுகிறார். அரசாங்கத்திற்கு எதிராகப் போரை தொடுத்துள்ளார்கள் என்றக்குற்றச்சாட்டிலிருந்தும் அவர்களை நீதிபதி விடுவித்திருக்கிறார். மீதமுள்ள ஒரே குற்றம் அவர்கள் மாவோயிஸ்டுகள் சம்மந்தப்பட்ட சஞ்சிகைகளையும், நூல்களையும் வைத்திருந்தார்கள், பரப்பினார்கள் என்பதுதான். இந்த சஞ்சிகைகள்தான் மத்திய, மாநில அரசுகளுக்கு அபாயகரமானதாக மாறியுள்ளனவா? நாட்டின் கருத்து சுதந்திரத்தை வேரடி  மண்ணோடு சாய்ப்பதற்கு ஒரு முன்னுரைதான் இத்தகைய குற்றச்சாட்டுகள். ஏதோ ஒரு தருணத்தில் நாட்டின் அரசியலில் ஈடுபாடுடைய எழுதப்படிக்கத்தெரிந்த அனைவருமே இடது சார்பு கண்ணோட்டமுடைய எழுத்துக்களை படிக்க நேர்ந்திருக்கும். அப்படி பார்த்தால் பல லட்சக்கணக்கான மக்களின் மேல் தேச விரோதச் சட்டம் பாய்ச்சப்பட வேண்டி வரும்.

                தேச துரோகச்சட்டம் சம்மந்தமாக உச்சநீதிமன்றம் 1962-ல் கேதர்நாத் வழக்கில் ஒரு வழிகாட்டும் தீர்ப்பில்அரசுக்கு எதிராக சாதாரணமாக பேசுபவர்களையோ, எழுதுபவர்களையோ இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடாது. ஆயுதங்களை கொண்டு வன்முறை விளைவித்து அரசை கவிழ்க்கும் எண்ணம் கொண்டு செயல்புரிபவர்களை மட்டுமே இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டணை வழங்கப்பட வேணடும்!’ எனத் தெளிவாக கூறியுள்ளது.

                ஒருவன் வெளியுலகில் ஒருநாள் முழுமையாக வாழ்ந்திருந்தால் போதும். அவனால் நூறு வருடங்கள் கூட சிறையில் இருக்க முடியும் என்றுஅந்நியனி’ல் ஆல்பெர் காம்யு சொல்லியிருப்பார். இந்தியாவின் மையத்தில் வசிக்கும், இந்தியாவின் மையமாகவும் விளங்கும் ஆதிவாசி, பழங்குடி மக்களுடன் 1980-களின் தொடக்கம் முதல் தன்னையும், தன் குடும்பத்தாரையும் இரண்டற இணைத்துக்கொண்டு மருத்துவ, சமூகப்பணியாற்றி வரும் டாக்டர் பினாயக்சென் முப்பது வருடங்களுக்கும் மேலாக யாருமே வாழாத முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். அவருக்கு சிறை வாழ்க்கை ஒரு பொருட்டே அல்ல. அதற்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைக்கொடுமையை எப்படி நியாயப்படுத்திட முடியும்? இவ்வுலகத்தை பல நூறு தடவை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதற்காக அவ்வாறு செய்துவிட முடியுமா என்ன?

                தனது குழந்தைகளை தானே கொன்றவள் என்ற கலங்கத்தை இந்தியத் தாய் அடைந்துவிடக் கூடாதுஎன்று உச்சநீதிமன்றம் மாவோயிஸ்டு தலைவர் ஆசாதின் என் கவுண்டர் வழக்கில் கூறியிருப்பது நமக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. அத்தாயின் தலைமகன் டாக்டர் பினாயக்சென்னை உச்சநீதிமன்றம் மீட்டெடுக்கும் என்று உலகமே எதிர்பார்க்கிறது. 
                                                            ------------------------------
அம்ருதா,பிப்ரவரி-2011


  

                 
                                                  
      

No comments:

Post a Comment