இறுதியாக ஜூலியன் அசாஞ்சேவின் கைதுப்படலம் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க அரசின் மிகவும் வேண்டப்பட்ட குற்றவாளியான விக்கிலீக்ஸின் அசாஞ்சேவை சுவீடன் நாட்டில் செய்த குற்றம் ஒன்றிற்காக லண்டன் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.ஒரு வாரம் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவர் சுதந்திரமாக இயங்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் அமெரிக்க அரசு துண்டித்து அவரை நாலா புறமும் சுற்றி வளைத்தது. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை, அற்பமானவை என உலகுக்கு நிரூபிக்கும் விதமாக போலீசார் கைது செய்யும் வண்ணம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். அசாஞ்சே உலக அரசுகளின் கயமைத்தனங்களையும், அமெரிக்க அரசின் போக்கிரித்தனத்தையும் உலகறியச் செய்தவர். சொல்லப்போனால் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் ரகசியமானவையே அல்ல. இலங்கையில் ஈழத் தமிழர்களை ராஜபக்சேவும், அவரது சகோதரர்களும், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் படுகொலை செய்தனர் என்று அது வெளியிட்டுள்ள செய்தி என்ன ரகசியமானதா? உலகமே மெளனமாக வேடிக்கைப்பார்க்க இலங்கையில் வெட்டி வீழ்த்தப்பட்டதே தமிழினம்! அரைகுறையாக நாம் அறிந்திருந்த பற்பல உலக அரசியல் உண்மைகள் முற்றும் சரிதானா என உரசிப்பார்க்க விக்கிலீக்ஸ் தகவல்கள் பெரிதும் பயன்பட்டன. உலக மீட்பராகத் தன்னை கருதிக் கொண்டு மிகையாக நடந்து கொள்ளும் அமெரிக்க அரசின் முகமூடிகளை கிழித்து எறிந்ததுதான் விக்கிலீக்ஸ் செய்துள்ள மிகப்பெரிய வரலாற்றுக் கடமை.
தங்குதடையின்றி செல்லும் தகவல்கள் எவ்வாறு ஒரு சமுதாயத்தை வலிமையுடையதாக மாற்றுகிறது என்பது பற்றியும், நாட்டின் குடிமக்கள் தகவல்கள் பெறும் போது அரசின் பொறுப்புணர்வு மட்டுமின்றி புதுப்புது கருத்துகளும், செயல்களும் அச்சமுதாயத்தில் உருவாக்கப்படுகிறது என்றும் தனது சீன விஜயத்தின் போது, அதாவது ஒரு வருடத்திற்கு முன்னர்தான் ஒபாமா கூறியிருந்தார். கூகுள் வலைத்தளத்தை சீனா அத்துமீறித் தாக்கிய போது 2010, ஜனவரி 21 அன்று ஹிலாரி கிளிண்டன் வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வலைத்தளங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பது பற்றி புகழ்மிக்க உரை ஒன்றை நிகழ்த்தினார். விக்கிலீக்ஸ் களேபரங்களுக்குப் பின்னர் அதே கிளிண்டன் சூளுரைக்கிறார்: “சட்டத்தை வளைத்தாவது அசாஞ்சேவுக்கு கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும்”. அசாஞ்சே கொலை செய்யப்பட வேண்டும் என்று கனடா பிரதமரின் முன்னாள் ஆலோசகர் தனது வலைப்பூவில் எழுதுகிறார். மேற்குலக நாடுகளின் போலித்தனமான ஜனநாயகத்தின் அடிப்பகுதியில் புதைந்துக் கிடக்கும் அவர்களின் கையாலாகாத்தனங்களையும், ஊழலையும், இராணுவ பலத்தைக் கொண்டு எதையும் சாதிக்கும் வெறித்தனத்தையும் விக்கிலீக்ஸ் மூலம் அசாஞ்சே வெளிக்கொணர்ந்ததை கிளிண்டன்களால் பொறுக்க முடியவில்லை.
தங்களைத் தவிர உலகில் பிறர் எல்லோருமே கோமாளிகள் எனக்கருதும் அமெரிக்க அரசு இன்று கோமாளியாய் உருமாறி உலகத்தின் முன் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறது.
வலைத்தளத்தின் சுதந்திரச் சின்னமாக இன்று ஜூலியன் அசாஞ்சே திகழ்கிறார். அவர் ஒரு ஊடகத் தீவிரவாதி என முத்திரையிட்டு சுட்டுக் கொல்ல அமெரிக்கா தயாராகிவிட்டது. சுதந்திரமான ஊடகமும், நியாயமான அரசும், மேற்குலக ஜனநாயகமும் வேண்டி சீனாவில் போராடி வரும் லியோ ஷியோபோவுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு கொடுக்கப்பட்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்வோமானால், அடக்கு முறைக்கு எதிராக, ஊடக சுதந்திரத்தை உயர்த்திப்பிடிக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் நோபல் விருது தரப்பட வேண்டும். ஒபாமாவுக்கு நோபல் பரிசு தரப்பட்டதன் பின்னணி பற்றிக்கூட விக்கிலீக்ஸ் ரகசியங்களை வெளியிட்டால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
அமெரிக்காவிடம் இன்னும் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கலாம். அது ஒரு ரகசியச்சுரங்கம். பிற நாடு, பிற தலைவர்கள், பிற மனிதர்கள் பற்றி மட்டுமல்ல, தனது நாட்டிற்குள்ளேயே நிகழும் அசிங்கங்கள் கூட அதற்கு ரகசியங்கள்தான். இத்தகைய ரகசியத் தகவல்களின் பின்னணியில்தான் சில முக்கிய இராணுவ முடிவுகளை எடுத்ததாக அது சொல்லிக் கொள்ளும். பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் சதாம்உசேன் வசம் ஏராளமாக இருப்பதாக பொய்த்தகவலை சர்வதேச சமுதாயத்திடம் சொல்லித்தான் ஈராக் நாட்டையே நிர்மூலமாகச் சிதைத்துப் போட்டது அமெரிக்கா. ஈரான், வடகொரியா நோக்கியும் தன் பார்வையை திருப்புவதுகூட தன்னிடம் உள்ள ரகசியங்களின் தூண்டுதலால்தான். ஒன்று அதனிடம் ரகசியங்கள் இருக்கும் அல்லது தன் தேவைக்கு ஏற்ப ரகசியங்களை அதுவாகவே உருவாக்கம் செய்யும். “உலகில் ஒவ்வொரு ரகசியமும் எனக்கு அத்துப்படி. என்னை மீறி ஒரு துரும்புகூட உலகில் அசைய முடியாது” என உலகுக்கு உரைப்பதற்காக அமெரிக்காவே கூட விக்கிலீக்ஸின் படைப்புக் கர்த்தாவாக இருக்கக்கூடும்.
இந்த உலகத்தில் கருத்து சுதந்திரம் உண்டா? இல்லையா? என்ற ஜூலியன் அசாஞ்சேவின் குரல் ஒலிப்பது இருக்கட்டும்! இவ்வுலகில் எங்கள் சொந்த மண்ணில் உயிர் வாழ உரிமை உண்டா? இல்லையா? என்ற ஈழத்தமிழர்களின் குரல் உலகெங்கும் ஒலிக்கத்துவங்கியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் இராணுவத்தால் கொன்றுக்குவிக்கப்பட்ட நிகழ்வானது விக்கிலீக்ஸைப் பொறுத்தவரை ஒரு தகவல். ஆனால் நமக்கு! நம் தமிழ் மக்களுக்கு! நம் தமிழ் தேசத்திற்கு! விக்கிலீக்ஸின் இலங்கைத் தகவல் ஒரு கடுகளவென்றால் மலையளவு ஆதாரத்தை சர்வதேச சமூகத்திற்குக் கொடுத்தபிறகும் இன்னமும் வாலாவிருக்கும் சர்வதேசிய நாடுகளுக்கும், ஐக்கியநாட்டு சபைக்கும் யார் பறையறிவிப்பது? யார் முரசுகொட்டுவது? யார் போய் அவர்கள் காதில் ஊதுவது?
அபுகிராப் சிறைச்சாலையில் ஒரு பெண் பாதுகாவலர் கைதிகளை நடத்திய விதம் குறித்து உலகமே அதிர்ந்து கண்ணீர் விட்டது. அமெரிக்காவின் மேல் சர்வதேச சமூகத்தின் எச்சில் பறந்தது. ஆனால் சேனல்-4 தொலைக்காட்சி காட்டிய ஈழப்படுகொலைக் காட்சிகள் உலக மனசாட்சியை உலுக்கியதாகத் தெரியவில்லை. ஏகாதிபத்தியத்துக்கும், மனித உரிமைகள் நசுக்கப்படுவதற்கும் அமெரிக்க நாட்டை மட்டும் குற்றம் சொல்லப் பழக்கப்பட்டுப் போய்விட்ட உலகெங்கிலும் வாழும் சிவந்த உள்ளங்களே! சர்வதேசியர்களே! தேசம், தேசியம், மொழி தாண்டி மனித உரிமையை மட்டும் கருத்தில் கொண்டு இலங்கையை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேறு என்ன தடைகள் உங்களுக்கு இருக்கமுடியும்? ராஜபக்சேவின் இரண்டாம் பதவிக்காலம் முடிவடைவதற்குள்ளாக அவர் குற்றக்கூண்டில் ஏற்றப்பட வேண்டும். ஈழப்போரின் கடைசி நாட்கள் பற்றி விசாரிக்கப்பட்டு அவருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். வழங்கப்படும்!
அமெரிக்கா என்ற ஒற்றைப் பேரரசின் மேற்பரப்பை சற்றே அசைத்துப் பார்ப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் அசாஞ்சே. அப்பேரரசின் அஸ்திவாரம் நம் கற்பனைக்கெட்டாதவாறு பண முதலைகளின் வெள்ளிக்காசுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழே அமெரிக்கப் பழங்குடி மக்களின் சதையும், இரத்தமும் உள்ளன. அசாஞ்சே அப்பணமுதலாளிகளின் ஏகாதிபத்திய வெறியை அம்பலப்படுத்துவதால் நாட்டின் அஸ்திவாரம் ஆட்டம் காண்பதாக அமெரிக்க ஆட்சியாளர்கள் அலறுகிறார்கள். ஆனால் இங்கும் ஆட்சியாளர்கள் உள்ளார்கள். இத்தேசத்தின் அஸ்திவாரத்தில் தேசிய இனங்கள் உள்ளன. தேசிய இனங்களின் நலன்கள் பற்றி யார் பேசினாலும் நாட்டின் அஸ்திவாரம் அசைக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் அலறுகிறார்கள். காவிரியில் தண்ணீர் விடமாட்டேன் என்று கர்நாடக அரசு முரண்டுப்பிடிக்கும்போதும், முல்லைப்பெரியார் அணையை இடிப்பேன், புது அணைக் கட்டுவேன் என்று கேரள அரசு அடம்பிடிக்கும் போதும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும்போதும் நாட்டின் அஸ்திவாரம் கலகலத்துப்போவதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கிறார்கள். அதனால்தான் சீமான் அடிக்கடி சிறை செல்கிறார். அருந்ததிராய் எந்நேரமும் சிறை புகக் காத்திருக்கிறார். காஷ்மீர் மாநிலமே சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. இலங்கை என்ற நாடே சிறைச்சாலையாக மாறியிருக்கிறது. அமெரிக்கா என்ற ஒற்றைப்பேரரசோ உலகையே சிறைச்சாலையாக மாற்றத் துடிக்கிறது.
நாட்டின் இறையாண்மை என்ற பெயரால், அரசு அதிகாரத்தின் முக்கியத் தகவல் என்ற பெயரால், கம்யூனிசத்தின் பெயரால், மாவோயிசத்தின் பெயரால் எங்கெல்லாம் கருத்து சுதந்திரம் அடக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் கருத்து சுதந்திர விதைகள் விதைக்கப்படுவதாக அர்த்தம். அது செடியாக இல்லாமல் மரமாக தழைக்கும். மரம் சும்மா இருக்கவே விரும்புகிறது. காற்றுதான் விடமாட்டேன் என்கிறது.
------------------------------------------------
அம்ருதா,ஜனவரி-2011
No comments:
Post a Comment