Sunday 30 October 2011

அடிமாடாக்குதல் தகுமோ?

                                                               
                                  
                கருணைக் கொலைப் பற்றி மேலை நாட்டு நீதிமன்றங்களில் நடக்கும் சுவாரசியமான விவாதங்களை நாம் படித்திருப்போம். சுயநினைவற்ற நிலையிலோ அல்லது எவ்வளவு சிகிச்சை அளித்தும் தீராத நோயோடு போராடிக் கொண்டிருக்கும் நிலையிலோ  உள்ள நோயாளிகளை, அவர்களுடைய தீராத வேதனைகளை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு கருணைக்கொலைகள் செய்யப்படுவதற்கு சில மேலை நாடுகளில் அனுமதி உண்டு. அது சரியா, தவறா என்ற தத்துவார்த்த சிந்தனைகளுக்குள் செல்வதல்ல என்நோக்கம். தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாகக் கருணையற்று நடத்தப்பட்டு வரும் முதியோர்க் கொலைகள் தார்மீக ரீதியாக சரியானவையா? அவற்றைக் கொலைகளாகப் பார்க்க அரசு ஏன் மறுக்கிறது? தங்கள் வாழ்வின் கடைசிக் கட்டத்தை நிம்மதியாக இயற்கையோடு ஒன்றாகக் கலந்துவிட அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் திடீரென அவர்களது மூச்சுக்குழல் செயற்கையாக அடைக்கப்படுகிறதே? அதற்குக் காரணமாகக் கூறப்படும் வறுமையும், துன்பத்தைக்காண சகியாமையும் உண்மையா? அல்லது இதுவும் தமிழ்ப்பண்பாட்டின் நவீனக்கூறா? கரையான் புற்றைப்போல நம் வாழ்வியலைச் சூழ்ந்துள்ள இப்பழக்கத்தை முழுவதுமாக ஒழிக்க நம்மால் முடியுமா? என்று கேள்விகளை எழுப்பி அதனை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளுதலே என் நோக்கம்.

                இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் வயதான முதியவர்களைப் பராமரிக்க அஞ்சும் வாரிசுகள்தலைக்கு ஊற்றிமேலே அனுப்பிவிடுகிறார்கள். தலைக்கு ஊற்றுதலை மிக விரிவாக விளக்கவேண்டிய அவசியமில்லை. வயதான முதியவர்களின் இருப்பை சகிக்க முடியாத அவர்களது பிள்ளைமார்களும், வாரிசுகளும் முதலில் அவரது தலைக்கு எண்ணெய் ஊற்றிக் குளிப்பாட்டுவார்கள். அதன்பின் வழுக்கட்டாயமாக இளநீர் கொடுப்பார்கள். சற்று நேரம் கழித்து கடும் ஜூரம் கண்டு ஒன்றிரண்டு நாளில் செத்துப்போவர்கள். திட்டமிட்டு நடத்தப்படும் இக்கொலைகளுக்கு தண்டனை எதுவுமே கிடையாது. ஊரில் எல்லோருக்கும் தெரிந்தே கூட அவை நடைபெறும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தென் மாவட்டத்தைச் சேர்ந்த என் நண்பரின் அம்மாவும் இம்முறையிலேயே களை எடுக்கப்பட்டார். அறுபது வயதைத் தாண்டிய முதியவர்களை நம் இளைய  சமூகம் களைகளாகவேப் பார்க்கிறது. அவர்கள்தான் நம்மைத் தந்த பொன்னான விளைநிலங்கள் என்பதை வாரிசுகள் நினைத்துப்பார்ப்பதில்லை.

                சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் பெய்த கடும் மழையினால் ஒரு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து மக்களை மீட்க அரசு அலுவலர்கள் கிராமம் கிராமமாக சென்று மீட்புப்பணிகள் செய்த போது, இன்னும் சற்று நேரத்தில் மூழ்கவிருந்த ஒரு வீட்டின் திண்ணைப் பகுதியிலிருந்து ஒரு வயதான மூதாட்டியை மீட்டெடுத்தார்கள். அவ்வீட்டில் மட்டுமல்ல அக்கிராமத்தின் மற்ற எல்லோரும் முன்பே தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். நான்கு அரசு அலுவலர்கள் ஒரு கட்டிலில் அப்பாட்டியைக் கிடத்தி  கட்டிலின் நான்கு கால்களையும் தண்ணீருக்கு மேலே தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றிய காட்சியை செய்தித்தாள்களில் படித்தப்போது கண்கள் பொல பொலவெனக் கொட்டியது. இது போன்ற மக்கள் இருப்பதனால்தான் கிராமம் கிராமமாகதலைக்கு ஊற்றும்வேலையை இயற்கை       செய்கிறதோ  என்று எண்ணினேன். எனக்கு நேரடியாகத் தெரிந்த இன்னும் பற்பல துக்ககர நிகழ்வுகளுக்குள் போக என் மனம் ஒப்பவில்லை. பெற்றோர்கள் மீதான நம் பற்று அதல பாதாளத்திற்குப் போய்விட்டது என்பது முக்கியமான காரணமாக எனக்குப்படுகிறது. தன்மீதான, தன் மனைவி மக்களின் மீதான சுயநலம் அதிகமாகிவிட்டது இரண்டாவது காரணம். சமூகத்தில் யாரும், யார்மீதும் ஆதிக்கம் செலுத்தாத உயர்ந்த நிலையில்தான், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்றுப்போன நிலையில்தான் அச்சமூகத்தின் முதியவர்களும் ஆதரிக்கப்படுவார்கள், அன்பு செய்யப்படுவார்கள். அச்சமூகம் அவர்களைக் கொலை செய்வதில்லை.

                தன் தந்தை உடல்நலக் குறைவாக இருப்பதை உணர்ந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த என் நண்பர் ஒருவர் ஊர் திரும்பினார். தந்தைக்கு சிறந்த சிகிச்சை அளித்தார் மீண்டும் வெளிநாடு செல்லவில்லை. தன் தாய், தந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஊருக்கு அருகிலேயே தொழிலையும் தொடங்கினார். இரண்டு வருட சிகிச்சைக்குப் பிறகு தந்தை இறந்தபோது அவரது கண்கள்தான் குளமானதே தவிர ஆன்மா சிறுத்துப்போகவில்லை. தந்தைக்கு செய்த  பணிவிடையால் மனம் நிறைந்திருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றுத் திரும்பும் வழியில் மற்றொரு நண்பனின் தந்தையை சந்திக்க நேர்ந்தது. வயது எழுபது இருக்கும். பல பிள்ளைகள் இருந்தும் தன் மனைவியுடன் தனிக்குடித்தனம் இருக்கிறார். அது அவரது விருப்பமும் கூட. ஆனாலும் அன்புக்கு ஏங்குகிறார். பணத்திற்கு அல்ல!  என் மகன் என்னை பார்க்க, என் மனைவியைப் பார்க்க வீட்டிற்கு வருவதேயில்லை என நண்பனைப் பற்றி அவர் குரல் கனத்துச் சொன்னபோது என் கண்கள் பனித்தது.

                வயதான பெற்றோர்கள் வேண்டுவது பிள்ளைகளின் அருகாமை. அடிக்கடி அவர்களை சந்திப்பது. தன் மகளும், மகனும் தங்களின் மேல் அக்கறையுடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கை மட்டும்தான் அவர்களுக்குச் சத்து மாத்திரைகள். வெளிநாடு சென்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் வசிக்கும் வீட்டிற்கும், முதியோர் இல்லங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?  குழந்தைப் பருவத்திலிருந்தே சுயநலத்தை கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கும் பெற்றோர், பிள்ளைகள் வளர்ந்து, ஆளாகி, தாங்களும் முதுமை பருவம் எய்தும் போது அச்சுயநலம் தங்களின் மீதே தங்கள் பிள்ளைகளால் திணிக்கப்படும் போது ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடுகிறது.

                95 வயதாகும் என் அத்தையை சந்திக்கும் வாய்ப்பும் சமீபத்தில் கிடைத்தது. கடந்த சந்திப்புக்கும், இந்தச் சந்திப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் அவரது பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது. இனி மேல் அடிக்கடி வந்து பார்க்கிறேன் என்று அவரது ஆறுதலுக்காகச் சொன்னேன். அவர் உடனே திருப்பிச் சொன்னார்; ‘நீ வந்து பார்க்கலாம், ஆனால் நான் உன்னைப் பார்க்க முடியாதே!!’ சொல்லிவிட்டுக் கண்ணீர் விட்டார்.

                வாழ்வில் தவறவிட்ட முக்கியமான தருணங்களும், மணித்துளிகளும் என்றைக்குமே நமக்குத் திரும்பக் கிடைப்பதில்லை.
                                                     -------------------------------------

  அம்ருதா,மார்ச்-2011
     


                 

1 comment:

  1. நிச்சயமாக சண்முகம் இது கண்ணீரில் மிதக்கும்
    உண்மை. முதியோர் இல்லங்கள் ஒரு தேசத்தின்
    வடுக்கள் எனும்போது முதியோர்கள் கொலைகளைச்
    சட்டத்தால் மட்டுமே தடுக்க முடியும். அதற்கு உதவவேண்டியவர்கள் அக்கொலைகளைக் கண்டும்,கேட்டும் தடுக்க முடியாமல் இருப்பவர்களே.
    இச்சமயத்தில் ஒரு கேள்வியும் மனசுள் எழுகிறது.
    எல்லா குற்றங்களையும் சட்டங்களால் தடுத்து விட முடியுமா?
    சட்டங்களுக்கு மனிதாபிமானம் வேண்டும் என்று
    சொல்லிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மனிதர்கள்
    இதனை இழந்து கொண்டிருக்கும் துயரத்தை எப்படிப் போக்குவது? தனிமனித ஒழுக்கம் என்பது இங்கு
    உடல் சார்ந்த விஷயங்களாக மாறிப் போனதை முக்கியக் காரணமாகக் குறிப்பிட வேண்டும்.ஒழுக்கம்
    என்பதில் நேர்மை,நேரம்தவறாமை,நியாயம் நேசம்,தேசாபிமானம்,பெரியவர்களை மதித்துப் பேணுதல்,திறமைகளைப் பாராட்டல், புறங்கூறாமை,சினம் கொள்ளாமை இன்ன பிறக்களும் அடங்கும். இவைகள் அனைத்தையும்
    கடைபிடிக்க முடியுமா எனும் கேள்வியை சுலபமாய்க் கேட்டுவிடலாம். ஆனால் முடியாதது என்று உலகில் எதுவும் இல்லை. இதைத்தான் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும். இது நடந்தால் நீங்கள் சொன்னது போல் எந்தக் கொடுமைகளும் நடக்காது.

    ReplyDelete