Saturday 19 May 2012

தனி ஈழம் தான் ஒரே தீர்வு



     நம்பிக்கை இழக்கச்செய்யும் பல்வேறு நிகழ்வுகள் தமிழ்ச்சூழலில் நடந்து கொண்டிருக்கின்றன.முள்ளிவாய்க்கால் முதல் முல்லைப் பெரியாறு வரை ஏராளம் சொல்லலாம்.முள்ளிவாய்க்கால் பெயரைச் சொல்லி கைதட்டு வாங்கும் தலைவர்கள் தமிழகத்தில் ஏராளமானோர் உண்டு.தங்களது உரைகளை முடிக்கும் தருவாயில் 'பிரபாகரன் மீண்டும் வருவார்,ஈழப்போரைத் தொடருவார்' என்று சொல்லி அரங்கத்தையே கைதட்டலில்,விசிலடிச் சத்தத்தில் நிரப்பிவிடும் தலைவர்கள் உண்டு.ஈழப்போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையாக நடந்து முடிந்தபிறகு,அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற நான் 'பிரபாகரன் மீண்டும் வருவார்' என்ற சொற்றொடருக்காக கை தட்டியிருக்கிறேன்.சட்டையின் கைகளை மடக்கி விட்டிருக்கிறேன்.ஆனால் இப்போதெல்லாம் 'பிரபாகரன் எப்போது வருவார்' என்று எதிர்கேள்வி கேட்கத்தான் தோன்றுகிறது.தொடர்ச்சியாகப் புழுகும் தலைவர்களின் பேச்சைக் கேட்பதுகூட நமது தலைவிதியாக நிர்ணயிக்கப்பட்டுவிட்டதோ என்னவோ!பிரபாகரன் உயிரோடு இருக்கவேண்டும் என்று நான்கூட உளமாற ஆசைப்படுகிறேன்.ஆனால் நான் ஆசைப்பட்டுக்கொண்டே கற்பனையில் மிதந்து கொண்டிருக்கக்கூடாது.நாம் தொடர்ந்து கற்பனையில் இருக்கவேண்டும் என்பதுதான் தலைவர்களின் ஆசையும்.ஆனால் நாம் நிஜத்தை எதிர்கொள்ளவேண்டும்.
    இலங்கையின் வடக்கிலும்,கிழக்கிலும் தமிழ்மக்கள் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டிருக்கிறார்கள்.தமிழ் தேசப்பொதுவுடைமைக் கட்சியின் தோழர் மணியரசன் சொல்லுவார்:'ஈழத்தில் 5-ம் கட்டப் போர் நடந்துகொண்டிருக்கிறது'.அப்பாவித்தமிழ் மக்களின்மீது இலங்கை ராணுவத்தினர் ஒரு மௌனயுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.அது ஒரு உளவியல் ரீதியானப் போரும்கூட.தமிழ்மக்களை வேட்டை நாய்கள் போல கடித்துக் குதற எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றனர் சிங்கள ராணுவத்தினர்.வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் வடகிழக்கிலும்,கொழும்புவிலும் வாடிக்கையான நிகழ்வுகளாகிவிட்டன.தமிழ் ஆயுதக் குழுக்கள் வழிப்பறி செய்கிறார்கள். இலங்கை ராணுவத்தினரின் காமக் களியாட்டங்களுக்கு தமிழ்ப்பெண்கள் தொடர்ந்து பலியாகிறார்கள்.தமிழ்ச் சமூகத்தை எப்படியெல்லாம் சீரழிக்கவேண்டுமோ,அவமானப்படுத்தவேண்டுமோ,கீழ்மைப்படுத்தவேண்டுமோ அவ்வாறே செய்கிறார்கள்.முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சியை யாழ் பல்கலையில் ஏற்பாடு செய்திருந்த  யாழ் பல்கலை.மாணவர் தலைவர் தர்ஷாணந்தை அரசக் கூலிப்படைகள் மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.நமது காலத்தில் நடைபெற்ற மிகப்பெரும் ஊழியான முள்ளிவாய்க்கால் மௌனமாகத்தான் நம்மைக் கடந்துப் போயிற்று.நம்மைக் கடப்பதற்கு முன் அது கண்ணீர் விட்டு கதறி அழுதது.அரற்றியது.அசைந்து கொடுத்ததா நமது இரக்கம்?உதவிக்கு ஓடியதா நமது மனிதநேயம்? ஏமன் நாட்டைப் பூர்விகமாகக் கொண்டு அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்று வாழும் தீவிர இஸ்லாமிய மத அறிஞர் அன்வர் அல் அவ்லாகியை அமெரிக்க அரசு ஆளில்லா விமானம் அனுப்பிப் படுகொலை செய்துவிட்டது.அமெரிக்காவின் அராஜகச் செயலை நாம் கண்டிக்கவேண்டும்,மாற்றுக்கருத்தே இல்லை.அமெரிக்க அறிஞர் நோம் சாம்ஸ்கி இப்படுகொலையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.ஆனால் இது போன்ற கடுமையான எதிர்ப்பை இலங்கை அரசுக்கு எதிராகவும் நோம் சாம்ஸ்கி பதிவு செய்யவேண்டும்.சனநாயகப் போராட்டங்களும்,வர்க்கப் போராட்டங்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனப்பிரச்சினைகளோடு அணிசேரத் தவறினால் அவை முழு வெற்றி பெறாது  என்ற முடிவுக்கு மார்க்ஸ் வந்து சேர்வதாக‌ "விளிம்புநிலை மார்க்ஸ்:தேசியம்,இனம்,மேற்கல்லாத சமூகங்கள் குறித்து" என்ற நூலின் ஆசிரியர் கெவின் ஆன்றர்சன் சுட்டிக்காட்டுகிறார். மார்க்ஸ் வந்து சேர்ந்த இவ்விடத்தை நோம் சாம்ஸ்கி போன்ற உலகப் புகழ்மிக்க கம்யூனிஸ அறிஞர்கள் தூக்கிப்பிடிக்கவேண்டும்.இலங்கை இனப்பிரச்சினையில் வழிதவறிப் போய்விட்ட சோசலிச நாடுகளின் திசைகளை அவர்கள் நல்வழிப்படுத்தவேண்டும்.
   இலங்கைக்குள்ளாக ஒரு தீர்வு என்று முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை நான் கூட நம்பிக்கொண்டிருந்தேன்.ஆனால் இலங்கை பிரிக்கப்படவேண்டும் என்பதே இன்றைக்கு அறவழிப்பட்ட நிலைப்பாடாக இருக்கமுடியும்.இவ்விடத்தில் அயர்லாந்து தேசிய இனப் போராட்டங்கள் பற்றி கார்ல்மார்க்ஸ் என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை நாம் பார்க்கவேண்டும்.அயர்லாந்து மக்களின் மீது இங்கிலாந்து முழு அடக்குமுறையைக் கையாண்டு வருவதால் அயர்லாந்து மக்களின் சமூக மாற்றத்திற்கான சின்னஞ்சிறு அசைவும்கூட தேசிய இன எழுச்சியின் வழியாகவே சாத்தியப்படும் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.மார்க்ஸின் மதிப்பீட்டின்படியே 1858-ல் அயர்லாந்தில் ஃபெனியன்(Fenians)எனப்பட்ட புரட்சிகர தேசிய இன அமைப்பொன்று உருவானது.இங்கிலாந்து ஆட்சியை ஆயுதப் போராட்டங்களின் வழியாகத் தூக்கியெறிவதற்கான ரகசிய அமைப்பாக அது வடிவம் பெற்றது."அயர்லாந்தில் ஒரு புத்துணர்ச்சி" எனத் தலைப்பிட்டு மார்க்ஸ் அது குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.கம்யூனிஸ்ட் அகிலமும் கூட ஃபெனியன் அமைப்புக்குத் தனது ஆதரவை வழங்கியது.இக்காலக் கட்டத்தில் ஃபெனியன் அமைப்பு நடத்திய ஆயுதம் தாங்கிய எழுச்சிகளை இங்கிலாந்து ராணுவம் அடக்கியொடுக்கியது.மூன்று ஃபெனியன் போராளிகள் மான்செஸ்டர் நகரில் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர்.தொடர்ந்து பல ஃபெனியன் போராளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.1870-ல் மார்க்ஸ் எழுதினார்: "இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து தனிநாடாகப் பிரிவது சாத்தியமில்லை என்று நான் ஒரு காலத்தில் நம்பிக் கொண்டிருந்தேன்.ஆனால் இப்போது அது தவிர்க்க இயலாதது எனக் கருதுகிறேன்".
   த‌னி ஈழ‌ம் உருவாக்க‌ப்ப‌டுவ‌தை விரும்பாத‌ தோழ‌ர்க‌ளைப் பார்த்து நாம் கேட்ப‌தெல்லாம் இதுதான் : அய‌ர்லாந்து தேசிய‌ இன‌ப் பிர‌ச்சினைக்கும்,ஈழ தேசிய இன‌ப் பிர‌ச்சினைக்கும் நீங்க‌ள் என்ன‌ வித்தியாச‌த்தைக் க‌ண்டுவிட‌முடியும்?மார்க்ஸ் இன்று இருந்திருப்பாரானால் ஈழ‌ம் ம‌ல‌ர‌ குர‌ல் கொடுத்திருப்பார்.காந்தி இருந்திருப்பாரானால் முள்ளிவாய்க்காலுக்குப் பிற‌கு சாகும்வ‌ரை உண்ணாவிர‌த‌ம் இருந்திருப்பார்.இந்திய‌ அர‌சாங்க‌ம் வ‌ழ‌க்க‌ம் போல‌ இவ்விருவ‌ரையும் மாவோயிஸ்டுக‌ள் என‌ முத்திரை குத்தியிருக்கும்.
                  

No comments:

Post a Comment