Friday 18 May 2012

இன்குலாப்பை கொண்டாடுதல்




மக்கள் கவிஞன் இன்குலாப்புக்கு பாராட்டுவிழா மற்றும் அவரது நேர்காணல் நூல் வெளியீட்டு விழா சென்னை பாவாணர் அரங்கத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை(13.05.2012) அன்று நடைபெற்றது.சிலருக்கு பாராட்டுவிழா நடத்தும்போது பார்வையாளர்கள் நெளிந்து,தங்கள் இருக்கைகளில் குறுகுறுத்துக் கொண்டிருப்பார்கள்.அப்படிப்பட்ட விழா அல்ல அது.அறிஞர்கள் பேச பேச இன்குலாப்தான் இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தார்.பேசியவர்கள் ஒன்றும் அப்படிப் பாராட்டிப் பேசிவிடவும் இல்லை.இன்குலாப்போடு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.அவர் மேல் தாங்கள் வைத்திருக்கும் உண்மையான அன்பை வெளிப்படுத்தினார்கள்.இன்குலாப் என்ற தனிமனிதன்,மக்களின் விடுதலையை மட்டுமே நேசித்த அந்த மனிதனின் வரலாற்றைச் சொல்லிச் சென்றார்கள்.கவிதையாகவே அமைந்துபோன அவரது வாழ்வினை விதந்தோதினார்கள்.வீரம் செறிந்த அவரது நக்சல்பாரி சார்ந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்கள்.அவரது கல்லூரித் தோழர்கள் அவரது இளமைப் பருவத்தை நினைவுப் படுத்தினார்கள்.

   நிகழ்ச்சிக்கு .பஞ்சாங்கம் தலைமை வகித்தார்.பா.செயப்பிரகாசம்,அறிவுமதி,இரா.ஜவஹர்,கவின்மலர்,எட்வின்,மணிகண்டன்,சரஸ்வதி,தஞ்சை கவிராயர்,சுடர் முருகையா,செ.கணேசலிங்கன் என்று அறிஞர்களும்,எழுத்தாளர்களும்,கவிஞர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
      னுசங்கடா நாங்க மனுசங்கடா வரிகளை என்னுடைய மாணவர்களுக்கு எத்தனை முறை பாடிக் காட்டி இருப்பேன் என்று பஞ்சாங்கம்  வியந்து குறிப்பிட்டார்.நக்சல்பாரி வாழ்க்கைக்கு அணியமாவதற்கு பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் உங்கள் உடல்நலம் அதற்கு தாங்காது,வேறு தளங்களிலும் நீங்கள் இயங்கலாம் என என் திசையை மாற்றியவர் இன்குலாப் என தனது வரலாறு மாறிய திசையை பஞ்சாங்கம் சுட்டுகிறார். எட்வினின் பேச்சு காத்திரமாக இருந்தது.இன்குலாப்பை தமுஎச மேடைகளில் கொண்டாடி இருக்கிறோம்,தனித்துவமான கவிஞன் இன்குலாப்.எஸ்.வி.ஆர்- தமிழக க்யூ பிரிவு போலீசார் விசாரணை என்ற பெயரில் அவரை அமரவைத்து,நிற்க வைத்து உடைகளோடு,உடைகளில்லாமல்(வெறும் ஜட்டியோடு) இப்படியெல்லாம் புகைப்படங்கள் எடுத்து முடித்தபிறகு,மிகவும் பயத்துடனும்,குழப்பத்துடனும் எஸ்.வி.ஆர்  ஜன்னலை எட்டிப் பார்த்தபோது தன்னைப் போலவே விசாரணையை முடித்துவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் இன்குலாப்பின் பார்வையும் சந்தித்தது. இன்குலாப்பின் அந்த ஒற்றைப் பார்வை சொன்னது 'அச்சம் தவிர்'.அந்தப் பார்வைதான் எஸ்.வி.ஆர்- இத்தனை காலமும் உயிருடன் வைத்திருக்கிறது என்ற எட்வினின் பேச்சில் வரலாற்றின் பக்கங்கள் சுழன்றன.  நிகழ்ச்சி முடிந்து நேர்காணல் புத்தகத்தைப் படித்துப்பார்த்தபோது எஸ்.வி.ஆர் தனது வார்த்தைகளில் அந்நிகழ்வுகளை வர்ணித்திருப்பதை வலியுடன் உணர்ந்தேன். இரா.ஜவஹர் பேசும்போது அம்பத்தூர் செஞ்சுடர் இசைக் குழுவுக்காக இன்குலாப் எழுதிக் கொடுத்தப் பாடலைப் பற்றியும்,1975-ல் பம்பாயில் நடைபெற்ற மூன்றாவது சி..டி.யூ மாநாட்டில் அப்பாடல் தமிழகக் குழுவினரால் பாடப்பட்டபோது அது மாநாட்டில் பங்கு கொண்ட தமிழகப் பிரதிநிதிகளால் பெற்ற வரவேற்பையும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.






No comments:

Post a Comment