Sunday 5 February 2012

மத்தியப்படைகள்,மௌனம் மற்றும் கொலவெறி பாடல்





முல்லை பெரியாறு மீண்டும் மீண்டும் களேபரங்களின் மையமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்பிரச்னையின் வெளிப்பாடுகள் பல்வேறு புதிய பரிமாணங்களில் தோற்றமளிக்கின்றன.காலம் காலமாக நாகரிகங்களுக்கிடையேயான மோதல்கள்,அழிப்புகள் சிறிய தகராறுகளிலிருந்தும்,பரஸ்பர ஈகோவிலிருந்தும்தான் உருப்பெறுகின்றன.இந்தியாவைப் போன்ற நாடுகளில் இப்பிரச்னைகள் தேசிய இனப் பிரச்னைகளை உருவாக்குகின்றன.தேசிய இனங்கள் ஒன்றுக்கொன்று கொம்பு தீட்டிவிடப்படுகின்றன.நதிநீர்ப் பிரச்னைகளினால் உண்மையாகப் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள்(அவர்கள் எந்த இனமாக இருந்தாலும் சரி)இறுதிவரை தீர்வு எதையும் பார்க்காமலேயே வாழ்வை முடித்துவிடுகின்றனர்.இரு இன அரசியல்வாதிகளும் நல்ல அறுவடை செய்கிறார்கள்.நாட்டு ஒற்றுமை பேசும் கட்சித் தலைமைகள்  இவர்களைப் பார்ப்பதா,அவர்களைப் பார்ப்பதா எனப் புரியாமல் தொழில்   நட‌த்துகின்றனர்.அவர்களுக்கு தேசியம் என்றால் என்ன என்பது பற்றியும்,தேசிய இனங்களின் இயல்புகள் பற்றியும்,அவைகளுக்கிடையேயானப் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்பது பற்றியும் துளிகூட அறிவு கிடையாது.
      மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுவிட்ட பிறகும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்னைகளும்,தண்ணீர்ப் பிரச்னைகளும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.மஹாராஷ்டிரா,ஆந்திரா மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்னை உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்னாடகம் இடையே காவிரிப் பிரச்னை உண்டு.ஆந்திரா,கர்நாடகா இடையே தண்ணீர்ப் பிரச்னை உள்ளது.பஞ்சாப்,ஹரியானா இடையே எல்லைப் பிரச்னைகளும்,தண்ணீர்ப் பிரச்னைகளும் உண்டு.தமிழ்நாடு,ஆந்திரா இடையே தண்ணீர் பிரச்னை உள்ளது. அதுபோல கேரளாவுக்கும்,தமிழ்நாட்டுக்கும் உரியதுதான் முல்லைப் பெரியாறு.ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண அப்பிரச்னைகளின் கூறுகளைத் தாண்டிச் சென்று அறத்தில் மையம் கொள்ளவேண்டும்.தார்மீகத்துணிவு இருதரப்புக்கும் வேண்டும்.விருப்பு வெறுப்பில்லா அந்நிலையை நம்மை ஆளுவோரும்,இக்காலத்தலைவர்களும் அடைவார்கள் என நாம் எதிர்பார்ப்பது நம் தவறல்ல,சூழலின் தவறு.
    இன உணர்வு தூண்டப்படுகிறது.முல்லைப் பெரியாறு,முல்லாப் பெரியாறு என்று வார்த்தைகளை வைத்து இன அடையாளங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களும்,அவர்களின் வாகனங்களும் வன்மையாகத் தாக்கப்படுகின்றன.கேரள எஸ்டேட்டுகளில் கூலித்தொழில் புரியும் எல்லைவாழ் தமிழ் மக்கள் அடித்து விரட்டப்படுகின்றனர்.கேரளத்தில் வாழும் தமிழ்மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.தமிழ்நாட்டில் இருக்கும் கேரளமக்களின் வணிக நிறுவனங்கள்,டீக்கடைகள் கூடஅடித்து நொறுக்கப்படுகின்றன.

    தமிழ்நாட்டின் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைக்கும் அதே நேரத்தில்,உண்மையான மக்கள் போராட்டங்களை ஆதரிக்கும் அதே நேரத்தில் போராட்டம் பாசிச நிலையை எடுக்காமலும் நாம் பாதுகாக்கவேண்டும்.பாசிசத்தை வளர்த்தெடுக்க இருபக்கங்களிலும் உள்ள இனவாதிகள்,ஊடகங்கள்,அரசியல்வாதிகள் தயாராக உள்ளனர்.மனிதாபிமானத்தோடு கூடிய போராட்டம் நமக்கு வேண்டும்.உணர்ச்சிவயப்படுதல் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது.பிரச்னைகளின் நியாயப்பாடு தமிழகத்தின் பக்கம் உள்ளதை தினமும் கண்ணுற்று வருகிறோம்.ஏற்கனவே உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமானத் தீர்ப்பை வழங்கியுள்ளது.136 அடிக்கும் கீழே குறைக்கவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆனந்த் குழுவின் செயல்பாடுகளும் நமக்கு திருப்தி தருவதாக உள்ளன.தமிழ்நாட்டின் பலலட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிக்கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டை உடைத்தே தீருவேன் என உம்மான்சாண்டி புதிய மனு ஒன்றை ஆனந்த் குழு முன் சமர்ப்பித்திருக்கிறார்.மத்தியஅரசு கேரள அரசைக் கண்டனம் செய்யாமல் வாய்மூடி மௌனியாக உள்ளது.இருமாநில மக்களின் உறவுகள் சேதமடைந்துகொண்டே போவதை மன்மோகன் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல,ரசித்துக் கொண்டிருக்கிறார்.இந்திய ஒருமைப்பாட்டின் மீது தமிழ்த் தேசியவாதிகளுக்கு அக்கறை இருப்பது இருக்கட்டும்,முதலில் மன்மோகனுக்கும்,காங்கிரஸ் அரசுக்கும் அக்கறை இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.இந்திய ஒருமைப்பாட்டை சீர்படுத்தும் நோக்கில் கேரள அரசை வழிக்குக் கொணர மன்மோகனுக்கு விருப்பமில்லை.மாறாக 15 லட்சம் மத்திய படைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காக்கும் என அவர் நம்புகிறார்.
    இந்தியாவின் ஒருமைப்பாடு இப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல,பல்வேறு மாநிலங்களிலும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.மணிப்பூர் மாநிலத்தில் 2007 முதல் 2010 வரை அரசின் அதிகாரவர்க்க ஏவலாளிகளும்,காவலாளிகளும் 789 பேரை கொன்றிருப்பதாக மனித உரிமைகளுக்கான வேலைக்குழு .நாவுக்கு அளித்துள்ள சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.அங்கு ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாநிலைப் போராட்டம் 10 ஆண்டுகளைக் கடந்து விட்டது.'Indian Army,Rape Us'என்றப் பதாகையின்கீழ் நடைபெற்ற மணிப்பூர் பெண்களின் போராட்டம் உலகப்பிரசித்தி பெற்றுவிட்டது.காஷ்மீர் மாநிலத்தில் இந்தியப்படைகளால் கொல்லப்பட்ட மக்களின் 2700 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் அட்டூழியங்களுக்கும் அங்கு பஞ்சமில்லை.சத்தீஸ்கரிலும்,ஜார்கண்டிலும்,மேற்குவங்கத்திலும் அப்பாவிப் பழங்குடிகளின் மீது அரசுப்படைகள் நடத்தும் பசுமைவேட்டைத் தாக்குதல்கள் ஒருபுறமும்,வடகிழக்கில் நடைபெறும் வன்முறைகள் வேறொருபுறமும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கேலிப் பொருளாக்கியுள்ளன.ஹைதராபாத் மக்கா மசூதியில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்குப் பின்னர் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல,புனையப்பட்ட பொய் வழக்குகள் போல 2008 மே-13-ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தொடர்குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை 11 முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்தது.அவர்கள் அனைவரும் மிகக் கொடுமையான பயங்கரவாதிகள் என அரசு அறிவித்தது.ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையை சிதம்பரம் பாராட்டினார்.கடந்த 2011,டிசம்பர்-9-ம் தேதி அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று நீதிமன்றம் விடுவித்துவிட்டது.அவர்கள் சிமியைச் சார்ந்தவர்கள் அல்ல,பயங்கரவாதிகளும் அல்ல என்றத் தீர்ப்பை நீதிமன்றம் அளித்தது.சிதம்பரம் அவ்விளைஞர்களிடம் மன்னிப்பு கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
    நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதம்பேர் எடை குறைவாக,ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக இருப்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியிருந்தது.நாட்டின் GDP வளர்ச்சி  அதிகமாக இருக்கும்போது நாட்டில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒரு தேசிய அவமானமாக மன்மோகன் குறிப்பிடுகிறார்.ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவேண்டுமானால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி டாடா,அம்பானிகளோடு நின்றுவிடாமல் கடைகோடி மக்களையும் சென்றடையவேண்டும் என்ற மனிதாபிமானம் கலந்த அரசியல் பாலபாடத்தை மன்மோகனால் உணர்ந்துகொள்ளமுடியவில்லை.அப்படி உணர்ந்திருப்பாரானால் நாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கமாட்டார்கள்.

     அவரைப் பொருத்தவரை நாடும்,மாநிலங்களும் எல்லைக் கோடுகள் மட்டும்தான்.நாட்டின் வளர்ச்சி என்பது அவரது மடிக்கணினியில் ஒளிரும் புள்ளியியல் வரைபடங்கள் மட்டுமே.எனவேதான் நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்ற அவருக்குத் தெரிந்த வழிமுறைகளும் இயந்திரத்தனமாகவும்,கேலிப் பொருட்களாகவும் இருக்கின்றன.மத்தியப்படைகள்,மவுனம் கூடவே ‘கொலவெறி’ பாடல்.
                     ----------------------------------------
நன்றி : அம்ருதா,பிப்ரவரி,2012

No comments:

Post a Comment