Wednesday 9 November 2011

அணு உலைப் பூங்காக்களில் விளையாடும் மரணம்

 கூடங்குளம் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறது.மறுபுறம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமை அரசு மிக சாதுரியமாகப் பயன்படுத்தியுள்ளது.இந்து ஆங்கில இதழில் வெளிவந்த அவருடைய மிகப்பெரும் கட்டுரை படித்தவர்களை மயக்கியுள்ளது என்பதை மறுநாள் அவ்விதழ் வெளியிட்ட கடிதங்கள் புலப்படுத்தியிருக்கின்றன.அவரது கட்டுரைக் கருத்துக்களையும்,புள்ளி விபரங்களையும்  மறுத்துப் பேச நமக்கு ஏராளமான தகவல்கள் உள்ளன.அவற்றைப் பின்வரும் நாட்களில் பார்க்கலாம்.பல்வேறு தளங்களில்,பல்வேறு புள்ளிகளில்,பல்வேறு கோணங்களில் கலாமுக்கான மறுப்பை நாம் தொகுக்கலாம். கூடங்குளத்தில் மேலும் 3 அணு உலைகள் நிறுவப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.மொத்தம் 5000 மெகாவாட் அணுமின்சாரத்தை கூடங்குளம் உற்பத்தி செய்யுமாம்.கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளை நிறுவ மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளதாக காசிநாத் பாலாஜியும் கூறுகிறார்.அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பின்னர் மத்திய அரசு கனவு கண்ட அணு உலைப்பூங்காக்களில்(ஒவ்வொரு பூங்காவிலும் 6 உலைகள்) ஒன்றை கூடங்குளத்தில் நனவாக்கிட மத்திய அரசு துடிக்கிறது.கீழ்கண்ட கட்டுரைதான் என் நினைவில் வந்து செல்கிறது.







    

                சர்ச்சைக்குரிய அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதாவைப் பற்றிய தீவிரமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளன. அம்மசோதாவை மக்களவை நிறைவேற்றியுள்ளது. அணு உலையில் விபத்து நடக்கும் போது ஏற்படும் கொடூரமான சேதாரங்களுக்கு யார் யார் எவ்வளவு ஈட்டுத் தொகை தருவது, அணு உலையைச் தயாரித்தவர்களின் நிலைமை என்ன? அரசின் நிலை என்ன? என்பது பற்றியயல்லாம் மண்டை பிளக்கும் விவாதங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. மசோதாவின் சில முக்கியப் பிரிவுகளில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளைப் போடுவதும், நீக்குவதும் அதன் மூலம் மசோதாவை நீர்த்துப் போகச் செய்ய அரசு செய்த தில்லுமுல்லு முயற்சிகளை நாடு கண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக தாம் மிகவும் நேசிக்கும் அமெரிக்காவுக்காக பிரதமர் மன்மோகன் இதையெல்லாம் செய்தார். விவாதத்தில் பங்கு கொண்ட அனைத்து உறுப்பினர்களும் இம்மசோதாவை எதிர்த்தோ, ஆதரித்தோ மட்டுமே குரல்களைப் பதிவு செய்தனர். இந்த சந்தைக் கூச்சலில் காணாமல் போன ஒரு குரல் ஏழைச் சாமானியனுடையது. இந்த அணு மின்சாரம் நமக்குத் தேவையா? என்ற அம்மனிதனின் குரலை யாரும் செவிமடுக்கவில்லை.

                இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் ஜெர்மனி அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துவிடுமோ எனப் பயந்த அமெரிக்கா, மான்ஹாட்டன் என்னுமிடத்தில் பெரும் எண்ணிக்கையில் அணு நிபுணர்களைக் கூட்டி, பெரும் பொருட் செலவில் ஆராய்ச்சிகள் செய்து தயாரித்ததுதான் முதல் அணுகுண்டு.இத்தொழில் நுட்பத்தின் மற்றுமொரு விளைவுதான் அணுமின்சாரம். அணுமின்சாரமும், அணுகுண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அணு பிளப்பின் மூலம் உருவாகும் ஏராளமான ஆற்றலை திடீரென வெளிப்படுத்துவதன் மூலம் அணுகுண்டு செயல்படுகிறது. அப்படி உருவாகும் ஆற்றலை சேமித்து, ஒழுங்குபடுத்தி, நீரைக் கொதிக்க வைத்து, டர்பைனை இயக்கி மின்சாரத்தை தயாரிப்பதுதான் மற்றுமொரு தொழில் நுட்பம். அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் போது விளையும் உப பொருட்களால்தான் அணுகுண்டும் தயாரிக்கப்படுகிறது. தனது நாட்டின் முதல் அணுமின் உலையான கேல்டர் ஹாலினிலிருந்து கிடைக்கப்பெற்ற உப விளைபொருளான புளூட்டோனியத்தை பயன்படுத்திதான் பிரிட்டன் தனது முதல் அணுகுண்டைத் தயாரித்தது. இந்தியாவும் கூட முப்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் சைரஸ் என்ற பரிசோதனை அணு உலையின் கழிவுகளிலிருந்து யுரேனியத்தை எடுத்து செறிவாக்கித்தான் 1974-ல் தனது முதல் அணுகுண்டை வெடித்துப் பரிசோதித்தது. எனவேதான் உலகில் எந்த ஒரு நாடும் அணுமின் உலை நிறுவி மின்சாரம் தயாரிக்கிறேன் என்று சொன்னால் அதனை சந்தேகத்தோடு பார்க்க வேண்டியுள்ளது.
               
                1945-ல் தொடங்கி இன்று வரையும் கூட அணுமின்சாரம், அணுமின் உலைகள், அணுகுண்டு போன்ற வார்த்தைகள் அரசுகளின் செல்லப்பிள்ளைகளாகிவிட்டன. ஒரு அணுமின் உலை அந்நாட்டு அரசுக்கு மிகப்பெரும் வலிமையைத் தருகிறது. 1974, மே-18 அன்று தனது முதலாவது அணு வெடிப்பை இந்தியா நிகழ்த்திய போது புத்தர் சிரித்ததாகவும், இது ஒரு அமைதியான அணுவெடிப்பு என்றும் இந்திராகாந்தி கட்டமைத்த பிம்பங்கள்தான் இன்றைக்கும் துணைக் கண்டத்து மக்களின் வறுமைக்கும், துன்பத்திற்கும் காரணங்களாக அமைந்துபோய்விட்டன. புத்தர்   துணைக்கண்டத்துக்கு பொதுவானவர்தானே?  எனவேதான்  பாகிஸ்தானிலும்  அவர்   சிரித்தார். ஆனால் புத்தர் சிரித்தால்    இவ்வளவு    துன்பமும்,   கதிரியக்கமும் பரவாது.   எனவே   சிரித்தது நரகாசுரனாக இருக்க வேண்டும் அல்லது சாத்தானாக இருக்க வேண்டும். 1998-ல் போக்ரானில் இரண்டாம் தடவையாக அணு வெடிப்பை நிகழ்த்தியவர்களில் முதன்மையானவர் பின்னாளில் குடியரசுத் தலைவராக இருந்த திரு.அப்துல்கலாம். குழந்தைகளின் சிரிப்பையும், அணுவின் வெடிப்பையும், ஏவுகணையின் சீற்றத்தையும் கண்டு குதூகலப்படுபவர். இந்தியாவின் அணுகுண்டு நீடித்த அமைதிக்கானது எனப் பரிந்துரைப்பவர். அணுமின் உலைகளையும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் அதன் கழிவுகளையும், செய்து வைத்துள்ள நூற்றுக்கணக்கான அணுகுண்டுகளையும் வைத்துக் கொண்டு எப்படி அய்யா நாமும், நமது எதிர்காலச் சந்ததிகளும் நிம்மதியாய் இருக்க முடியும்? என்று திரு.கலாமிடம் எதிர் கேள்வி கேட்க இந்தியாவில் யாருக்கும் திராணி இல்லாமல் போய்விட்டது. 

     நம் நாட்டிற்கு ஏவுகணைகளை உருவாக்கி அணுவெடிப்பை நடத்தி, 2020-ல் இந்தியா என்ற தொலைதூரக் கனவுகளையும் தந்துவிட்டுப் போன நேர்மையான அந்த விண்வெளித் தொழில் நுட்பக்காரரிடம் நம் மனதைப் பறிக்கொடுத்து அவர் சொன்னதை வேதவாக்காக்கி, ஏவுகணைகளையும், அணுகுண்டுகளையும், அணுமின் உலைகளையும் கொண்டாடும் ஒரு தலைமுறையை உருவாக்கிவிட்டோம். ஏராளமான அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்பக்காரர்கள் கலாம் வகுத்த பாதை சரியானது, அவ்வழி சென்றால் இந்தியா வல்லரசாகும் என்று கனவுலகில் சஞ்சரிக்கின்றனர்.

     அணுமின் உலைகளை அரசு விரும்புகிறது. அணுசக்தி நிபுணர்கள் அதை நிறைவேற்றுகிறார்கள். மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையை மட்டுமே ஒரு அரசு விரும்பும். அப்போதுதான் தனது கட்டுப்பாட்டை அந்த உற்பத்தியின் மீது செலுத்தலாம். அதன் மீதான ஆக்கிரமிப்பை நிலை நாட்டலாம். தொடர்ச்சியாக தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தலாம். இது எல்லா அரசுகளுக்கும் பொருந்தும். சுதந்திரத்திற்கு முன்னர் பாகிஸ்தான் பற்றிய பிரிவினைப் பேச்சுகள் வந்த போது மையத்தில் அதிகாரக் குவிப்பில்லாத, சுயஅதிகாரங்கள் கொண்ட பல்வேறு மாகாண அரசுகள் அங்கம் வகிக்கும் ஒரு உண்மையான கூட்டாட்சியுடன் விளங்கவல்ல இந்தியா அமைந்திருக்குமானால் பிரிவினையும் தடுக்கப்பட்டிருக்கும். அத்தகைய இந்தியாதான் பொருளாதாரத்திலும், ஆயுதபலத்திலும் இல்லாவிட்டாலும் பூரண அமைதிக் கொண்ட, அறநெறி பாற்பட்ட வல்லரசாக விளங்கியிருக்கும். மையத்தில் அதிகாரங்கள் குவிய, குவிய அரசின் செயல்பாடுகள் தான்தோன்றித்தனமாகப் போய்விடுகின்றன. அத்தகைய அரசை தாங்கிப்பிடிக்கும் அதிகார வர்க்கத்தின் நிழலில்தான் டாட்டா, அம்பானி வகையறாக்களும், அந்நிய கார்ப்பொரேட்டுகளும் செழித்துக்கொழிப்பார்கள். இவர்களது தேவையைப் பூர்த்தி செய்யவல்ல அதிகாரம் படைத்த செயல் அலுவலராக மன்மோகன்சிங் செயல்படுவதில் வியப்பு ஒன்றுமில்லை. தனது செயல்பாடுகள் சரியா,தவறா என வரலாறு முடிவு செய்யும் என்கிறார் மன்மோகன். 1992-லிருந்து வரலாற்றின் ஒரே நேர்க்கோட்டில் அவர் சரியாகவே சென்று கொண்டிருக்கிறார். கார்ப்பொரேட்டுகளுக்கான அந்த நேர்க்கோட்டில் நடை விலகாமல் அவர் பயணிக்கிறார். அக்கோட்டின்    இருபுறமும்   நாட்டின் அரசியல்,  சமூக வரலாறுகள் கசக்கிப்போட்டுள்ள கோடிக்கனக்கான ஏழை மக்களை அவர் அங்கீகரித்தது கிடையாது. ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட சம்பாத்தியம் இல்லாத அந்தக் கோடிக்கனக்கான மக்கள் அணுமின்சாரம் கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால்  2030-ல் 40 ஆயிரம் மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற மன்மோகனின் கனவு பலித்தாலும் கூட இந்த ஏழை மக்களின் கூடாரங்களுக்கு மின்சாரம் கிடைக்கப்போவதில்லை. சமீபத்தில் படித்தேன். சென்னையின் ஒரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒன்றின் ஒரு வீட்டிற்குகூட இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. கல்பாக்கம் பக்கத்தில்தானே உள்ளது. அந்த மின்சாரத்தை எடுத்து இங்கு வழங்கலாமே! கண்டிப்பாக அது மட்டும் நடக்காது. ஆனால் கல்பாக்கத்தில் ஏதேனும் ஒரு விபத்து என்றால் பாதிக்கப்படப் போவது இந்தக் குப்பனும், சுப்பனும்தான்.

     அணுமின் திட்டங்களை செவ்வனே நிறைவேற்றும் அணுசக்திப் பொறியாளர்கள், வல்லுநர்கள் தாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருப்பதாக இறுமாந்திருக்கிறார்கள். அணுமின் திட்டத்திற்கு பின்னால் அரசு மேற்கொண்டுள்ள திரைமறைவு வேலைகளைப் பார்த்து அவர்கள் மெளனித்துப் போய்விடுகிறார்கள். அறநெறிகளுக்கு அப்பாற்பட்ட அச்செயல்களை கேள்விக்கு உட்படுத்தும் சில வல்லுநர்கள் அந்நிறுவனங்களை விட்டு அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அத்தகையவர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். மத்திய அரசின் அணுசக்தித் துறை அதிகாரிகள், அணுமின் திட்ட வல்லுநர்கள், இராணுவ அதிகாரிகளில் சிலர் ஆகியோரே இத்திரைமறைவில் இருப்பவர்கள். இத்திரைமறைவையும் இயக்கிக் கொண்டிருப்பது இந்தியா என்று கற்பிக்கப்பட்ட, ஒருமைப்படுத்தப்பட்ட ஒரு தேசம். சேமித்து வைத்துள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிராந்திய வல்லரசு என தன்னைத்தானே தட்டிக்கொடுத்துக்கொள்ளும் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு. விளிம்பு நிலையிலேயே அதிகாரக் குவிப்புகள் வெகுவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் மையத்தின் அதிகாரக் குவிப்பை, அதிகாரச் செருக்கை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அத்தகைய ஒரு இறுமாந்த நிலையில்தான் தன்னுடைய தேசிய இனப்பிரச்சினைகளை, பொருளாதார ஏற்றத்தாழ்வு சீரழிவுகளை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவே அது பார்க்கிறது.

     1974 அணுவெடிப்புக்குப்பின்னர் போக்ரானிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏற்பட்ட கதிரியக்கப் பாதிப்புகள் ஏராளமானவை. அவ்வெடிப்புக்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் பெருமளவு போலியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். 1998-ல் அணு வெடிப்புக்குப் பின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கூறினார்: “வெடிப்புக்குப்பின்னர் ஏற்பட்ட கதிரியக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. வெடிப்பின் மூலம் வெளிக்கிளம்பிய கதிரியக்க ஐசோடோப்புகளின் அரை ஆயுட்காலம் (கதிரியக்கத்தின் வீரியம் பாதியாகக் குறைய அது எடுத்துக்கொள்ளும் கால அளவு) 40000 ஆண்டுகள் என்று வாஜ்பாயிக்குத் தெரியாது போலும்.

     நமது  நாட்டின்   மின்   உற்பத்தியில்  அணுமின்சாரத்தின்   பங்கு   மூன்று சதவிகிதம் மட்டுமே. நம் எதிர்காலத்திற்கான மின்சாரத்    தேவைகளை   மாற்று எரிசக்தி வளங்களைக் கொண்டே பூர்த்தி செய்து விடமுடியும் என்று ஏராளமான அறிஞர்கள் எடுத்துச் சொல்லிவிட்டனர். கி.பி.2030-ல் உலகின் மொத்த மின் தேவை 16.9 டெராவாட்ஸ் என்றும், நீர், காற்று, சூரிய ஒளி மூலம் இத்தேவையை நிறைவேற்றிட முடியும் என்றும் அமெரிக்காவின் எரிசக்தித்துறையின் செய்திப்பிரிவு தெரிவிக்கின்றது. அணுமின்சக்தி எதிர்க்காலத்திற்கான ஆற்றலாக இருக்க முடியாது. முதலாவது காரணம்                             
மனித குலத்திற்கு அது ஏற்படுத்தும் கதிரியக்கப் பாதிப்புகள். மற்றுமொரு காரணம் நம் எதிர்காலச் சந்ததிகளுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் அப்பாலும் தொந்தரவைத்தரவல்ல அணுக்கழிவுகள். எனவேதான் கியாட்டோ ஒப்பந்தம் அணுமின்சாரத்தை எதிர்க்காலத்திற்குகந்த தூய்மையான ஆற்றல் பட்டியலில் சேர்க்கவில்லை. தம் சுயநலம் கருதி எதிர்காலத் தலைமுறையை படுகுழியில் தள்ளத் துடிப்பவர்கள் மட்டுமே அணு மின்சாரத்தைப் பரிந்துரை செய்யமுடியும். 

     அணுமின்சக்தியா, மாற்று முறைகளா என்பதை சுற்றுச்சூழல், மக்கள் உணர்வு, மக்கள் பங்கேற்பு, பெரு, சிறு தொழில்களின் தேவை, கிராமங்களின் தேவை ஆகியவற்றைக் கொண்டே முடிவு செய்ய வேண்டும். விவசாயமும், தொழிற்துறையும் கிராமப்புற வளர்ச்சிக்கு உதவுவதாக மின்சக்தி உருவாக்கம் அமைய வேண்டும். பெருமளவு உற்பத்தி என்பதை விடவும்  மக்களால்  மக்களுக்கான உற்பத்தி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாக இருக்கும். “மக்களால்  “மக்களுக்கான போன்ற வார்த்தைகளை அதிகார வர்க்கம் என்றுமே விரும்பியதில்லை. இவர்களுக்குப் பிடித்தமானவை கார்ப்பொரேட்டுகள், அந்நிய முதலீடு, பெரும் முதலாளிகள், பெரும் பணக்காரர்கள். இவர்களின் மையப்படுத்தப்பட்ட உற்பத்தியை ஊக்குவிக்க அவர்கள் எல்லாவிதத்திலும் உதவுவார்கள். அணுமின் உலைகள் நிறுவப்படும். தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும். விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படும். பெரும் அணைக்கட்டுகள் உருவாக்கப்படும். மக்கள் சாரை சாரையாக வெளியேற்றப்படுவார்கள். வெளியேறாதவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என முத்திரைக் குத்தப்பட்டு பச்சையாக வேட்டையாடப்படுவார்கள்.

     ஒவ்வொரு அணுமின் உலை பிரதேசமும் மர்மமான தீவுகளாக விளங்குகின்றன. அதனுள் செல்வதற்கு வெளியாருக்கும், தனியாருக்கும் அனுமதி கிடையாது. அப்பிரதேசத்தைச் சுற்றி வசிக்கும் மக்களின் உடல் நலம் குறித்த கேள்விகளுக்கு நமக்கு விடை கிடைக்காது. ஊழியர்களின் உடல் நலம் குறித்த பொது விசாரணைகள் அனுமதிக்கப்படமாட்டாது. அப்பகுதிகளின் கதிரியக்கம், உடல் நலம் சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் அணுமின் நிலையத்திலிருந்து வெளியிடப்படும் தகவல்கள் மட்டுமே. நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் நிலை இதுதான். அதனால்தான் செர்னோபில் விபத்து நடந்து அதன் கதிரியக்கப் பாதிப்புகள் தொலைதூர ஐரோப்பிய நாடுகளில் உணரப்பட்ட பிறகுதான் அவ்விபத்து நடந்ததை அப்போதைய சோவியத் அரசு ஒப்புக் கொண்டது. அப்படியானால் அவ்வப்போது நடந்து போகும் கதிரியக்க வெளிப்பாடுகள் மனித உயிர்களின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

     50 ஆண்டுகள் வாழ்நாளைக் கொண்ட ஒரு அணு உலையைக் கட்டுவிக்க ஆகும் காலம் மட்டும் 10 முதல் 15 ஆண்டுகள். அதன் ஆயுளுக்குப் பிறகு அந்த   அணு உலை      சம்பந்தப்பட்ட அனைத்தும் (உலை அமைந்துள்ள இடம், கருவிகள், அணுக்கழிவுகள் உட்பட) பல நூறு ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக சமாதி செய்யப்பட வேண்டும். இதற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு பிடிக்கும். அணு உலை இயங்கும் போது ஏற்படக்கூடிய விபத்துக்கள் மற்றுமொரு பரிமாணமாக விரியும். இதையயல்லாம் கருத்தில் கொள்ளும் புத்திசாலித்தன அரசுகள் அணுமின்சாரத்தை   நிராகரிக்கின்றன. இதன்  பின்  விளைவாகவே பிரான்சின் அணு உலைக் கட்டுமான நிறுவனமான அரேவா பொருளாதாரச் சிக்கலில் இருப்பதாகவும், உலகம் முழுவதும் அணு மின்சார உற்பத்தி இறங்கும் முகத்தில் இருப்பதாகவும் உலக அணுமின்சாரத் தொழில் பற்றிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது (ஆகஸ்டு, 2009). அமெரிக்காவின் மூன்று மைல் தீவு அணு உலை விபத்திற்குப் பின்னர் (1979) எந்தவொரு அணு உலையும் புதிதாக அங்கு கட்டப்படவோ, நிறுவப்படவோ இல்லை. அணுமின் தொழில் இனி அமெரிக்காவில் தலையயடுப்பதற்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க அணு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் டாக்டர் டெலிகிளின் கூறுகிறார். அடுத்த தலைமுறைக்கான அணுமின் உலைகள் அமெரிக்காவில் நிச்சயமாக தயாரிக்கப்படமாட்டாது என சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல் ஒன்று தெரிவிக்கிறது ( IAEA Bulletin, Vol 49/1,2008 ). எனவேதான் கடையை மூடிக்கொண்டிருக்கும் அமெரிக்க அணுஉலைத் தயாரிப்பு நிறுவனங்களான ஜிஇ-ஹிட்டாச்சி, வெட்டிங் ஹவுஸ் மற்றும் பிரான்சின் அரேவா எஸ் ஏ போன்றவைகளின் நிதி நிலையை மேம்படுத்தும் முயற்சியாகவே 100 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்திய - அமெரிக்கா அணு ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

     அணு உலைகள் பற்றி ஆய்வு செய்த சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று இதுவரை கதிரியக்க ஆபத்தை விளைவித்த 151 விபத்துக்கள் நடந்துள்ளதாகக் கூறுகிறது. இந்தியாவிலும் கூட அணுமின் உலைகளில் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. 1987 மே 4-ல் கல்பாக்கத்தில் நடந்த ஒரு விபத்தில் அணு உலையின் மையம் சேதமடைந்ததைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு அதன் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன. மகாராஷ்டிராவின் தாராப்பூர் அணுமின் நிலையத்தில் 1989 செப்டம்பர் 10-ல் கதிரியக்க ஐயோடின் அணு உலையிலிருந்து கசிந்ததைத் தொடர்ந்து அதனை சரி செய்ய ஒரு வருட காலம்  பிடித்தது. சாதாரண கதிர்வீச்சு அளவை விட 700 மடங்கு அதிகமான கதிர்வீச்சு அப்போது இருந்ததாக அணு உலை நிர்வாகம் தெரிவித்தது. 1992 மே 13-ல் மீண்டும் இதே உலையில் 12 கியூரி அளவு கொண்ட கதிரியக்கம் வெளிப்பட்டது. 1993 மார்ச் 31-ல் உத்திரப்பிரதேசம், நரேரா அணுமின் உலையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சேதாரம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. 1995 பிப்ரவரி 2-ல் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அணுமின் உலையிலிருந்து கதிர்வீச்சு தன்மைக் கொண்ட ஹீலியமும், கனநீரும் ரானா பிரதாப் சாகர் ஆற்றில் கலந்தது. இரண்டு வருடங்களுக்கு அந்த உலை மூடப்பட்டது. மீண்டும் கல்பாக்கத்தில் 2002 அக்டோபர் 22-ல் 100 கிலோ அளவுக்கு கதிர்வீச்சு சோடியம் கசிவு ஏற்பட்டு வால்வுகளும். வேறு பல முக்கிய உபகரணங்களும் சேதமடைந்தன. 2009 நவம்பர் 29-ல் அதாவது மிக சமீபத்தில் கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சுத் தன்மையுள்ள கனநீர் குடிநீருடன் கலந்தது. இவ்விபத்தால் அங்குப் பணியாற்றிய 45 ஊழியர்கள் கதிரியக்க வி­த்தன்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, நாட்டில் தற்போது உள்ள 40 அணுமின் உலைகளில் ஒரு விபத்துக்கூட இதுவரை ஏற்பட்டதில்லை என்று பிரதமர் மன்மோகன் நாடாளுமன்றத்தில் கூறுகிறார். இந்தப் பொய்யை மறுத்துப் பேச எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் துணிவில்லை. அணுமின் கூடாரத்தின் வலிமை அத்தகையது. இந்தியாவில் நடந்த மேற்சொன்ன விபத்துக்கள் பல செர்னோபில் விபத்து அளவுக்கு செல்லவில்லை    என்று   நாம்    பெருமைப்பட்டுக்   கொண்டாலும், இந்தியாவின் அணு  உலைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்கதையாக நீடிப்பதை நாம் மறந்து விடக்கூடாது. நவீனத் தொழில்நுட்ப உத்திகளையும், விஞ்ஞானிகளையும், தளவாடங்களையும் கொண்ட சோவியத் யூனியனையும், அமெரிக்காவையும் அணுமின் சக்தி எவ்வாறு வஞ்சித்தது என்பதை செர்னோபில் மற்றும் மூன்று மைல் தீவு விபத்துக்கள் உலகுக்குக் காண்பித்தது. அந்நிகழ்வுகள் அணுமின்சாரத்திற்கு எதிராக உலக மக்களை விழிப்படையச் செய்தது. இது தவிர சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களும் அணுமின் உலைகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. சமீபத்திய சுனாமியில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஒரு பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டதையும், ஜப்பானில் கா´ வசகி என்னுமிடத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் 2007-ல் ஏற்பட்ட மோசமான பூகம்பத்தில் சேதமடைந்ததையும் நாம் சுட்டிக் காட்டலாம். ஜப்பானிய விபத்தில் கதிரியக்கக் கழிவு கலந்த தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் அவை கடலுக்கு திருப்பிவிடப்பட்டது.

     இறுதியாக செர்னோபில் விபத்துக்கு வருவோம். சோவியத் ஒன்றியத்தின் உக்ரைன் பிரதேசத்தில் செர்னோபில் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அணுமின் உலையில் ஏற்பட்ட ஹைட்ரஜன் வெடிப்பு உலையை மோசமாகச் சிதைத்தது. மனிதக் கட்டுப்பாட்டை இழந்த அந்த உலை பெரும் வெப்பத்தையும், கதிரியக்கத்தையும் தோற்றுவித்தது. உலகின் மிகப்பெரும் அணு விபத்தான இதன் கதிரியக்கம் ரஷ்யாவை மட்டுமின்றி காற்றின் திசையில் வெகுதூரம் பரவி ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது. 76,000 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஒரு லட்சம் பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பிரிட்டன் அளவு நிலப்பரப்பு பயனற்றதாகிப் போனது. செர்னோபிலைச் சுற்றி 50 மைல் வட்டத்திற்கு மண் பயனற்றதாகிவிட்டது. கதிரியக்கப் பாதிப்பானது உடலின் திசுக்களை உள்ளேயும், வெளியேயும் மாற்றிவிடும் அல்லது கொன்றுவிடும். பாதிக்கப்பட்ட திசுக்கள் இரத்தப் புற்றுநோயாகலாம், மரபணுக்களை பாதித்து பிறவிக் குறைபாடுகளை உருவாக்கலாம். செர்னோபிலின் பாதிப்புகள் 2030 வரை கூட தொடரும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். மக்கள் நெருக்கம் குறைவாக இருந்த செர்னோபில் மற்றும் சுற்று வட்டாரங்களில் இவ்வளவு பாதிப்பு என்றால் மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ள இந்திய நகரங்களுக்கு அருகாமையில் உள்ள அணுமின் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால்?!!

     உலகின் பல நாடுகளில் புதிது புதிதாக அணுமின் நிலையங்களை நிறுவ முயற்சி செய்யப்படும் வேளையில் மேலும் பற்பல நாடுகள் அணு ஆயுத வல்லமைக் கொண்ட நாடுகளாக    மாறும்    அபாயம்   இருப்பதையும்,   அவை மிக எளிதாக தீவிரவாதிகளின்   கைகளுக்குச் சென்றுவிடும் வாய்ப்புகள் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. அடுத்த சில ஆண்டுகளில் சவுதி அரேபியாவும், சிரியாவும்கூட அணு ஆயுதம் பெற்ற நாடுகளாகிவிடும். சர்வதேச அணு சக்தி கமிஷ‌னின் ஆய்வுப்படி அடுத்த 30,40 வருடங்களில் ஏறத்தாழ 30 நாடுகள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும். அவை தீவிரவாதிகளின் கைகளுக்கு எளிதில் செல்லும். எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அணுமின் உலைகள் என்பதை மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

     அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. 100 பில்லியன் டாலர் மதிப்புடைய அணு   உலைப்    பூங்காக்களை பெற்றுக்  கொள்ள மாநில  அரசுகள் தயாராகிவிட்டன. புதிய அணு உலைப் பூங்காக்கள் கூடங்குளத்திலும், ஆந்திரப்பிரதேசத்திலும், குஜராத்திலும், மஹாராஷ்டிரத்திலும், மேற்கு வங்காளத்திலும் நிறுவப்பட உள்ளன. ஒவ்வொரு பூங்காவிலும் தலா ஆறு அணு உலைகள்.

     சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூடங்குளத்தில் அணுமின் உலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சார்ந்த மக்கள் பலமான மக்கள் இயக்கத்தை நடத்தினர். அந்த இயக்கம் துளிர்விடவும், வீச்சுடன் இயங்கவும் ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்பட்ட எழுத்தாளரும், அணு விஞ்ஞானியுமான நாகார்ஜூனன் (எ) ரமேஷ் கோபால கிருஷ்ணன் சொல்லுவார். “அணு மின் உலை நிறுவும் பணிகளை இந்த இயக்கம் தடுக்க முடியவில்லை. ஆனால் பல ஆண்டுகள் தாமதப்படுத்த முடிந்தது.  இதுதான் அந்த மக்கள் இயக்கத்திற்குக் கிடைத்த தார்மீக வெற்றி.  

     “அணு உலைப் பூங்கா வேண்டாம், உலகமே பூங்காவாக மாற வேண்டும் என்னும்  எண்ணத்தோடு மக்கள் நேரடியாகக் களம் இறங்கினால் மட்டுமே நாளைய உலகம் மக்களுக்கானதாக இருக்க முடியும்.
                              -----------------

நன்றி: குமுதம்-தீராநதி,அக்டோபர்,2010






    
      
                 



                  


2 comments:

  1. ஆம். ஒரு விஞ்ஞானியும் அரசியல்வாதியாகி விட்டார். மிகச் சுலபமாகத் தகர்க்கக் கூடிய கேள்விகளைத் தான் கலாம் ஹிந்துவில் கேட்டுள்ளார். அவர் கருத்துக்கு ஆதரவாக பிரசுரமாகிய வாசகர் கடிதங்கள் அனைத்தும்
    வேறு மாநிலத்திலிருந்து வந்தவையே. தமிழகத்தில்
    யாரும் இதனை ஆதரிக்க முடியாது.

    கம்யூனிஸ்ட்களின் கள்ள மெளனம்.
    அறிவுஜீவிகளின் விஞ்ஞான மோகம்.
    கிறிஸ்துவ மிஷன்களின் சதி என்று சொல்லும்
    மதவாதிகள்.
    எல்லாவற்றிலும் காசு பார்க்கும் அரசியல்வாதி.

    இவர்களை மீறி ஜெயிக்க வேண்டும்.
    குறைந்த பட்சம் தமிழ்நாடாவது ஒன்று திரள
    வேண்டிய நேரம்.

    ReplyDelete
  2. அணு உலை என்பது தமிழ்நாட்டின் சுடுகாட்டிற்கு அடித்தளம் தான் என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும்,
    என்ன விலை கொடுத்தேனும் இதை படித்தவர்கள் ஆகிய நாம் ,எளிய ஏழை மக்களுக்கு புரியவைக்க வேண்டும். இந்தியாவில் எளிய ஏழை மக்களின் தொகையை அதிகம் .அவர்களின் மின்சார தேவை என்பது மிகவும் குறைவு அதற்கு அணு உலை என்பது தேவையே இல்லை
    ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு மாத மின் தேவை என்பது மிக மிக குறைவு, அதே சமயம் பன்னாட்டு கம்பனிகளில்(Hyundai, nokia,and which are all the companies in special economical zone area) சில ,மாதா மாதம் மட்டும் பல பல கோடிகள். அவர்கள் உபயோக படுத்தும் மின்சாரம் மட்டும் கொண்டு இரண்டு தமிழ்நாடு (Domestic purpose) கொடுக்க முடியும்
    மேலை நாடுகளில் கூட குறிபிட்ட அளவுக்குக் மேல் மின்சாரத்தை பயன்படுத்த தடை உள்ளது வேண்டுமானால் அந்த கம்பெனிகள் சொந்தமாக டீஸல் பிளான்ட்(Diesel Plant) செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.(min 50%)
    அவர்களுக்கு நிலம் களையும் கொடுத்து நிரையும்கொடுத்து மின்சாரத்தை கொடுத்து,வேலை செய்ய குறைந்த விலையில் ஆட்களும் கொடுக்கும் இந்தியா போன்ற இளிச்சவாயன் நாடு இருந்தால் அதற்கு அரசியல்வாதி மறைமுகமான ஆதரவும்தான் இன்று நமக்கான அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற மறந்து அவர்களின் மேல் தேச துரோகி என்ற பெயரை கொடுக்க முன் வந்திருக்கும் அரசியல் வாதிகளின் முகமூடிகளை கிழிக்க மக்களே சிந்தியுங்கள்.

    ஜாதி இன மொழி உணர்வுகளை மறந்து போராடுவோம் வென்று காட்டுவோம்

    "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு"

    ReplyDelete