Monday, 24 October 2011

சல்வாஜுடும்,கோப்ரா படைகள்,பசுமை வேட்டை இன்னும் என்னென்ன வந்தாலும்...

                இந்தியாவின் இதயம் இப்போது அதிர்ந்து கொண்டிருக்கிறது. துடித்துக் கொண்டிருந்த இதயத்தை அதிரச் செய்து எதிர்காலத்தில் சிதறடிக்கவும் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்முயற்சிகளின் பெயர் பசுமை வேட்டை (Operation Green Hunt). பன்னாட்டு நிறுவனங்களுக்காக விளிம்புநிலை மக்களின்  கூடாரங்களைக் காலி செய்வதற்கு புறப்பட்டுவிட்டது இந்திய அரசின் இராணுவப் படைகள். நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கமும்  வேண்டும்  வளர்ச்சிக்கு அரசும்,  பன்னாட்டு நிறுவனங்களும்உதவத்தயாராகி விட்டார்கள். ஆட்சியாளர்களுக்கு ஜி.டி.பி.ன் வளர்ச்சி எண் முக்கியம். அது இரட்டை இலக்கை அடைய பல கோடி மக்களின் வாழ்க்கையைக் குப்புறத்தள்ளவும், பல்லாயிரக் கணக்கில் பழங்குடி மக்களை வேட்டையாடவும் அரசு தயங்காது. கானகத்தில் கதறும் பல லட்சம் மக்கள் எழுப்பும் அபயக்குரல்கள்வளர்ச்சி, வளர்ச்சிஎன்ற ஒன்றையே பைத்தியமாகச் சொல்லி கொண்டிருக்கும் அரசுக்கு எப்போதுமே எட்டப் போவதில்லை. அவர்களை தம் மக்கள் என்று அரசு கருதுவதில்லை, பாதுகாப்பதில்லை. பசுமை வேட்டை தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. முதல்கட்டம், இரண்டாம் கட்டம் என்று கட்டம் கட்டமாக நகர்கிறது. கானகத்தின் முதுகெலும்பு  முறிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. அதைப் பற்றி யாருக்கும் கிஞ்சித்தும் கவலையில்லை. கனிமச் செல்வங்களை கொள்ளை கொண்டு போவதற்காக நாள்தோறும் பழங்குடியின மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.

                அரசுக்கு வளர்ச்சி முக்கியம். அதுவும் வேகமான வளர்ச்சி. முதுகெலும்பற்ற, போலித்தனமான வளர்ச்சி. பாக்சைட் வெட்டி எடுக்கப்பட்டு சுரங்கத் தொழில் வளர்ச்சியடைவதாகக் காண்பிக்க வேண்டும். கனிம வளங்களை ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணி ஈட்ட வேண்டும். உள்நாட்டு முதலாளிகளிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் ரகசியமாகக் கையயழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி காடுகள் அழிக்கப்பட்டு, மலைவளம் தொலைக்கப்பட்டு, பல லட்சம் ஏக்கர் வளமான பூமியை அவர்களிடம் தாரை வார்க்க வேண்டும். வனத்தின் எழிலை,  அதன் பாரம்பரிய மக்களை அழித்தாவது தனது பொதுப் புத்தியில் கட்டி  எழுப்பியிருக்கிறவளர்ச்சிஎன்றக் கருத்தாக்கத்தைப் பிடித்துத் தொங்க வேண்டும்.
                பழங்குடியினரின் எழுச்சி பற்றி பள்ளிக்கூட வரலாற்றுப் பாடங்களில் படித்திருக்கிறோம். சந்தால், கோல்,  முண்டா, கோண்டு இன மக்கள் ஆங்கிலேயர்களையும், ஜமீன்தார்களையும், லேவாதேவிக்காரர்களையும் எதிர்த்து வீரம் செறிந்தப் போராட்டங்களை நடத்தியதாக வரலாற்றுப் பாடம் வியந்து போற்றும். மாவோ தோன்றுவதற்கு பல   நூறு     ஆண்டுகள்   முன்பிருந்தே   இப்போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது என்ன பெயர் வைத்து இவர்களை அழைத்திருப்பார்கள்? எக்காலமானாலும் அவர்களதுப் போராட்டத்தின் நோக்கம் ஒன்றுதான். “எங்கள் வாழ்விடங்களைப் பறிக்காதீர்கள்”.அரசுக்கு எதிராக, அதிகாரவர்க்கத்திற்கு எதிராக பழங்குடி மக்கள், நிலமற்ற ஏழை விவசாயிகள், சிறு விவசாயிகள், தலித்துக்கள் இவர்களின் எழுச்சிப் போராட்டங்கள் வரலாற்றுக்காலம் தொட்டே நடந்து  வந்திருக்கின்றன.  சுதந்திர இந்தியாவிலும் கூட தெலுங்கானாப் புரட்சியாக  ஐம்பதுகளிலும்,   நக்சல்பாரி   எழுச்சியாக    அறுபதுகளின்   இறுதியிலும்,  எண்பதுகளில்   தொடங்கி   இன்று    வரையிலும்    இவை   தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.   இப்போராட்டங்களின்      மையக்களம்       மத்திய,      கிழக்கு    இந்தியாவின் செழிப்பான கனிம வளம் நிறைந்த காட்டுப் பகுதிகள்.  சத்தீஸ்கர்,  ஜார்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்குவங்காளம், மஹாராஷ்டிரம் மற்றும்  ஆந்திரப்பிரதேச  மாநிலங்களின் எல்லைப் புறத்தை ஒட்டிய  60000 சதுர கிலோ மீட்டர் காட்டுப் பகுதிகள்.

                ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பழங்குடிகள் என்றால் நாளை தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள். இப்படிதான் நாட்டின் 80 சதவீத சொத்துக்களையும், வளங்களையும் அனுபவிக்கும் 20 சதவீத மக்களுக்காக  எஞ்சிய 80 சதவீத மக்கள் விளிம்புகளை நோக்கி துரத்தப்படுகிறார்கள். இவை அனைத்தும்வளர்ச்சிஎன்ற பெயரால் நடக்கும். இப்போதும் கூட தண்டேவாடா காடுகளில் பழங்குடி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் என்றக் கட்டுக்கதைகளை அரசு பரப்பி வருகிறது. ஆனால் அம்மக்களின் மத்தியில் பணிபுரிந்து  வரும் காந்தியவாதியான ஹிமான்சுகுமார் அரசு சொல்லும் பொய்களைப் போட்டுடைக்கிறார். அரசின் நலத்திட்டங்கள் பழங்குடி மக்களை போய்ச் சேரவில்லை என்றுத் திட்டமாகச் சொல்கிறார். அம்மக்களுக்கு பள்ளிக்கூட, சுகாதார மற்றும் சாலை வசதிகள் இல்லை. ஆனால் கானகங்களில் சுரண்டப்படும் கனிம வளங்கள் வெளிக் கொண்டு போவதற்கு வசதியாக காடுகளுக்கு நடுவில் அகன்ற சாலை வசதிகள் செய்து  தரப்பட்டுள்ளன. ஆனால் பழங்குடிப் பெண்கள் ஒரு கட்டு விறகு கொண்டு செல்வதைக் கூட பெரும் குற்றமாக வனத்துறை அதிகாரிகள் கருதி, அப்பெண்களை வன்புணர்வு செய்தார்கள். வீடுகளில் உள்ள முதியவர்கள் குத்திக் கொள்ளப்படுகிறார்கள். ஆண்கள் தொலை தூரங்களுக்கு விரட்டப்படுகிறார்கள்.

                தொல் பழங்காலத்திலிருந்து பழங்குடி மக்கள் வனத்தை தெய்வமாகக் கருதுவதால்தான் இதுவரையிலும் காடுகள்  பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. எப்போது பழங்குடி மக்கள் காடுகளிலிருந்து விரட்டப்பட்டார்களோ, அவர்களின்  வாழ்விடம் நாசமாக்கப்பட்டதோ அப்போதே இந்தியாவின்  இதயம்   படபடக்கத்  தொடங்கிவிட்டது.ஏனென்றால் இந்தியா என்பது ஜன்பத் சாலையை மட்டுமல்ல, தண்டேவாடாக் காடுகளையும் உள்ளடக்கியதுதான். டாடா, அம்பானிகளை மட்டுமல்ல சிறுபான்மை இன மக்கள், பழங்குடி மக்கள், தலித்துகள், நிலமற்ற ஏழை விவசாயிகள் இவர்களையும் உள்ளடக்கியதுதான். உங்கள் கைகளில் ஆயுதம் ஏந்திக் கொண்டு பழங்குடிகளை அவர்களது பூர்வீக இடங்களிலிருந்து விரட்டியடிக்க உங்களுக்கு உரிமை உண்டென்றால், அதைத் தடுத்து திருப்பித்தாக்க அப்பழங்குடி மக்களுக்கும் தார்மீக, அறரீதியான உரிமையுண்டுதானே.

                அரசு என்பது தன் ஆளுகைக்குட்பட்ட மக்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும். எவ்வளவு இடர்கள் வந்தாலும் அவர்களைக் கைவிடக்கூடாது. நாட்டின் வளர்ச்சி என்பது கடைசிக் குடிமகனின் வளர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும்தான் உள்ளது என்பதை அரசின் தலைமை அமைச்சர் உணர வேண்டும்.
                               
                இயற்கை வளங்களையயல்லாம் ஒருதலைமுறைக்காலம் முடிவதற்குள்ளாகவே அனுபவித்துவிட வேண்டும் என்று அதிகார வர்க்கமும், பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளும் கொண்டுள்ள லாப வேட்கையை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? நாட்டின்  மீது    அக்கறை    கொண்ட அறிஞர்களாகட்டும்,   மாவோயிஸ்ட்களாகட்டும், சமூகசேவகர்களாகட்டும் அவர்களது கருத்துகளின் சந்திப்பு புள்ளியாக உலகமய எதிர்ப்பும், ஏகாதிபத்திய எதிர்ப்புமாகத்தான் இருக்கும். கானகத்தில் பிறந்த குற்றத்திற்காக                                  அனைத்து சித்ரவதைகளையும் ஏற்கப் பழங்குடி மக்கள் பழகிவிட்டார்கள். காடுகளையும், தங்கள் பூர்வீக வசிப்பிடங்களையும், இயற்கை வளங்களையும் எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியுடன் உள்ளனர்.

                 புகழ்பெற்ற பத்திரிகைகளிலும். சஞ்சிகைகளிலும் மாவோயிஸ்ட்  பிரச்சினைகளைப் பற்றிய விரிவான கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. பிரச்சினைகளின் மையக்கருத்தை சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும், எழுத்தாளர்களும் ஒப்புக் கொள்வதைப் போல பாதுகாப்பு வல்லுநர்களும், போலீஸ், ராணுவ அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.அரசு நிர்வாகங்களின் அடக்கு முறைகளைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். லஞ்சத்தைப் பேசுகிறார்கள். காவல் படைகளின் சீரழிவுகளை ஒப்புக் கொள்கிறார்கள். 2001-ல் 56 மாவட்டங்களில் மட்டுமே செயல்பட்ட மாவோயிஸ்ட்கள் இன்று 223 மாவட்டங்களில் பரவியது எப்படி என அலசுகிறார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர், அதாவது 84 கோடி பேர் இன்னமும் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்குக் குறைவாகத்தான் சம்பாதிப்பதையும், இவர்களில்    பாதிக்கும்   மேல்   அதாவது   42    கோடி   பேரின்       தினவருமானம் ரூபாய் 10 தான் என்பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார்கள். மாவோயிஸ்ட் இயக்கத்திற்குள் மேலும் மேலும் இளைஞர்கள் சேர்ந்து விடாமல் தடுப்பது எப்படி என்று விளக்குகிறார்கள். மாவோயிஸ்ட்கள் இப்போதெல்லாம் நிலவுடைமையாளர்களை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை, செயல்படாத அரசு இயந்திரத்தையும், லஞ்சத்தையும் எதிர்த்துப் போராடுவதாகவும் கூடக் குறிப்பிடுகிறர்கள். ஆனால் பிரச்சினையின் மையத்தை ஒப்புக் கொள்ள அவர்கள் தயங்குகிறார்கள் அல்லது மறுக்கிறார்கள். இந்நாட்டு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மத்திய, மாநில அரசுகளின் துணையோடு லட்சக்கணக்கான ஏக்கர் கனிம வளத்தோடு கூடிய வளமான நிலங்களை அபகரிக்கமுயல்வதுதான் பிரச்சினையின் அடிநாதம். வளமான மலைப் பிரதேசங்களின் அடியில் புதைந்துள்ள, பல லட்சம்  கோடி ரூபாய் பெறுமானமுள்ள கனிம வளங்கள்தான் அவர்களது குறி. கர்நாடக அரசின் சமீபத்திய தகவலின்படி, இரும்புத் தாதுவை வெட்டி எடுக்கும் தனியார் நிறுவனம் அரசிற்கு ஒரு டன்னுக்கு தரும் உரிமத் தொகை எவ்வளவு தெரியுமா? 27 ரூபாய் மட்டும்தான். ஆனால் அந்நிறுவனம் சம்பாதிக்கும் தொகை ரூ.5000. பாக்சைட் தாதுவின் நிலையும் இதுதான்.

                சில்லறை எலும்புத் துண்டுகளை அரசுக்கும், பூர்வீகக்குடிகளுக்கும் எறிந்துவிட்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இத்தேசத்தை, இம்மக்களை,   இந்நதிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் காடுகளையும், அதன் செல்வங்களையும்  சூறையாடுவதுதான் அவர்களின் முதன்மையான நோக்கம். இத்தகைய ஆசாமிகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள நமது இளம் படை வீரர்களை மற்றொரு பக்கம் இந்த  மண்ணையும், நீரையும், கனிம வளத்தையும் காக்க தம்மையே உதிர்த்துக்கொள்ளத் தயாராகயிருக்கும் பழங்குடிகளோடும், நிலமற்ற ஏழை விவசாயிகளோடும் மோத விடுகிறார்கள். அப்படியானால் பழங்குடியினருக்குத் தனியான அந்தஸ்தும், சிறப்புப்பிரிவுகளும் அரசியல் சட்டத்தில் ஒதுக்கியிருப்பதெல்லாம் வெறும் கண் துடைப்புதானா?
      
   இதுவரை 223 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் தங்களது பிடியை இறுக்குவதற்கு முதன்மையான காரணம் இந்திய அரசாகத்தான் இருக்க முடியும். நூற்றுக்கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் உருவாக்கமும், அரசுக்கும், பன்னாட்டு   நிறுவனங்களுக்கும்    மட்டுமே    உள்ளடக்கத்தைத்    தெரியப்படுத்தும் MOU-க்களின் கயமைத்தனமும், சில்லறை  வணிகர்கள் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்டதும்,   வளர்ச்சித்   திட்டங்கள்   எனக் கூறி  பல  லட்சக்கணக்கான ஏக்கர்    வளமான    நிலங்கள்      கையகப்படுத்தப்பட்டு      பங்கு       போடப்பட்டதும் மாவோயிஸ்ட்களின் தளத்தை விரிவுப்படுத்தவே செய்தன. “நாட்டின் வளர்ச்சியில் (மேல் அடுக்கின் 20 சதவிகித மக்களின் வளர்ச்சியில்) பங்கேற்க, நீங்கள் மைய நீரோட்டத்தில் கலந்து விடுங்கள்  என்று பழங்குடி மக்களைச் சுரண்டுவதற்கும், மிரட்டுவதற்கும் அரசுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. அம்மைய நீரோட்டத்தின் சுழலுக்குள்  விளிம்பு நிலை மக்கள் அமுக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுவார்கள். உலகம் முழுவதும் பழங்குடி மக்கள் இப்படித்தான் நிர்மூலமாக்கப்பட்டார்கள்.அரசின் நலத்திட்டங்களும், நிர்வாகமும்,  நீதியும் அம்மக்களைச் சென்றடைவதில்லை. லஞ்சமும், அடக்கமுறைகளும் அரசு இயந்திரத்தின் தன்மைகளாக இருக்கும் போது, உரையாடல் என்பது இவ்விரு எதிரெதிர் பிரிவுகளிடையே சாத்தியமில்லாதபோது அடக்கப்படும் மக்களின் நாயகர்களாக மாவோயிஸ்ட்கள் திகழ்கிறார்கள்.

                மாவோயிஸ்ட்களுடனானப் போரில் சண்டை நிறுத்தம் செய்துவிட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, பழங்குடி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் தயங்குவதற்கு என்ன காரணம் என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எவ்வளவு தீங்கு நேரிட்டாலும் தாராளமய, உலகமயக் கொள்கைகளைக் கைவிட அரசு தயாரில்லை. பன்னாட்டு நிறுவனங்களாலும். உள்நாட்டு பெரு முதலாளிகளாலும் நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை அரசு வேடிக்கைப் பார்க்கிறது. அல்லது உடந்தையாக நிற்கிறது. இயற்கை சூறையாடப்படும் போது அது திருப்பித் தாக்குவதைப் போல பழங்குடி மக்களின் வாழ்க்கை சூறையாடப்படும்போது, நாசமாக்கப்படும்போது அம்மக்களும் எதிர்வினை புரிகின்றனர்.
                பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மாவோயிஸ்ட் பிரச்சினைகள் ஒன்றும் புதிதல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், அவர் தலைமையில் மத்திய அரசு ஒரு குழு ஒன்றை அமைத்தது. ஆந்திரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் வன்முறைச் சூழல் மற்றும் மாவோயிஸத்தாக்கம் குறித்தும் அக்குழு ஆய்வு செய்தது. பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பது நியாயமாக விவாதிக்கப்பட்டு அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டது. அவ்வறிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும் அறிக்கையின் நியாயமான உள்ளடக்கத்தைப் பற்றி அப்போது நடந்த செய்தியாளர் கூட்டமொன்றில் கோடிட்டுக் காட்டினார் மன்மோகன்சிங். அப்போது மாவோயிஸ்டுகளை தீவிரவாதிகளாக அவர் கருதவில்லை.

                கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசின் திட்டக் குழுவினால், அதாவது மன்மோகன்சிங் மற்றும் அலுவாலியாவால் அமைக்கப்பட்ட ஒரு நிபுணர்குழு இந்தியாவின் பல   மாநிலங்களில்    மாவோயிஸ்ட்களின்    ஆயுதப்    போராட்டத்துக்கு      வலுவான ஆதரவு தொடருவது ஏன், அங்கு வளர்ச்சிப் பணிகள்  சந்திக்கும் சவால்கள் என்பன குறித்து ஆய்வு செய்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது அறிக்கையை அது சமர்ப்பித்தது. 5 அத்தியாயங்களையும், 95  பக்கங்களையும் கொண்ட அறிக்கை 1 சில முக்கியமான பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்ட்களின் இயக்கத்தை அரசியல் இயக்கமாகக் காண வேண்டும். நிலமற்ற வறிய விவசாயிகள், விவசாயக் கூலிகள், தலித் மற்றும் ஆதிவாசி மக்கள்தாம் இவர்களைப் பெரிதும் ஆதரிப்பவர்கள். சமுதாய நீதி, சமத்துவம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவையே இவர்களின் முக்கியக் கோரிக்கைகள். அரசாங்கப் படைகள், மாவோயிஸ்ட்கள் இடையில் சண்டை நிறுத்தப்பட வேண்டும். மோதல் கொலைகள் நிற்க வேண்டும். இந்திய மற்றும் மாநில அரசுகள் மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களைக் கையளித்தால்தான் பேசுவோம் என அரசு சொல்ல வேண்டியதில்லை என்றெல்லாம் அதன் பரிந்துரைகள் நீள்கிறது. மாவோயிஸத்தின் வளர்ச்சி, இவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்க்கை, நீதிபரிபாலன அமைப்பு பற்றியும் இந்த அறிக்கை கூறுகிறது.

                ஆனால் மன்மோகன்சிங்கோஉள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகவும் அபாயமானவர்கள் மாவோயிஸ்ட்கள்என்கிறார். ஜிகாத் பயங்கரவாதிகளைவிட மாவோயிஸ்ட்கள் பயங்கரமானவர்கள்  என்றும்,  இன்னும் 2,3 வருடங்களில் அவர்கள்  ஒழித்துக் கட்டப்படுவார்கள் என்று சிதம்பரம் கூறுகிறார். அரசு தன்னை நோக்கி பழங்குடி மக்களை ஈர்த்துக் கொள்ளாத வரை மாவோயிஸ்ட்கள் என்ற காந்தத்தை நோக்கி அவர்கள் கவரப்படவே  செய்வார்கள் என்பதை மறந்துவிட்டுதான் சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் அவ்வாறு பேசுகிறார்கள். பிரச்சினையின் அடிப்பகுதியை உணர்ந்து செயல்படாத வரை 2,3 வருடங்கள் அல்ல 23 வருடங்களானாலும் மாவோயிஸ்ட்களின் இருப்பை இல்லாமலாக்கி விட முடியாது.

                2005-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பி.ஜே.பி. அரசு இரண்டு இரும்பு ஆலைகளை அமைப்பதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எஸ்ஸார் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களுடன் செய்து கொண்டது. ஒப்பந்தத்தின் விபரங்கள் ரகசியமானவை. இத்திட்டங்களின் மதிப்பு ரூ.17000 கோடி. அதற்குப் பின்புதான் பழங்குடி மக்களை அவர்களது வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிப்பதற்காக சல்வாஜூடும் என்றப் பழங்குடி இன குண்டர் படையை சத்தீஸ்கர் அரசு ஏற்படுத்துகிறது.  சல்வாஜூடும் என்பதற்குஒருங்கிணைந்த அமைதி இயக்கம்என்பது பொருள். இதன்படி    பழங்குடி   இன மக்கள்     அரசு    ஏற்படுத்தியுள்ள      முகாம்களுக்குச்  சென்று அங்கு       வசிக்க     வேண்டும்.      அவ்வாறு      முகாம்களுக்கு     வராதவர்கள்   மாவோயிஸ்ட்கள் எனக் கருதப்படுவார்கள். அதாவது பன்னாட்டு நிறுவனங்களும். இந்நாட்டு பெரு நிறுவனங்களும் நமது இயற்கைச் செல்வங்களைச் சுரண்டுவதற்கு தடையாக விளங்கும் பழங்குடி இனமக்கள் அவர்களது வாழ்விடங்களிலிருந்து வேரோடு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
               
                அதன் தொடர்ச்சியாக பழங்குடி இனமக்களின் குடிசைகள் கிராமம் கிராமமாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஜூன்-18-2005-ல் அம்பேலி கிராமத்தில் தொடங்கிய வேட்டை டிசம்பர் 2005‡க்குள் பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்கியதோடு பல்லாயிரக்கணக்கான மக்களை ஆந்திராவிற்கும் ஒரிஸ்ஸாவிற்கும் துரத்தியது. 60000 மக்கள்அரசு முகாம்களுக்குக் கொண்டு வரப்பட்டனர். எஞ்சியவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தினுள்ளும், காடுகளினுள்ளும் தஞ்சம் புகுந்தனர். 644 கிராமங்களை துப்புரப்படுத்தியிருப்பதாக அரசு சொல்லிக் கொண்டது. பலநூறு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர். அம்மக்களின் கொஞ்ச, நஞ்ச சொத்துக்களான குடிசைகளும், கோழிகளும் சூறையாடப்பட்டன.

                சல்வாஜூடும் அமைப்பு தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 5000 மட்டுமே. அது தோற்றுவிக்கப்பட்ட பின்பு அவர்களின் எண்ணிக்கை 1,10,000. அதாவது 22 மடங்கு அதிகமாக வளர்ந்திருக்கிறார்கள். எனவேதான் தேசத்தை சேதப்படுத்திக் கொண்டிருக்கும் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள், ஏகாதிபத்தியக் கோரங்கள் அரசால் கடைப்பிடிக்கப்படும் வரை மாவோயிஸ்டுகளை ஒழிக்க சல்வாஜூடும், கோப்ரா படைகள். பசுமை வேட்டை இன்னும் என்னென்ன வந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

                சத்தீஸ்கரின் மாவோயிஸத் தாக்கம் மிகுந்த மாவட்டம் ஒன்றின் காவல் உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தந்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.

                போலீசாலும்,இராணுவத்தாலும் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. பேராசை என்பதைப் பழங்குடி மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் பிரச்சினையே. அங்கிருந்து படைகளை விலக்கிவிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டியை வைத்துவிட்டோமானால் பிரச்சினை தானாகவே சரியாகிவிடும்.”
                இந்த யோசனை மன்மோகன்சிங்கிற்கும், சிதம்பரத்திற்கும் உதிக்காமல் போனதெப்படி?.  
                                                     ---------------------------------------

  தீராநதி,ஜுன்-2010   
                                                                                           

1 comment:

  1. மனித வளங்களாகட்டும், பூமி வளங்களாகட்டும்
    அதனை தவறான லாபங்களைக் கணக்கில் கொண்டே
    உபயோகிப்பதில் எந்த அரசும் விதிவிலக்கல்ல.
    மன்மோகன்,சிதம்பரம் என்பன வெறும் பெயர்களே.
    எல்லா நிறத்திற்கும் சொந்தமான கட்சிகள் அனைத்தும் எவ்வித வேறுபாடின்றி இதனையே செய்கின்றன.

    word verification எடுத்துவிடுங்கள்.

    ReplyDelete