Monday, 24 October 2011

போபால் பேரழிவு : நீதி என்னும் பெருங்கூத்து!


                சில மாதங்களுக்கு முன்னர் போபால் நகரத்தின் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று போபால் விஷவாயு விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் வாரன் ஆன்டர்சனுக்கெதிராக இரண்டாம் முறையாக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது உத்தரவைப் பிறப்பித்தது. வெள்ளை நிறம் கொண்ட ஒரு பொம்மைக்கு சுருக்குக் கயிறு மாட்டி போபால் நகர மக்கள் அத்தீர்ப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர். நீதி வெல்லும் போது அல்லது எதிர்காலத்தில் வெல்லும் என்ற நம்பிக்கையைத் தரவல்ல நிகழ்வுகள் நடைபெறும்போது இது போன்ற அப்பாவித்தனமான கொண்டாட்டங்கள் நடந்துதான் தீரும். எந்தவொரு வி­யத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது போன்றவைதான் மகிழ்ச்சியானத் தருணங்கள், ஆனால் ஜூன் -7 போபால் விஷவாயு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னால் இத்தகையத் தீர்ப்பு ஒன்று வரும் என அவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். சட்டத்தின் ஓட்டைகளை அறியாத அப்பாவி மக்கள் இவர்கள். தவறு செய்த போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கும், அதன் தலைவர் வாரன் ஆன்டர்சனுக்கும், யூனியன் கார்பைடு இந்தியத் தலைவர் மஹிந்திராவுக்கும் அதிகபட்சத் தண்டனைகள்  வழங்கப்பட வேண்டும், வழங்கப்படும் என்ற நம்பிக்கையோடு அம்மக்கள் நீதிமன்ற வாசலில் அப்பாவித்தனமாகக் காத்திருந்தார்கள். சட்டத்தின் உட்பிரிவுகள் எல்லாம் அவர்களுக்குத்தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் முப்பதாயிரம் மக்களின் உயிர்ப்பலி வாங்கிய கார்ப்பொரேட் படுகொலையாளன் வாரன் ஆன்டர்சனுக்கு தூக்கும் கூடத் தகும் என்ற இயற்கை நீதிதான். தீர்ப்பில் வாரன் ஆன்டர்சன் பெயரே உச்சரிக்கப்படவில்லை என்ற செய்தியை அறிந்த மக்களின் கோபம் என்ன நிலை அடைந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே அம்மக்களை நுழையவிடாமல் தடுத்தனர் காவல் துறையினர்.  26 வருடங்களாகப் போராடி, போராடியே தேய்ந்து போன மக்களுக்கு இதைவிடக் கொடுஞ்செய்தி  வேறு என்ன இருக்க முடியும்?

                பேரழிவு ஆயுதங்கள் வைத்திருந்ததாகப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, தனது நாட்டிலேயே அமெரிக்க அரசால் தூக்கிலிடப்பட்ட சதாம் உசேன்தான் உடனடியாக என் நினைவுக்கு வந்தார். உண்மையானப் பேரழிவுக்குக் காரணமான வாரன் ஆன்டர்சன் நியூயார்க் நகரத்தில் நிம்மதியாக  வசித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கக் குற்றவாளிகளை பொம்மை வடிவம் செய்து அதற்கு வேண்டுமானால் நாம் சுருக்கு மாட்டலாம். ஆனால் அமெரிக்க அரசோ நம் ஒவ்வொருவருக்கும் சுருக்கு மாட்டும் அதிகாரம் படைத்தது.

                1985, டிசம்பர்-2 நள்ளிரவில் அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜூன்சிங் தனது ஹெலிகாப்டரில் ஏறித் தப்பித்துச் செல்ல, ஏழை மக்கள் விட்டில் பூச்சிகளைப் போலச் செத்துக் கொண்டிருந்தனர். அந்த விஷ‌வாயு சாதாரணமான ஏழை மக்களின் குடியிருப்புக்குள் நுழையாமல் காற்றின் திசை மாறி தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றிருக்குமானால் வழக்கின் வேகமும், அரசின் கோபமும், நஷ்ட ஈட்டின் அளவும் இப்படியா இருந்திருக்கும?  

டிசம்பர்-3, 2009 அன்றோடு 25 வருடங்கள் ஓடிப்போய் விட்டன. போபால் விஷ‌வாயு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் இன்னமும் கண்ணீர்க் கனவுகளாகவேத் தொடர்கின்றன. 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் வாரன் ஆன்டர்சனை கூண்டில் ஏற்றத் திராணியற்ற இந்திய அரசின் அறப்பண்புகள் ஆன்டர்சன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நாளன்றே செத்துப் போய்விட்டன. இனி ஆன்டர்சன் சரணடைய வாய்ப்பே இல்லை. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவிடம் சரணடைந்திருக்கிறார். ஒருமுறை அல்ல, பலமுறை.  ஒவ்வொரு முறை அமெரிக்காவுடன்  ஒப்பந்தத்தில் கையயழுத்திடும் போதும், அமெரிக்க அதிபருடன் கைகுலுக்கும் போதும் அவர் சரணடைகிறார். நமது பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவின் நலன்    கருதி   கைகழுவிய  பிரதமர், இந்திய - அமெரிக்க    அணு   ஒப்பந்தத்தை அனுமதித்ததன் மூலம் நமது சுயேச்சையான அணுக் கொள்கையை அமெரிக்கா முடிவு செய்யுமாறு விட்டுவிட்டார். அந்த ஒப்பந்தத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பாராளுமன்றத்தில் பிரதமர் பட்டியலிட்டவை எதுவும் தர அமெரிக்கா தொடர்ந்து மறுத்து  வருகிறது. அமெரிக்க அரசு ஒரு கார்பொரேட் அரசு மட்டுமல்ல,  கார்பொரேட்டுகளுக்காகவே செயல்படும் அரசு. எனவேதான்  மெக்சிகோ வளைகுடாவை தனது கச்சா எண்ணெய்க் கசிவின் மூலம் நாசப்படுத்திய பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP)நிறுவனத்திடமிருந்து நஷ்டஈடாக 20 பில்லியன் டாலரை பெற அதனால் முடிந்திருக்கிறது.BP கச்சா எண்ணெய்க் கசிவு விபத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை மொத்தம் 11 பேர்.

                2008-ம் ஆண்டு அமெரிக்காவில் வையோக்ஸ் என்ற மருந்தை உட்கொண்டதனால் மாரடைப்பு, வாதம் மற்றும் மரணத்தால் பாதிக்கப்பட்ட 47 ஆயிரம்  பேருக்கும் தலா 1 லட்சத்து மூவாயிரம் டாலர் வீதம் மொத்தம் 4.85 பில்லியன் டாலர் நஷ்ட ஈட்டுத் தொகையை மெர்க் மருந்து நிறுவனம் அளித்தது.

                லாக்கர்-பை விமான விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 மில்லியன் டாலர் வீதம் மொத்தம் 2.7 பில்லியன் டாலரை நஷ்ட ஈடாக லிபிய அரசுத் தந்தது. யாருமே உயிரிழக்காத எக்ஸான் வால்டெஷ் எண்ணெய்க் கசிவு விபத்தில் கூட 507 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக அளிக்கப்பட்டது.

                போபால் விபத்தை அடுத்து 3,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றின் மொத்த இழப்பீட்டுக் கோரிக்கை எவ்வளவு தெரியுமா? 150 பில்லியன் டாலர். ஆனால் மிக நியாயமாக நடத்தப்பட்ட மோர்ஹவுஸ் மற்றும் சுப்ரமணியன் ஆய்வுக்குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு மற்றும் மறு நிர்மாணத்திற்கு ஆகும் செலவு நான்கு பில்லியன் டாலர் என மதிப்பிட்டது.       

                ஆனால் போபால் விபத்தில் இறந்து போன 30 ஆயிரம் பேருக்கும், பல்வேறு பாதிப்புகளை உள்வாங்கிக்   கொண்டு   வாழ்க்கை   நடத்திக் கொண்டிருக்கும் 5 லட்சம்  பேருக்கும் மொத்த நஷ்ட ஈடாக பேரம் பேசி, வழக்கின் தன்மையை நீர்த்துப் போகச் செய்து நாம் பெற்றத் தொகை   470   மில்லியன்   டாலர்.  சராசரியாக   தலைக்கு 15,000 (500 டாலர்)     கூட   வாங்காத   போபால்   நகர    மக்கள்.   சமீபத்தில் திருத்தி அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு நஷ்ட ஈட்டை உயர்த்தி அறிவித்து இருந்தாலும் இந்த 1500 கோடி ரூபாய் 90 சதவிகித மக்களுக்குப் போய்ச் சேராது என்று பாதிக்கப்பட்ட மக்கள் புள்ளி விபரங்களோடு கூறுவதை நோக்கும் போது அமைச்சர்கள் குழுவின் வேகம் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

                சட்டத்தின் ஓட்டைகள் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருந்த யூனியன் கார்பைடு நிறுவன வழக்கறிஞர்கள் (இவர்களுள் வழக்கறிஞர் நாரிமனும் உண்டு), ஓட்டையைப் பெரிதாக்கி யூனியன் கார்பைடைத் தப்பிக்க வைத்த நீதிபதிகள். இத்தகைய அமெரிக்க மற்றும் கார்பொரேட் விசுவாசிகளுக்கு மத்தியில்தான் போபால் நகர மக்கள் தங்கள் வாழ்வுரிமையை நிலை நாட்டிக் கொள்ளத் தொடர் போராட்டம் செய்தனர்.

                கார்பொரேட்டுகள் என்றும் மக்கள் நலனை, மக்களின் பாதுகாப்பைப் பற்றி அக்கறை செலுத்தியது கிடையாது. இரு மோசமான தொழில் விபத்துக்களான போபால் யூனியன் கார்பைடிலும், Pஎண்ணெய் துரப்பணத்திலும் பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தங்கள் நிறுவனம் மேலும், மேலும், மேலும் லாபம் சம்பாதிக்க வேண்டும், பங்குதாரர்களுக்கு அதிக டிவிடென்ட் வழங்க வேண்டும் என்றுதான் அவை துடிக்கின்றன. நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு பாதுகாப்புச் சாதனங்களின் மேல் கைவைக்கின்றன. போபால் விபத்து நேருவதற்கு முன்னரே பல சிறிய விபத்துக்கள் நேர்ந்துள்ளதையும், இதில் ஊழியர்கள் சில இறந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விபத்துக்குச் சில மாதங்களுக்கு முன்னர் சேமித்து வைக்கப்பட்டிருந்த மெத்தைல் ஐசோசயனேட் (MIC) - டை குளிரூட்டம்  செய்விக்கும் குளிரூட்டுக் கருவிகள் இயக்கப்படுவதை நிர்வாகம் நிறுத்தி வைத்தது. ஓரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேதிப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரும்புக் குழாய்களும் துருப்பிடித்த நிலையில் இருந்ததை ஆய்வுகள் சுட்டுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கத் தேவையான அளவுக்கு மட்டும்  MIC சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற  விதி   உள்ளது.   அதுவும்   எவர்சில்வர்   கண்டெய்னர்களில்தான். ஆனால் விபத்தில்     சிக்கிய    பெரிய   கொள்கலனைத்   தவிர    இன்னும்   இரண்டு பெரிய  கொள்கலன்களிலும்  MIC சேமித்து வைக்கப்பட்டிருந்தன. விபத்தைச் சுட்டிக் காட்டும் அபாயமணி பல மாதங்களாக இயங்கவில்லை. பாதுகாப்புக் குறைபாடுகளை சரிசெய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு ஆலையைத் தணிக்கை செய்த குழுவினர் சுட்டிக்காட்டிய குறைபாடுகளும் கூட நிவர்த்தி செய்யப்படவில்லை. உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, தான் இந்த ஆலையின் தினச் செயல்பாடுகளில் எவ்விதத்திலும் தலையிடுவதில்லை. ஆகவே விபத்திற்கு நான் பொறுப்பல்ல என்று யூனியன் கார்பைடு இந்தியா தலைவர் மகேந்திரா நீதிமன்றத்தில் வாதாடியபோது நம்மால் வேதனையில் சிரிக்கத்தான் முடிந்தது. இத்தகையப் பாதுகாப்பு குறைபாடுகளை அமெரிக்கா தனது நாட்டில் அனுமதித்திருக்குமா? எனவேதான் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனம் போபால் நகர மக்களை சோதனை எலிகளாக மாற்றிவிட்டது எனக் குற்றம் சாட்டத் தோன்றுகிறது.

   விபத்து நடந்து முடிந்த பின்னர் நல்லெண்ண அடிப்படையில் போபாலை பார்வையிட முடிவு செய்த ஆன்டர்சன் தான் பாதுகாப்பாக இந்தியா சென்று திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் அமெரிக்க அரசின் மூலம் செய்து கொள்கிறார். மத்தியப் பிரதேச அரசின் ஒப்புக்கான கைது உத்தரவை அடுத்து கைதானவர் போபால் ஆலையின் விருந்தினர் மாளிகையில் ஆடம்பரமாகத் தங்கிவிட்டு எந்தத் துறும்பும் தன்மேல் படாமல் அமெரிக்கா திரும்புகிறார். நீதியும், அறமும் அங்குதான் செத்துப்போனது. இந்திய நீதிமன்றங்களின் முன்பு வாரன் ஆன்டர்சன் ஆஜராகாமல் இருப்பது அமெரிக்க நீதிமன்ற அவமதிப்பும் கூட. அமெரிக்க நீதிபதி கெனன் தனது தீர்ப்பில், வாரன் ஆன்டர்சன் வழக்கை இந்தியாவில் சந்திக்க வேண்டும், இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும் எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.

                போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அமெரிக்காவின் டெளவ் கெமிக்கல் நிறுவனம் வாங்கியது. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கிய பிறகு அதன் லாப, நஷ்டங்களும், வருமான, செலவினங்களும் சேர்ந்தே கைமாறுவதுதான் விதி. ஆனால் டெளவ் கெமிக்கல் நிறுவனம் நமது மத்திய அமைச்சர்களோடு பேரம் பேசியது. இந்தியாவில் அதிக முதலீடுகள் செய்யத் தயாராக உள்ளோம். போபால் விஷ‌வாயு விபத்திலிருந்து உருவாகியிருக்கும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் எங்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான் பேரம். அத்தகையப் பேரங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் அமைச்சரவைக் கோப்புகளில் உள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. டெளவ் கெமிக்கலை விடுவிப்பதற்குத்தான் புதிதாக அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டதா? ஆலையைச் சுத்தம் செய்ய 300 கோடி ரூபாய் அரசுப் பணம் ஒதுக்கப்பட்டது ஏன்? என்பதற்கான விடைகளை காலம்தான் சொல்லும். ளெடவ் கெமிக்கல் நிறுவனம் கடந்த ஆறு வருடங்களாகத் தனக்கு அனுப்பப்பட்டு வரும் நீதிமன்ற ஆணையைப் பெற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. இந்தியாவின் ரூபாய் நோட்டுக்கள் மட்டும்தான் அதற்கு விருப்பமாம். டெளவ் கெமிக்கலை இந்தியாவில் தடை செய்ய உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் சொத்துக்களை கையகப்படுத்தி போபால் ஆலை வளாகத்தை சுத்தம் செய்வதற்கு ஆகும் செலவுக்கு ஈடு செய்ய வேண்டும். இதையயல்லாம் செய்ய இந்திய அரசுக்குத் தார்மீக அறநெறிகளின்பால் பற்று வரவேண்டும்.

                தில்லியை மையமாகக் கொண்ட அறிவியல்  மற்றும் சுற்றுச்சூழல் மையம்(Centre for Science and Environment) கைவிடப்பட்ட  யூனியன் கார்பைடு ஆலை வளாகத்திலும், அதைச்சுற்றி 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் மண் மற்றும் நிலத்தடி நீர் மாதிரிகளை எடுத்து நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி பூச்சிக் கொல்லியின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 40   மடங்கு அதிகமாகவும்,    கார்பரைல்   110    மடங்கு    அதிகமாகவும்,   லிண்டேன்  40     மடங்கு      அதிகமாகவும்,      பாதரசம்      24      மடங்கு   அதிகமாகவும்    அந்த  மண்ணிலும், நிலத்தடி நீரிலும் உள்ளன. அந்த மண்ணையும், நீரையும் தொடர்ச்சியாக    உபயோகிக்கும் மக்களுக்கு கல்லீரல் மற்றும் இரத்த செல்கள்   பாதிக்கப்படுவதோடு  எலும்பு   சம்பந்தமான   நோய்களும்,   புற்றுநோய்களும்   தாக்குவதற்கான வாய்ப்புகள்   அதிகமிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன். அதாவது ஆலையைச் சுற்றி           குறிப்பிட்ட தூரத்திற்குள் வசிக்கும் மக்கள் கொஞ்சம்  கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால்  நிலத்திலும், நிலத்தடி நீரிலும் கலந்து போய் உள்ள விஷ‌மாசுக்களை அப்புறப்படுத்த காலமும், பணமும் நிறைய வேண்டும்.   

                எனவேதான் ஆலை வளாகத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பிவிட்டு அதனடியிலேயே பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளையும் புதைத்துவிட்டோமானால் பிரச்னை முடிந்தது என்ற மத்திய, மாநில அரசுகளின் நினைப்பில் மண்ணைத் தூவி உள்ளன C.S.E  நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவுகளும், சமீபத்திய தீர்ப்புகளும், அதன் பின் விளைவுகளும்.

                எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியக் கடமை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உண்டு. எதிர்காலத்தில் போபால் விபத்து போன்று நேராமல் பார்த்துக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்வது. ஆனால் அதற்கும் மாறாக நடைபெறும் நிகழ்வுகள் நம்மை நம்பிக்கை இழக்க வைக்கின்றன. கடலூர், திருப்பூர் இன்னும் இந்தியா பூராவும் குட்டி போபால்கள் ஏராளமாக உருவெடுத்துள்ளன. குடியிருப்புப் பகுதிகளிலேயே வேதித் தொழிற்சாலைகள் தொடங்க இங்கெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகிறது. அணுஉலை விபத்துக்களினால்  ஏற்படும் பாதிப்புகள் ஒன்றும் நமக்குத் தெரியாதவை அல்ல. புதுப்புது வேதித்தொழிற்சாலைகள் தொடங்கப்படும் போதெல்லாம் அப்பகுதி மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் சம்பிரதாயமாகவே நடத்தப்படுகின்றன. ஒப்புதலும் வாங்கப்படுகின்றன.

                உலக அனுபவங்களை  உள்வாங்கிக் கொள்ளாமல் நமது நாட்டில் நாம் உருவாக்கும் அணுமின் உலைகள், வேதித்தொழிற்சாலைகள் நமது பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழ்படுத்திவிடும் வல்லமை படைத்தவை. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியும், மிகச்சிறந்த  மனிதநேய வாதியுமான திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர் போபால் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அது ஒருபோபாஷிமாஎன்றார். இன்னும் ஒருஷிமா  நிகழாதவாறு நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  
                                                  --------------------------------------------------

மந்திரச்சிமிழ்,செப்-2010.

        






               
               

               

1 comment:

  1. போபால் பேரழிவையும்,குஜராத் படுகொலைகளையும்
    வேறு மாநிலப் பிரச்சினையாகப் பார்த்தவர்கள் தான்
    நிறைய பேர். இத்தகைய அராஜங்களுக்கெதிராக
    ஒரு வலிமையான இயக்கத்தைத் தேசமெங்கும்
    ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இப்போது
    உள்ளோம். இந்த நேரத்தில் நம் சட்ட்ங்களில் உள்ள
    பலவீனங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

    ReplyDelete