Thursday 5 January 2012

வெறுமை





 வழிபாட்டுத் தலம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்

 இரண்டு முதிர்ந்த தாய்கள் உரையாடக் கேட்டேன்

 பழனிக்குப் பக்கத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறினாள் ஒருத்தி

 பக்கத்து ஊரிலிருந்து வந்திருப்பதாகத் தெரிவித்தாள் இன்னொருத்தி

 தங்கள் குடும்பத்தைவிட்டு நீண்ட நாட்கள் பிரிந்திருக்கும் ஆற்றாமையால்

 மிகவும் சோர்ந்து போயிருந்தனர் இவ்விருவரும்.

 இரண்டு தாய்களும் தங்களது மகன்களால் துரத்திவிடப்பட்டிருந்தார்கள்.

 தாயின் வயோதிகத்தை வெறுத்தான் ஒருவன்

 தாய்க்கு பில்லி சூனியம் பிடித்துவிட்டது எனச்சொல்லி, அதைத் தொலைத்தபின்

 என் குழந்தைகளைத் தொடு என்றான் மற்றொருவன்.


 வெறுத்துப் போன இரு தாய்களும் இப்போது வழிபாட்டுத்தலத்தில்.

 நேற்று காலை நேரம் தவறி வந்தமைக்காக இலவச சாப்பாடு வழங்கும் கூடத்தின்

 காவலாளி தன்னை விரட்டிவிட்ட அவலத்தை

 அழாக்குறையாகச் சொன்னாள் ஒருத்தி.

 தங்களுக்கேயுரிய துக்கங்களையும்,அவலங்களையும்,அச்சங்களையும்

 அவ்விருவரும் பகிர்ந்துகொண்டனர்.

 இறுதியில் அவ்விருவரும் பிச்சை கேட்டு என்னிடம் இரந்து நின்றனர்.

 வாழ்வின் வெறுமையைப் போதித்த அத்தாய்களுக்கு நான்

 எதனை ஈடாக அளிப்பேன்?

No comments:

Post a Comment