உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது.அதனைப்பறிக்க அவனைத்தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை.
---- மரண தண்டனை குறித்து மகாத்மா காந்தியடிகள்.
தனது நாகரிகத்தைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு சமுதாயத்தின் எந்த ஒரு கோட்பாட்டையும் அடிப்படையாகக்கொண்டு மரண தண்டனை நீதியானது என்றோ பொருத்தமானது என்றோ நிறுவுவது மிகக் கடினமானது.
--- கார்ல் மார்க்சு.
அகிம்சை நெறியில் நம்பிக்கை வைத்துள்ள இந்த நாடு செய்ய வேண்டிய பொருத்தமான நடவடிக்கை மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதுதான்.
--- அண்ணல் அம்பேத்கர்.
நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும் மனித உரிமைக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது.
----- நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன்,சாந்தன்,பேரறிவாளனின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டில் நிராகரித்துவிட்டார்.நாடாளுமன்றத்தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்சலுக்கும் தூக்குதண்டனையை உறுதிப்படுத்தும்படியும்,அவருக்கு கருணை காட்ட வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை தந்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை விசாரணையை நடத்திய பூந்தமல்லி சிறப்பு தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 நபர்களுக்கும் தூக்கு தண்டனையை அளித்திருந்தது.உயர்நீதிமன்றத்தின் தலையீட்டுவாய்ப்பை இழந்த அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தபின் இவர்களுள் 19 பேரை முற்றாக விடுவித்தது உச்சநீதிமன்றம்.மீதம் எழுவரில் மூவருக்கு ஆயுள் தண்டனையும்,நால்வருக்கு தூக்குதண்டனையும் உறுதி செய்யப்பட்டது.நளினியின் தண்டனை குறைக்கப்பட்டபின்பு தற்போது மூவரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.முகமது அப்சலையும்,முருகன்,சாந்தன்,பேரறிவாளனையும் தூக்குக் கொட்டடியிலிருந்து காப்பாற்றவேண்டும் என்ற கோரிக்கை தற்போது பெரும் இயக்கமாக விரிந்துள்ளது.
பாராளுமன்றத்தாக்குதல் வழக்கு பற்றி விரிவாகப் பேசுவதோ,ராஜீவ் கொலை வழக்கு பற்றி விளக்குவதோ என் நோக்கமல்ல.இது சம்பந்தமாக எராளமான தகவல்கள் முன்னரே வெளிவந்துவிட்டன.மனித உரிமைவாதிகளும்,தமிழ் அமைப்புகளும்,இசுலாமிய அமைப்புகளும் விரிவான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர்.உச்சநீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட 'தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்னும் கண்ணீர்ப் பதிவை பேரறிவாளன் தந்திருக்கிறார்.ஆனால் நம்மை உறுத்தும் சில கேள்விகளை நாம் எப்போதும் கேட்கவேண்டும்.அதிகாரத்தை நோக்கித்தான் நாம் கேட்கவேண்டும்.முகமது அப்சலுக்கு மரண தண்டனை தரப்பட்டதன் பொருத்தப்பாடு என்ன? பாராளுமன்றத்தின் மீது நேரடித்தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பாகிசுதானிய தீவிரவாதிகள் ஏற்கெனவே சுட்டுக்கொல்லப்பட்டுவிட்ட நிலையில், சிற்சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும்,புறக்காரணிகளையும் மட்டும் உள்வாங்கிக்கொண்டு தீவிரவாதிகளுக்கு உதவினார் என்ற இரண்டாம் நிலை குற்றச்சாட்டுகளை மட்டும் முன் வைத்து அப்சலுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றத்துடிக்கும் அதிகாரவர்க்கத்தின் பசி எப்படிப்பட்டது?
ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் இந்தக் கொடூர சட்டத்தின்மூலம் காவல் அதிகாரியால் பெறப்பட்ட வாக்குமூலத்தை செல்லுபடியாக்கி அதை மையமாக்கி நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் நீதி எப்படிப்பட்டது?
கூடவே அதிகாரவர்க்கத்தை நோக்கி எழுப்ப நமக்கு வினாக்கள் வரிசைகட்டி நிற்கின்றன.குற்றம் நடந்தபோது முகமது அப்சல் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவர் அல்ல என்றும்,சதிச்செயலில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,சமுகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காகத்தான் தூக்குதண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.கூட்டு மனசாட்சி என்றால் அதில் யார் யார் அடக்கம்? நொடிக்குநொடி செய்திப்பசியால் துடிக்கும் ஆங்கில செய்தி நிறுவனங்களும்,கருத்துக்கணிப்புகளை நடத்தும் பத்திரிகை நிறுவனங்களும்,கார்ப்பொரேட்டுகளின் உற்பத்தியை துய்ப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் நடுத்தரவர்க்கமும்,மேல்தட்டு மக்களும்தான் இன்றைக்கு கூட்டு மனசாட்சியாக சித்தரிக்கப்படுகிறார்கள்.தூக்குதண்டனை விதிக்கப்பட்டாலோ அல்லது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலோ செய்தி பார்த்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு ஒரு பரம திருப்தி.காரணம் செய்தியின் தீவிரத்தன்மை.அதோடு சமூகத்தின் கூட்டு மனசாட்சி உருவாக்கி அமைத்திருக்கும் நீதி பரிபாலனம் சிறந்த முறையில் செயல்படுகிறது என்ற அகக்கிளர்ச்சி.நீதி சமூகத்தின் கூட்டு மனசாட்சி என்கிறது.கூட்டு மனசாட்சியோ நீதியை ஒகோவெனப்புகழ்கிறது.
ராஜீவ் கொலை வழக்கின் தீர்ப்பும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டிருக்கலாம்.சமுதாயத்தின் மனசாட்சியைப் பிரதிபலிக்கும் தீர்ப்பை வழங்கியிருப்பதாக நீதிபதிகள் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.ஆனால் பொது மனசாட்சி என்ற களேபரத்தின் மத்தியில் அறநெறி என்னும் மெல்லிய ஒலிக்கீற்றை நீதிபதிகள் செவிமடுத்துக் கேட்டிருக்கவேண்டும்.
தூக்குத்தண்டனை அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டும்தான் வழங்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை அதுவே பலமுறை மீறியிருக்கிறது.'அரிதினும் அரிதான'என்ற சொற்பதங்கள் பற்றி யாருக்கும் கவலையில்லை.பாராளுமன்றத்தாக்குதலிலும் சரி, ராஜீவ் கொலையிலும் சரி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் காவல்துறையினரால் கொல்லப்பட்டுவிட்டனர்.அதையும் தாண்டி அவ்வழக்குகளில் தொடர்புடைய சந்தர்ப்ப சூழ்நிலைக்கைதிகளை கண்டறிந்து,கைது செய்து,வழக்குப்பதிந்து அவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்ததுவரை சரி.மாறாக அவர்களை சித்திரவதைப்படுத்துவதும்,சட்டத்தின் வழி அவர்களின் உயிரைப்பறிக்க வரிந்துக்கட்டி நிற்பதும் எவ்வகையான அறம் என்பதை அரசும்,காவல் அமைப்புகளும்,நீதிபரிபாலன அமைப்புகளும்தான்
விளக்கவேண்டும்.முகமது அப்சல் தீவிரவாத பயிற்சி பெற எல்லை தாண்டுகிறார்.பின் காசுமீர் திரும்பி சில காலம் கடந்த பின்னர் போலிசில் சரணடைகிறார்.சரணடைந்த தீவிரவாதி என்ற முத்திரையுடன் தொடர்ச்சியான போலிசு தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்.நாடாளுமன்றத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுள் ஒருவரை
டெல்லி அழைத்துவருகிறார்.அதையும் கட்டயாத்தின் பேரிலேயே செய்ததாக அப்சல் கூறுகிறார்.சந்தர்ப்பவசத்தால் சிக்கிக்கொண்ட சூழ்நிலைக்கைதிதான் முகமது அப்சல் என்பது வழக்கின் விபரங்களைப் படிக்கும் சாதாரணநபருக்கும் கூடப்புரியும்.சரணடைந்துவிட்டு அமைதியாகவாழலாம் என்ற அப்சலின் எண்ணத்தில் மண் விழுந்தது.இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளையும்,ஒரு மோட்டார் சைக்கிளையும் ராஜீவ் கொலையாளி சிவராசனுக்கு வாங்கித்தந்தார் என்பதுதான் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு. 19 வயதில் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிக்கொன்ட பேரறிவாளனின் இளமைப்பருவம் முழுவதும் சிறைக்கொட்டடியில்,தூக்குமரநிழலில் கழிந்தும்,சீரழிந்தும் போய்விட்டது.ஒருமுறை அவர் சொன்னார்:'என்னை உடனடியாக தூக்கில் போடுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்'.தூக்குதண்டனை என்ற அறிவிப்பை தந்துவிட்டு தினம் தினம் அந்த நினைவின் அழுத்தத்தில் வாழ்க்கையை அணுஅணுவாகக் கழிப்பது எவ்வளவு பெரிய துன்பம்!நமது அரசுகளின் சித்திரவதை வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றுதான் சொல்லவேண்டும்.முகமது அப்சலும் கூட ஒருமுறை சொன்னார்:'அத்வானி பிரதமராக வரவேண்டும்.அவர் என்னை உடனடியாக தூக்கில் போடுவார்'.
எனவேதான் உச்சநீதிமன்றம் கருணைமிக்க வழிகாட்டும் நெறிமுறை ஒன்றை வகுத்துத்தந்துள்ளது.அதன்படி தூக்குதண்டனை ஒருவருக்கு அளிக்கப்பட்டு வெகு காலம் அத்தண்டனை நிறைவேற்றப்படாமல் இருக்குமானால்,தூக்குமர நிழலின் வெந்துயரில் வாடிக்கொண்டிருக்கும் அவருக்கு தூக்குதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படவேண்டும்.அப்சலும்,பேரறிவாளனும் பல ஆண்டுகள் மரணத்தின் கனவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அவர்களது உயிர் ஏன் காப்பாற்றப்படக்கூடாது?
பாராளுமன்றத்தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.8 பாதுகாப்புப்படை வீரர்களும்,ஒரு தோட்டக்காரரும் உயிரிழந்தனர்.அதைத்தொடர்ந்து பாகிசுதான் எல்லையை ஒட்டி நம் படை குவிக்கப்பட்டது.மொத்தம்5 லட்சம் ராணுவ வீரர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டார்கள்.இந்த களேபரத்தில் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.பாகிசுதானும் இந்தியாவும் அணு அயூதப்போரின் விளிம்பில் நின்றன.பாராளுமன்றத்தாக்குதல் நடந்த மறு நாட்களில் தில்லிப்பல்கலைப் பேராசிரியர் கிலானி கைது செய்யப்படுகிறார்.பாராளுமன்றத்தாக்குதல் சதியின் இந்திய மூளை என்று மிகவும் கீழ்த்தரமாக பத்திரிக்கைகளால்,காட்சி ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட பேராசிரியர் கிலானிக்கும் விசாரணைநீதிமன்றம் தூக்குதண்டனை வழங்கியது.எந்த ஒரு தீவிரவாதஇயக்கத்துக்கும் கிலானிக்கும்,பாராளுமன்றத்தாக்குதலுக்கும் கிலானிக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது என உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது.பதிலுக்கு எந்த ஊடகமும் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை.இத்தகைய அவலட்சணமான ஊடகங்கள்தான் எந்த ஒரு நிகழ்விற்கும் எதிர்வினையாக சமூகத்தின் பொது மனசாட்சியை கட்டிஎழுப்புகின்றன.சில கேமராக்களும்,ஒளிபரப்பு நிலையங்களும்,அதில் அம்ர்ந்திருக்கும் ஐந்தாறு ஆங்கிலப்புலமையாளர்களும் தான் சமூகத்தின் பொது மனசாட்சியை உருவாக்குபவர்கள்.இவர்களினால் பலனே இல்லையா என்றால் உண்டு.ஆனால் ஒட்டுமொத்த சமுதாயத்தை,தேசத்தைப் பாதிக்கும் சில உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளில் ஊடகங்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ள வேண்டும்.
இரு வழக்குகளும் இரண்டு மிகப்பெரும் அரசியல் சிக்கல்களோடு சம்பந்தப்பட்டது.இச்சிக்கல்களின் பல்வேறு பரிமாணங்களையும் விசாரணை நீதிபதிகள் நன்கு ஆராய்ந்திருக்கவேண்டும்.உயர்ந்தபட்ச தண்டனை அளிப்பதற்கு முன்னால் இத்தகைய விரிவான விசாரணைகள் அவசியம் தேவை.
மனசாட்சியுள்ள,நாகரிகம் கொண்ட எந்த ஒரு தேசமும் சட்டத்தின் பெயராலோ அல்லது சட்டத்திற்குப்புறம்பாகவோ தன் மக்களை ஒரு போதும் கொன்று போடுவதில்லை.மரண தண்டனை விதிக்கும் நாடுகளையும்,என்கவுண்டர் நிபுணர்கள் வசிக்கும் நாடுகளையும் தேசங்கள் என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.
'அரிதினும் அரிதானது'என்ற சொற்பதத்தை உச்சநீதிமன்றம் இத்தகைய வழக்குகளில் பயன்படுத்தும்போது அதன் பாரபட்சமற்ற தன்மை குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது.கவுரவக்கொலை வழக்கில் தன் மகளைக் கொன்ற குற்றத்திற்காக பகவான்தாசிற்கு தூக்குதண்டனையை வழங்கிய உச்சநீதிமன்றம்,ஒரிசாவின் தொலைதூர மலைக்கிராமம் ஒன்றில் அமைதியான வழியில் மதப்பிரசாரம் செய்துவந்த ஸ்டெயின் பாதிரியாரையும் பத்து மற்றும் ஆறு வயதேயான அவரது இரண்டு மகன்களையும் தீயிட்டுக்கொளுத்தி படுகொலை செய்த தாராசிங்கிற்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கியது.தாராசிங் வழக்கில் தீர்ப்பைதருபோது உச்சநீதிமன்றம் கீழ்கண்ட வாசகத்தை தீர்ப்பில் சேர்த்து பின் அதை விலக்கிக்கொண்டது.என்ன தெரியுமா? 'ஏழைப்பழங்குடி மக்களை கிறித்துவமதத்திற்கு மாற்றிக்கொண்டிருக்கும் ஸ்டெயின்சுக்கு தாராசிங் பாடம் புகட்டியுள்ளார்'. ஒரு மதத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வதும்,அதன்படி வாழ்வதும்,அதனைப்பரப்புவதும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய அடிப்படை உரிமை என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 கூறுகிறது.ஸ்டெயின்சின் அடிப்படை உரிமை மட்டுமல்ல அவரது உயிரும் பறிக்கப்படுகிறது.அவரது இரு குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.ஆனால் தாராசிங் அரிதினும் அரிதான என்ற பதத்தின் கீழ் வரவில்லை.மாறாக அவரது சேவை மறைமுகமாகப் பாராட்டவும்படுகிறது.நான்கு நாட்களுக்குப்பின்னர் வழங்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்ப்பு பின்வருமாறு கூறுகிறது:' குற்றம் நடந்து 12 வருடங்கள் கழிந்துவிட்ட காரணத்தால் உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை தூக்குதண்டனையாக மாற்றப்படவில்லை'.ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.தூக்குமர நிழலில் தாராசிங் 12 வருடங்கள் வாடவில்லை.சனவரி 12,1999ல் நடந்த குற்றத்திற்கு செப்டம்பர் 2003 ல் விசாரணை நீதிமன்றம் தூக்குதண்டனை அறிவிக்கிறது.மே 2005 ல் உயர்நீதிமன்றம் அதை ஆயுள் தண்டனையாக மாற்றுகிறது.21 சனவரி 2011 அன்று உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறது.ஆக மரணத்தின் நிழலில் தாராசிங் வாழ்ந்தது இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவே.தாராசிங் தூக்கிலிடப்படவேண்டும் என்பது நம் விருப்பமல்ல.பகவான்தாசின் உயிரும்,முகமது அப்சலின் உயிரும்,பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரது உயிரும் காப்பாற்றப்படவேண்டுமென்பததே நம் விருப்பம்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் மும்பையில் நடந்த கலவரத்திற்கும்,முசுலீம்களீன் படுகொலைகளுக்கும் காரணமான சிவசேனா தலைவர் பால்தாக்கரே இன்னமும் சுதந்திரமாக உலவுகிறார்.2002 ல் குசராத்தில் 2000 க்கும் மேற்பட்ட முசுலீம்களின் படுகொலைகளுக்கு காரணமான நரேந்திரமோடியை இன்னமும் நீதி நெருங்கமுடியவில்லை.பாபர் மசூதித்தகர்ப்பில் சம்பந்தப்பட்ட எல்.கே.அத்வானி மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.தாராசிங்கின் செயல் நீதிமன்றத்தால் புகழப்படுகிறது.பேரறிவாளனும்,சாந்தனும்,முருகனும் மரணத்தின் நிழலில் 12 வருடங்களுக்கு மேலாக துவண்டுபோயுள்ளனர்.ஒன்றரை வருட கால அளவு மரணத்தின் பீதியில் தாராசிங் வாழ்ந்த காரணத்தால் அவரது தண்டனை குறைக்கப்படும்போது இந்நால்வரின் கருணை மனுக்கள் மட்டும் ஏன் நிராகரிக்கப்படுகிறது?எனவேதான் நமது நாட்டில் இரண்டுவிதமான நீதிகள் இருக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.நீதிபதிகளும் மனிதர்கள்தான்,அவர்களும் ஆசாபாசத்திற்கும்,கொள்கை கோட்பாடுகளுக்கும் உட்பட்டவர்கள்தான் என்பதனால்தான் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.உலகில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை தடை செய்யப்பட்டிருக்கிறது அல்லது நீண்ட காலம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவைவிட அதிகமாக குற்றச்செயல்கள் நடைபெறும் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பல தேசங்களில் மரணதண்டனை தடை செய்யப்பட்டுவிட்டது.
கடந்த நூற்றாண்டில் மாபெரும் இனப்படுகொலைகளையும்,இன்னல்களையும் அனுபவித்த யூதர்கள் வாழும் இசுரேலை எடுத்துக்கொள்வோம்.நாஜிக்கள் தோல்வி அடைந்தபின் எத்தனையோ நாஜிக்களை இசுரேலியர்கள் தூக்கில் போட்டிருக்கமுடியும்.ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.இசுரேலால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரே நாஜி அடால்ப் எய்க்மான் மட்டுமே.எய்க்மானுக்கு விசாரணைக்குப்பின் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டபோதுகூட அவருக்கு மரணதண்டனை கூடாது என்று ஒரு யூத தத்துவவாதி பிரச்சாரம் செய்து,மனுக்களில் பொதுமக்களிடம் கையெழுத்துப்பெற்றதை நாம் இத்தருணத்தில் நினைவுகூரவேண்டும்.ஒரு உயிரின் வலி எப்படிப்பட்டது என்பதை யூத சமுதாயம் நன்கு உணர்ந்திருந்தது.
மரணதண்டனைக்கு எதிராக வலுவான குரலை எழுப்பியவர் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம்.அவர் கூறுகிறார்:'மரணதண்டனைக்கைதிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்களை வாழ வழி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி ஆன்மீக நெறிமுறைகளைப் போதிக்கவேண்டும்.எனவே அனைத்து மரணதண்டனைக்கைதிகளின் கருணை மனுக்களையும் அரசு பரிசீலிக்கவேண்டும்.தூக்குதண்டனை மற்றும் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்தவேண்டும்.நாடாளுமன்றத்தில் அனைத்துத்தரப்பினரும் இது குறித்து விவாதித்து விரிவாக ஒரு கொள்கையை உருவாக்கவேண்டும்'.
பைபிளிள் மரணதண்டனை விதிக்கும்படியான ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன.ஆனால் அந்த சட்டங்கள் ஒரு போதும் நிறைவேற்றப்படலாகாதவையே.sabbath அன்று ஏதேனும் வேலை செய்தால் மரணதண்டனை.ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் மரியாதையாக நடந்துகொள்ளவில்லையென்றால் மரணதண்டனை.ஒரு முழு ஊருமே குற்றச்செயலில் ஈடுபட்டால் அந்த முழு ஊருக்குமே மரணதண்டனை.ஒரினப்புணர்ச்சிக்கு மரணதண்டனை.யார் உங்களைக் கொல்ல வந்தாலும் நீங்களே முந்திக்கொண்டு அவரைக்கொன்றுவிடவேண்டும் என்றெல்லாம் பைபிள் கூறுகிறது.இவையெல்லாம் நடைமுறைக்கு என்றைக்காவது வந்ததுண்டா?அல்லது பைபிளை செயல்படுத்த கிறித்துவர்கள் 'ஜிகாத்' பாணியில் புறப்பட்டால் என்னாவது?
சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்றவரும்,நாஜிக்களின் வதை முகாமில் வாடி உயிர் பிழைத்தவருமான எலிவீசல் மிக அருமையாக சொல்லுவார்:'கண்ணுக்கு கண் என்பது நீங்கள் புரிந்துகொண்டிருக்கும் அர்த்தம் அல்ல.பைபிளில் வரும் An eye for an eye என்ற வாசகம் உண்மையிலேயே தவறாகப் பொருள் பெயர்த்துத்தரப்பட்டிருக்கிறது.அது உணர்த்துவது ஒரு கண்ணின் மதிப்பு இன்ணொரு கண்ணின் மதிப்பிற்குச் சமானம் என்பதைத்தான்.யாரேனும் என்னுடைய கண்ணைப் பிடுங்கி எறிந்துவிட்டால் பதிலுக்கு அவருடைய கண்ணைப் பிடுங்க நான் முற்படமாட்டேன்.என்னுடைய பார்வையை இழந்ததன் மூலம் எனக்கு எற்பட்டுள்ள இழப்புகளுக்கு எல்லாம் அந்தப் பாதிப்பை ஏற்படுத்தியவர் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்பதுதான் அந்த வாசகத்தின் பொருள்.தனது குழந்தை கொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் ஒரு தந்தை அனுபவிக்கும் வலி,வேதனையை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.அனாதைகளாக்கப்பட்டுவிட்ட மக்களின் வலி,வேதனையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக,'எனவே நான் மரணதணடனையை ஆதரிக்கிறேன்'என்று என்னால் கூறவியலாது.அதை என்னால் எண்ணிப்பார்க்கக்கூட இயலவில்லை.மரணத்தை நிறுவனமயமாக்குவதுதான் இதில் என் கவனத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் விசயமாக விளங்குகிறது.என்னால் அதை ஏற்கவியலாது என்பதே உண்மை'.
பேரறிவாளனையும்,முகமது அப்சலையும்,முருகனையும்,சாந்தனையும் உயிர் பிழைக்க வைக்க நாம் எழுப்பும் குரல் ஒரு விரிந்த,பரந்த மரணதண்டனைக்கு எதிரான இயக்கமாக வளரட்டும்.மரணதண்டனை மட்டும் தூக்கில் ஏறட்டும்.
**************************
இக்கட்டுரை செப்டம்பர்,2011 அம்ருதா இதழில் வெளிவந்தது
நமக்குக் கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில்
ReplyDeleteஒரு விஷயத்தை சரி தவறென பகுக்கும் சித்தாந்தத்தின் மீது அவ்வளவாக எனக்கு நாட்டமில்லை. அதனாலேயே மரணதண்டனை குறித்து எவ்வித தீர்ப்பும் எழுத இயலவில்லை.
ஒரு தேசம் மனிதாபிமானத்தால் மட்டும் கட்டமைக்கப் படுவதில்லை. அதற்கு சில கட்டுப்பாடுகளும்,சில வலுவான சட்டங்களும் அவசியமாகின்றன. அரசாங்கம்,அதிகாரம்,சட்டங்கள் அனைத்துமே தவறான வழியில் செயல்படுகின்றன எனும் அபிப்ராயம் ஒரு நடுத்தர வர்க்க சிந்தனை. சட்டங்கள் பாதிக்கப் பட்டவர்களை கவனத்தில் கொண்டுதான் செயல்படவேண்டும். இதற்கான மாற்றுக் கருத்துக்களை எத்தனை பெரிய அறிஞர்கள் சொன்னாலும் அது மிக
துல்லியமானதென ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.சட்டத்தின் முன் எல்லா உயிர்களும் சமமெனக் கொண்டாலும்,எல்லாக் குற்றவாளிகளும் சமமெனக் கொள்ளல் ஆகாது. இன்று உலகெங்கும் எத்தனையோத் தோட்டாக்கள் எத்தனையோ உயிரை பறித்துக் கொண்டிருக்கின்றன. இதில் ஒரு காந்தியை,ஒரு லிங்கனை,ஒரு மார்ட்டின் லூதரைத்
துளைத்தத் தோட்டாக்களையும், தனி மனித வன்மத்திற்காய்ப் பிரயோகிக்கப் பட்ட தோட்டாக்களையும் சமமாய்ப் பாவிக்க முடியாது. ராஜிவ் காந்தியின் மரணத்தையும், பாராளுமன்றத் தாக்குதலையும் சில துர் சம்பவங்களாக தனி மனிதர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அரசோ, சட்டமோ அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது. அவை ஒரு தேசத்துக்கு விடப்பட்ட சவால்கள். அதில் சம்பந்தப் பட்டவர்கள் பொறுப்பேற்றுக்க் கொள்ளத்தான் வேண்டும் அதில் அவர்கள் பங்கு எத்தனை சிறியதாக இருந்தாலும் கூட. தாராசிங்கின் பெயரைச் சொல்லி எவரும் தப்பித்துக் கொள்ளக் கூடாது. இது தாராசிங்கிற்கும் சேர்த்துத்தான். இதில் மரண தண்டனையிலிருந்து விதி விலக்குப் பெற்ற சி.ஏ.பாலன் போன்ற மற்ற கொள்கை வீரர்களை உதாரணம் காட்டுவது அப்பெரியவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.
இவ்வளவு பெரிய பின்னூட்டம் போடுவதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. முருகன்,சாந்தன்,பேரறிவாளன்,அப்சல்குரு
எனும் வரிசை கஸாப்..மற்றும் பலரென நீண்டுவிடும் சாத்தியத்தை நாம் ஏற்படுத்தி விடக் கூடாதெனும் உள்ளுணர்வுதான்.
அன்புள்ள சந்தானகிருஷ்ணன்,தங்கள் கருத்துக்கு நன்றி.ஒரு நாட்டிற்கு மனிதாபிமானம் மட்டுமே போதும் என்று சொல்ல நான் வரவில்லை.சட்டங்களும் வேண்டும்.அது சரியாக செயல்படுத்தப்படவும்வேண்டும்.அதோடு மனிதாபிமானமும் கொஞ்சம் வேண்டும்.மனிதாபிமானம் இல்லாத ஜனநாயகத்தை இட்லரின் ஜெர்மனியிலும்,மனிதாபிமானம் இல்லாத சோசலிசத்தை ஸ்டாலினின் சோவியத்திலும் நாம் பார்த்தோம்.நீங்கள் பரிந்துரைக்கும் வலுவான சட்டங்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 26 நபர்களில் 19 பேரை முற்றாக விடுதலை செய்தது.மரணதண்டனை யாருக்கும் ஏன் கூடாது? என்பது குறித்து நீங்கள் நிறைய படித்திருக்க வாய்ப்பு உண்டு.ஒன்று மட்டும் சொல்கிறேன்.குற்றவாளிகள் அனைவரும் சமமல்ல என்ற உங்கள் கருத்தும் சமூகத்தின் பொதுமனசாட்சியை திருப்திப்படுத்தும் பொருட்டு அப்சலுக்கு தூக்குத் தண்டனை தருகிறேன் என்ற நீதிபதியின் கருத்தும் ஒன்றே.நமது நாட்டின் சட்டங்கள் மனிதம் நோக்கித் திரும்பியிருக்கிறது,இப்போதும் திரும்பும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.கசாப்புக்கும் கூட மரணதண்டனை கூடாது என்பதுதான் என் ஆசை.
ReplyDeleteஒரு குற்றத்தோடு எவ்விதத்திலும்
ReplyDeleteசம்பந்தப் படாத நிரபராதிக்கு மரண தண்டனை
விதிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக
நம்பினால் மட்டுமே இதனை முழுமையாக
எதிர்க்க முடியும். ஆனால் எனக்கு அத்தகைய நம்பிக்கை இல்லை. சமூகத்தின் பொது மனசாட்சி
என்பதனை மிகச் சுலபமாக ஒதுக்கிவிட முடியாது.
ஹிட்லரையும்,ஸ்டாலினையும்,இந்திய தேச விரோத
எதிர்ப்புச் சட்டங்களையும் ஒரே தராசில் எடை
போட என்னால் இயலவில்லை.
தேசத்தின் கோணத்திலிருந்து பார்த்தால் அதன்
இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எதனையும் அது கடுமையாய் எதிர்த்துத் தகர்க்கத் தான் வேண்டும். அதே மாதிரி இதில் சம்பந்தப் பட்டவர்களின் கோணத்திலிருந்தும் பார்க்க வேண்டும்.
அவர்கள் தனி மனித விரோதங்களுக்காய்க் களம்
இறங்கியவர்கள் இல்லை என்பது சர்வ நிச்சயம்.
அவர்கள் தாங்கள் வரிந்து கொண்ட சித்தாந்தத்திற்காய் செயல் பட்டவர்கள். சொல்லப் போனால் அதற்கான பலனையும் அறுவடை செய்தவர்கள்.இப்பொழுது கருணை வேண்டி நிற்பது
அவர்கள் நேர்ந்து கொண்ட சித்தாந்தத்திற்கு அவர்கள்
செய்யும் துரோகம். இல்லையென்றால் இக் குற்றங்களுக்கும் எங்களுக்கும் துளி சம்பந்தம் கூடக் கிடையாதென அவர்கள் வாதிட்டால் நாம் அதை நம்பினால் அவர்களுக்கு மரண தண்டனை என்ன எவ்வித தண்டனையும் கூடத் தேவையில்லை.
கசாப்புக்கு மரண தண்டனையா என்பதல்ல இன்றைய
பிரச்சினை. இனியோரு கஸாப் இங்கு உள் புகக் கூடாது என்பதே இன்றையத் தேவை.
அன்புள்ள சந்தானகிருஷ்ணன்,
ReplyDeleteநிரபராதிகளுக்கு மரணதண்டனை தருவதற்கான சாத்தியங்கள் நம் நாட்டில் மட்டுமல்ல,உலகம் முழுவதும் உள்ள நீதி அமைப்புகளிலும் உள்ளது.அமெரிக்க நாட்டில் ஒரு நிரபராதிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு பின் அத்தீர்ப்பை வழங்கிய அந்நீதிபதி வருந்தினார் என்பதை நீதித்துறை வரலாறு நமக்கு சொல்லும்.1991 நவம்பரில் மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்ற சிவகாசி பாண்டியம்மாள் வழக்கு பற்றி அறிந்திருப்பீர்கள்.பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டார்,அவரை கொலை செய்தது அவரது கணவர் வேலுச்சாமி மற்றும் இருவர் என போலீசால் வழக்கு நடத்தப்பட்டது.பாண்டியம்மாள் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை மிக அழகாக போலீசார் ஜோடித்தனர்(ஜு.வி-27.11.91).பாண்டியம்மாளே உயிரோடு வந்தால் மட்டுமே இம்மூவரும் தூக்கிலிருந்து தப்பமுடியும் என்ற நிலையில் பாண்டியம்மாளே உயிரோடு வந்தார்.மூவரையும் நீதிபதி விடுதலை செய்தார்.ஒரு நிரபராதிக்கும் தண்டனை அளிக்கும் வாய்ப்பை நீதித்துறை பெற்றுள்ளது என்பதற்குதான் மேற்சொன்ன உதாரணங்கள்.மரணதண்டனை பெறும் ஒரு நிரபராதிக்கு,பின் தான் ஒரு நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பே கிடைப்பதில்லை என்பதுதான் மிகப்பெரும் சோகம்.இதற்கான ஒரே தீர்வு மரணதண்டனையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதுதான்.ராஜீவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் தங்கள் மீதான புகாரை மறுத்துள்ளனர்.தடா சட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட வாக்குமூலம் செல்லாது என நீதிமன்றத்திலும் வாதிட்டுள்ளனர்.எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் மூவரும் 20 ஆண்டுகள் சிறையில் வாடியுள்ளனர்.இதற்கும் மேல் இன்னுமொரு தண்டனையா?மும்பைத்தாக்குதலை நடத்தி பிடிபட்ட கஸாப்புக்கு தேவையான சட்ட உதவிகளை செய்துதருவதன் மூலமாக நீதித்துறையானது இந்தியாவின் அறநெறிகளை உலகநாடுகள் அறியச் செய்துள்ளது.வழக்கை நடத்தி அவரது குற்றத்திற்காக தூக்குதண்டனையை அளிப்பது என்பது கடாபியைப் போல அவரை சுட்டுக்கொல்வதற்குச் சமமாக முடியும்.