
முன்னெப்போதும் இல்லாத அளவு ஒரு கடுமையான அடையாளச் சிக்கலுக்குள் சிக்கித்தவிக்கிறது தமிழகம்.பல தளங்களில் தனது எதிர்காலத்தைக் குறித்தப் புதிரில் தன்னை மறைத்துக்கொண்டுக் கிடக்கிறது அது.சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரணதண்டனைக்கு எதிராக மிகப்பெரும் கருணைப் பிரவாகம் பொங்கி வழிந்த தமிழகத்தில் அப்பாவி தலித்துகள் ஏழு பேர் படுபயங்கரமான முறையில் அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.கூடங்குளம் அணுமின் உலைகள் மிகப் பரந்த விவாதத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.'கலாமே சொல்லிட்டாருல்ல,இன்னும் என்ன போராட்டம் வேண்டிக்கிடக்கு' என்ற பொதுப்புத்தி தமிழக மக்களின் மீது கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசால்,காங்கிரஸ் கட்சியால்,அணுமின் விஞ்ஞானிகளால் திணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.மக்களின் திரளான போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறது.போராட்டத்திற்குப் பணம் எங்கிருந்து வருகிறது என மத்திய அரசு ஆராயும் என்று அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார்.அணு உலைகள் வாங்கும்போதும்,அணுசக்தி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும்போதும் ஏகாதிபத்தியங்கள் அவர்களுக்கு ரட்சகர்களாக மாறிப்போவார்கள்.ஆனால் தங்களின் நிலமும்,வாழ்வும்,வாழ்வாதாரமும் போய்விடுமோ என பயந்து போராடும் மக்கள் அந்நிய நாட்டிலிருந்து பணம் பெறும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாக அமைச்சருக்குத் தெரிகிறது.தூக்குதண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்ற விஷயத்தில் தமிழ்த் தேசியர்களின் போராட்டத்தை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும்,தமிழ்த்தேசியர்களோடு நாம் முரண்படும் புள்ளிகள் பல இருந்தாலும் கூட.தூக்குதண்டனைப் போராட்டத்தில் கிளர்ந்தெழுந்த கோபம்,பரமக்குடி சம்பவத்திற்குப் பின்னர் இன்னும் பல மடங்கு பல்கிப் பெருகியிருக்கவேண்டும்.ஆனால் தலித் அமைப்புகள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்,மனிதஉரிமைவாதிகள் பரமக்குடிக்கு சென்று வந்ததோடு சரி.அவர்களின் விசாரணைகளோடு சரி.தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் ஆர்ப்பாட்டங்களோடு சரி.துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணமானவர்கள் மீதான விசாரணை இன்னமும் தொடங்கப்படவில்லை.நஷ்டஈட்டுத்தொகை உயர்த்தப்படவில்லை.
1843-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் அடிமைமுறையை ஒழித்ததாக வரலாறு பேசும்.ஆனால் இன்றைக்கு பரமக்குடி சம்பவம், அடிமை முறையைவிட மிகக்கொடூரமானதாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தீண்டாமையை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக்காண்பித்திருக்கிறது.மேலை நாடுகளில் அடிமைமுறை இருந்தபோது அடிமைகளிடம் ஆளுமை இருந்தது.ஒப்பந்த ஷரத்துகளில் மட்டும்தான் அவன் அடிமை.தன்னை ஆளும் உரிமையாளனின் முன் நடக்கவோ,பேசவோ,சாப்பிடவோ முழு உரிமை அவனுக்கு உண்டு.இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கிடையே திருமண உறவும் கூட உண்டு.அடிமைகளுக்கு பொருளாதார மதிப்பு இருந்த காரணத்தினால் அவனது உடல் நலத்தில் கூட உரிமையாளன் பெரும் அக்கறை காட்டினான்.ஆனால் இன்றைக்கும் இந்திய சாதி அமைப்பு தீண்டத்தகாத மக்களை தனது காலில் போட்டு துவம்சம் செய்கிறது.அதன் ஆதிக்க சக்திகளும்,அடிவருடிகளும் துப்பாக்கியால் பேசுகிறார்கள்.

பிரச்சினை தேவரின் குருபூஜையோ,இம்மானுவேல் சேகரனின் குருபூஜையோ அல்ல.இரண்டு விழாக்களையும் அரசு இருவேறு கண் கொண்டு பார்ப்பதுதான் பிரச்சினையின் மூலகாரணம்.தொடரும் சாதிய மோதல்களுக்கு முத்துராமலிங்கத்தேவரோ,இம்மானுவேல் சேகரனோ காரணம் அல்ல.தங்கள் சாதி மக்கள் மட்டும்தான் இப்பூமியில் வாழவேண்டும் என கனவில்கூட அவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள்.அவர்கள் அடிப்படையில் நல்லிணக்கவாதிகள்.தங்கள் சாதி மக்களின் ஏழ்மைநிலையைப்போக்கவும்,சமூகத்தில் சிறந்தப் பொருளாதாரநிலையை அடைந்திடவும் அவர்கள் விரும்பினார்கள்.ஒருவரை மற்றொருவர் அழித்துதான் அந்நிலை எய்தப்படவேண்டும் என அவர்கள் எண்ணவில்லை.இருவருமே இரு தேசியக்கட்சிகளோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டார்கள்.
பரமக்குடியிலும் சரி,தமிழ்நாட்டிலும் சரி அல்லது இந்தியாவிலும் சரி சாதிய அடிமைத்தனம் என்பது இந்துக்களின் ஒரு பழமையான சமூகமுறை.இந்துக்களுக்கு இச்சட்டத்தை கையளித்த மனுவும் இந்த அடிமைத்தனத்தை அங்கீகரித்துள்ளார்."தீண்டப்படாதவர்களைப் பொருத்தவரையில் அவனைச் சட்டம் ஒரு நபராக அங்கீகரித்திருந்தபோதிலும் அவனுக்கு எந்தவித நன்மையையும் செய்யத்தவறிவிட்டது.ஏனெனில் இந்து சமூகம் அவனை அங்கீகரிக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தது.சட்டத்தின் ஆதிக்கம் எப்படி இருப்பினும் ஓர் அடிமைக்கு ஆளுமை இருந்தது.ஆனால் சட்டத்தின் ஆதரவு இருந்தும் தீண்டப்படாதவனுக்கு ஆளுமையில்லை.இந்த வேறுபாடு அடிப்படையானது.சட்டத்தளைகளினால் பிணைக்கப்பட்டு இருந்தாலும் அடிமையின் சமூக ரீதியான உயர்வும்,சட்டரீதியாக சுதந்திரம் அளிக்கப்பட்டாலும் தீண்டப்படாதவர்களின் சமூகத்தாழ்வு நிலையும் இந்த முரண்பாட்டை விளக்கமுடியும்.சட்டத்தால் உத்தரவாதமளிக்கப்படும் உரிமைகளைவிட பெரும்பாலும் வெளிவாழ்க்கையில் காணப்படும் சமத்துவமே ஒரு மனிதனுக்கு முக்கியமாகத் தோன்றுகிறது"(அம்பேத்கர் நூல் தொகுப்பு:தொகுதி-25).
மிகச்சிறந்த சட்டம் நம்முடையது.மாமேதை அம்பேத்கர்தான் அதை வடிவமைத்தார்.சாதிகொடுமையை சட்டம் மட்டுமே ஒழித்துவிடும் என்பதை அம்பேத்கர் நம்பவில்லை.தாழ்த்தப்பட்ட மக்களின் தொடர்ச்சியானப் போராட்டங்களும்,மதமாற்றங்களுமே சரியான தீர்வுகளாக அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டன.சில தாழ்த்தப்பட்ட இயக்கங்கள் சொல்வதைப்போல பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாடாண்ட பரம்பரை மன்னர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் திகழ்ந்திருந்தாலும் வரலாறு வரலாறாகவே இருக்கட்டும்.யாரும் யாரையும் ஆளவேண்டாம்.ஆளப்படவும் வேண்டாம்.தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்கால லட்சியம் தாங்கள் இழந்த கல்வியை,வாழ்க்கையை,சுயமரியாதையைத் திரும்பப் பெறுவதுதான்.

தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல்,சமூகவழித்திரட்டல்களை சாதி இந்துக்களும் சரி,அரசியல் கட்சிகளும் சரி கிஞ்சித்தும் விரும்பவில்லை.தாழ்த்தப்பட்ட மக்களின் அணிதிரட்டலே இந்த ஜனநாயக நாட்டில் கேள்விக்குறியாகியுள்ளது.பண்ணை அடிமை முறைக்கு எதிராக,பொருளாதார,சமூக அடிமைத்தனத்திற்கு எதிராக,தீண்டாமைக்கு எதிராக கீழத்தஞ்சை தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தபோது அவர்களுக்குக் கிடைத்தது ராமையாவின் குடிசை.கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளர்களின்(இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்)எழுச்சிக்குக் கிடைத்தது தாமிரபரணி ஆற்றுக்கரையோரத்தில் அரசுப்படைகள் நடத்திய பச்சைக்கொலைகளின் சடலங்கள்.தற்போது இம்மானுவேலின் 54-வது நினைவேந்தலையொட்டி அம்மக்களின் அணிதிரட்டல் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டால் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையைப் போன்றே இம்மானுவேல் சேகரனின் குருபூஜையும் அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும் என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் துப்பாக்கிச்சூட்டின் மூலம் அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.இந்த மூன்று சம்பவங்கள் மட்டுமல்ல,இதுவரை தமிழகத்தில் நடந்துள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான அனைத்து வன்கொடுமைகளிலும் சாதி இந்துக்களுக்கும்,ஆதிக்கவாதிகளுக்கும் ஆதரவாகத்தான் போலீசார் நிலை எடுத்துள்ளதை நாம் சற்றும் மறுக்கமுடியாது.அரசைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.'விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்பும் போலீஸ் படை மட்டும் இன்னமும் ஜனநாயகப்படுத்தப்படமுடியாமல் இருப்பது எதனால்?
தமிழ்நாட்டின் ஒவ்வொரு சாதிக்கும் நீண்டநெடிய வரலாறு உண்டு.சாதிக்கலவரங்களை அவ்வரலாற்றின் பின்னணியில் பார்க்கவேண்டும்.பள்ளர் என்பது மள்ளர் என்பதன் திரிபு என தேவேந்திரர்கள் கூறுகிறார்கள்.மள்ளர் என்றால் பழந்தமிழ்நாட்டின் வேளாண்தொழில் செய்தவர்களின் தலைவன் என்று பொருள்.அவன் தேவேந்திரன் எனவும் இந்திரன் எனவும் அழைக்கப்பட்டான். பழந்தமிழ்நாட்டின் வேளாண்மை நிலங்கள் முழுவதையும் அரசாண்ட தேவேந்திரர்கள் தங்கள் நிலங்களை இழந்து விவசாயக்கூலிகளாக,தாழ்த்தப்பட்ட மக்களாக உருமாறிவிட்ட வரலாற்று அவலத்தை எண்ணிப்பார்த்து சமுதாயத்தில் எங்களுக்கும் சரிநிகர் சமமாக ஆளுமை வேண்டும் என்ற எழுச்சியுடன் போராடுகிறார்கள்.
1930-களில் ஒன்றுபட்ட ராமநாதபுர மாவட்ட சாதி இந்துக்கள் தேவேந்திரர்களுக்கு இழைத்த சாதிக்கொடுமைகள் பற்றி சொல்லிமாளாது.தாழ்த்தப்பட்ட இனப்பெண்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான நகைகளை அணியக்கூடாது,சந்தனம் பூசக்கூடாது,பூக்களை சூடக்கூடாது,உடலின் மேற்பகுதியை மறைக்கக்கூடாது.தாழ்த்தப்பட்ட இன ஆண்கள் முழங்காலுக்குக்கீழும்,இடுப்புக்கு மேலும் உடுத்தக்கூடாது.குடை கொண்டுசெல்லக்கூடாது.சமைப்பதற்கு மண்பாண்டங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்டளைகள் சாதி இந்துக்களால் பிறப்பிக்கப்பட்டது.அமுல்படுத்தவும்பட்டது.தாழ்த்தப்பட்ட மக்களின் தொடர்ச்சியானப் போராட்டங்கள்தான் அவர்களது தாழ்வைப் பெருமளவு போக்கின.ஆனால் தேவேந்திரர்களின் பழங்கால வரலாற்றுச்சுவடுகள்தான் பிற தாழ்த்தப்பட்ட மக்களின்மீது அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்பையும்,கடைபிடிக்கும் வெறுப்பையும் நிர்ணயிக்கிறது.
1999 மற்றும் 2000-ல் சிறீவில்லிப்புத்தூர்,வி.புதுப்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும்,பறையர் இன மக்களுக்கும் நடந்த கலவரத்தில் இரு தரப்பிலும் 11 பேர் கொல்லப்பட்டதை என்னவென்று சொல்ல?
மறவர்களும்,அகமுடையார்களும்,கள்ளர்களும் ஒன்றிணைக்கப்பட்டு தேவர் இனமாக அரசால் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்,ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பள்ளர்,குறும்பர்,பள்ளாடி,தேவேந்திரர்,பாதிரியார் உள்ளிட்ட ஏழு சாதியினரைச் சேர்த்து தேவேந்திரகுல சமுதாயம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று கிருஷ்ணசாமி இப்போது கேட்கிறார்.தமிழ்நாட்டின் அனைத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் ஒன்றிணைத்து ஒரே சமுதாயமாக தமிழகஅரசு அறிவிக்கவேண்டும் என்ற பரந்த கனவை அவர் எப்போது நனவாக்கப்போகிறார்?ஒரே சமுதாயமாக தாழ்த்தப்பட்டவர்கள் திரளும்போது சமுதாய மறுமலர்ச்சி விரைவுபடும்.சாதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இழிவுகளை இன்னும் பலத்தோடு எதிர்கொள்ளமுடியும்.பிளவுபடுத்தும் சக்திகள் ஓரங்கட்டப்படும்.கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் மேலும்,மேலும் முன்னேறுவார்கள்.இடஒதுக்கீட்டின் முழுப்பயனும் அவர்களுக்குக் கிட்டும்.ஒற்றுமை இல்லாத ஒரே காரணத்தினால்தான் தீண்டாமை தொடர்வதற்கான மூலக்காரணிகளை அரசு விட்டு வைத்திருக்கிறது.பலியானவர்களுக்கு பணம் மட்டும்தான் என்பதை தனது கொள்கையாக அரசு கொண்டிருக்கிறது.பரமக்குடி விவகாரத்திலோ இன்னமும் கொடுமை!இந்தா ஒரு லட்சம்! வாயைப் பொத்திக்கொள்!
கருத்தியல் தளத்தில் தங்களது மேலாதிக்கத்தை தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிப்பதில் தோல்வியடைந்து போயுள்ள சாதி இந்துக்கள் வன்முறையை எளிதில் நாடுகின்றனர்.அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சாதி இந்துக்களில் விளிம்பு நிலையில் உள்ள சாதிகள்தான் தாழ்த்தப்பட்ட இனத்து மக்களோடு மோதலில் இறங்குகின்றனர்(Journal of Indian School of Political Economy,vol 12,No.3 & 4) என்ற ஆய்வு முடிவுகளை வன்முறையிலீடுபடும் சாதி இந்துக்கள் படிக்கவேண்டும்.ஆண்டாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளிலிருந்து அவர்கள் தாங்களாகவேதான் வெளியே வந்திருக்கிறார்கள்.அரசின் வன்கொடுமை எதிர்ப்புச் சட்டங்கள் எதுவும் அவர்களுக்கு ஒன்றும் செய்துவிடவில்லை.(1997-ம் ஆண்டில் 118 கிராமங்கள் தீண்டாமைக் கொடுமைக்கு இலக்காகும் பகுதிகள் என அரசாங்கம் அறிவித்தும்,1992 முதல் 1997 வரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் 1500 வழக்குகள் பதியப்பட்டாலும் 4 வழக்கில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள், Human Rights Watch,1997).சாதி இந்துக்களால் வன்முறைக்கு இலக்காகும் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும்,பொருளாதாரத்திலும் கூட சிறந்து விளங்குகின்றனர்.1989 போடி கலவரங்களின்போது சாதி இந்துக்களின் குற்றச்சாட்டு என்ன தெரியுமா? "அரசு எல்லாத் துறைகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் வழங்குகிறது.தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு சாதி இந்துக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.தாழ்த்தப்பட்ட மக்களை அரசு செல்லங்கொடுத்து,சீராட்டி வளர்க்கிறது".செல்லங்கொடுத்து சீராட்டி வளர்த்த மக்களை இப்படி யாராவது சுட்டுப் பொசுக்குவார்களா?தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது அரசு கொடுத்த சலுகை அல்ல.அதுதான் உண்மையான மறுபங்கீடு.பலநூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு வந்துள்ள மக்களுக்கான ஒளிக்கீற்று இடஒதுக்கீட்டின் மூலமாகத்தான் புலப்பட்டது.ஆனால் அதற்கும் மேலாக அரசு செய்யவேண்டியது ஒன்று உண்டு.நிலமில்லா தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிலங்களைப் பிரித்துக் கொடுப்பது.நிலச்சீர்திருத்தங்களை முழுமையாக அமல்படுத்துவது.தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களோடு சுயமரியாதையையும் சேர்த்தே பெறுவார்கள்.அதன்பிறகு கூலிகளாக,அடிமைகளாக சாதி இந்துக்களிடம் கைகட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை.அம்பேத்கர் கூறியது போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக ஆளுமை தரப்படவேண்டும்.சட்டப்புத்தகத்தில் மட்டுமே அது இருக்கும்,புறத்தே அவர்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுக்கொண்டேயிருப்பார்களானால்,தங்களது சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் மீனாட்சிபுரங்களுக்குள் ரஹ்மத் நகர்களை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்.

தேசியத்தலைவர்கள் சாதித்தலைவர்களாகக் கருதப்படும் போக்கை தமிழகத்தின் சாபக்கேடாகத்தான் கொள்ளவேண்டும்.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை ஒரு சாதிக்கு மட்டும் தலைவராக்கியது போலத்தான் காமராசரையும,வ.உ.சி-யையும் குறிப்பிட்ட சாதிகளின் தலைவர்களாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற தலைவருக்கு,ஆளுமைக்கு அரசு பல மரியாதைகளைச் செய்துள்ளது.1993-ம் ஆண்டு முதல் தேவர் குருபூஜையை அரசு விழாவாக்கியது.சென்னையில் தேவர் சிலை திறக்கப்பட்டது.சென்னையின் முக்கிய சாலை ஒன்றுக்கு தேவரின் பெயர் இடப்பட்டது.முத்துராமலிங்கத்தேவர் டிரஸ்ட்டை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை நியமித்தது.தேவரைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மையத்தை ஏற்படுத்தியது.கள்ளர்,அகமுடையார்,மறவர் மக்களை இணைத்து தேவர் இனம் என்ற ஒன்றை அரசே ஏற்படுத்தியது.தேவர் வாழ்ந்த வீட்டை அரசு செலவில் மியூசியமாக மாற்றியது.இப்படிப்பட்ட அரசின் எல்லா முடிவுகளையும் மக்கள் வரவேற்றனர்.முக்கியமாக தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அறிவிப்புகளுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவித்தது கிடையாது.ஆனால் வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகத்தை 1997,மே-1 அன்று அரசு தொடங்கியபோது சாதி இந்துக்கள் வன்முறை மூலம் தெரிவித்த எதிர்ப்பை என்னவென்று சொல்ல?! தேவர் பெயரை எடுத்தாலும் பரவாயில்லை,சுந்தரலிங்கன் பெயரை வைக்கக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை? 'காவல்துறை தரும் பாதுகாப்பு,அரசியல் கட்சிகள் காட்டும் அக்கறை,முற்போக்கு அரசியலுக்குள் தப்பித்தவறிக்கூட தமது மக்கள் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தலைவர்கள்-இவை அனைத்தும் சேர்ந்தே தலித் விரோத அரசியலை சாத்தியப்படுத்தியுள்ளன'(வ.கீதா).

வெண்மணிப்படுகொலைகளை விசாரித்த கணபதியாப்பிள்ளை ஆணையம் தலித்துகளின் மீதான சாதிக்கொடுமைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.கொடியங்குளத்தில் தலித்துகளின் வீடுகளையும்,சொத்துக்களையும் சேதப்படுத்திய காவல்துறையின் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட கோமதிநாயகம் ஆணையம் காவல்துறையினர் அத்துமீறி நடக்கவில்லை என அப்பட்டமாக பொய் சொன்னது.மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளர்களைக் கொன்று போட்ட காவல்துறையினரைப்பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் விசாரணை ஆணையம் பேரணியில் வந்த தொழிலாளர்கள் மீதுதான் குற்றம் சுமத்தியது.தற்போது பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள நீதிபதி சம்பத் விசாரணை ஆணையம் மட்டும் உண்மையை தோலுரித்துக் காட்டப்போகிறதா என்ன?
இன்றைய செய்தித்தாளைப் புரட்டுகிறேன்.நகைச்சுவையான ஒரு செய்தி என் கண்ணில் பட்டது."பரமக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லையென்றால்,பல நூறு அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் வன்முறையாளர்களால் பறிக்கப்பட்டிருக்கும்".தென்மண்டல ஐ.ஜி. நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதிலிருந்து எனக்கு சட்டெனப் புரிந்தது யார் வன்முறையாளர்கள் என்று?!
-------------------
-அம்ருதா,டிசம்பர்,2011