Thursday, 2 February 2012

கல் உடைக்கும் பெண்


 பெண்ணொருத்தி கல்லுடைத்தபடி
 தெருவோரத்தில் அமர்ந்திருக்கிறாள்
 சிவப்புச் சேலை அணிந்தபடி
 அவள் கல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 எரிக்கும் வெயிலில் அமர்ந்தபடி அவள்
 கல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 செம்புநிற‌மான‌ அந்த‌ப் பெண்
 க‌ல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 அவ‌ளுக்கு வ‌ய‌து இருப‌த்தியொன்றிருக்குமா?
 வீட்டில் அவ‌ளுக்கு ஏழு குழ‌ந்தைக‌ள்
 நாற்ப‌து வ‌ய‌துக்கும் மேல் தோற்ற‌ம் த‌ருகிறாள்
 ப‌த்து  டாக்காவுக்காக‌ நாள் முழுக்க‌ உழைக்கிறாள்
 ஒருத்த‌ருக்கு உண‌வு வாங்க‌க்கூட‌ போதாத‌ காசு
 ஏழு பேரைத் த‌னியே விட்டு
 அவ‌ள் க‌ல்லுடைக்கிறாள்
 தின‌மும் அவ‌ள் க‌ல்லுடைக்கிறாள்.

 அவ‌ளுக்குப் ப‌க்க‌த்தில்,குடை நிழ‌லில் அம‌ர்ந்த‌ப‌டி,
 ஆணொருவ‌ன் க‌ல்லுடைத்துக்கொண்டிருக்கிறான்
 நாள் முழுக்க‌க் க‌ல்லுடைத்துக்கொண்டிருக்கிறான்
 நிழ‌லின் கீழிருக்கும் அம்ம‌னித‌ன்
 ஒரு நாளைக்கு இருப‌து டாக்கா ச‌ம்பாதிக்கிறான்
 க‌ல்லுடைத்த‌ப‌டி
 க‌ல்லுடைக்கும் அம்ம‌னித‌ன் என்ன‌ க‌ன‌வு காணுவான்
 குடையின் கீழ் அம‌ர்ந்த‌ப‌டி?

 அந்த‌ப் பெண்,
 க‌ல்லுடைக்கும் அந்த‌ப் பெண் என்ன‌ க‌ன‌வு காணுவாள்?
 அவ‌ளுக்கு ஒரு க‌ன‌விருக்கிற‌து
 குடையொன்று வேண்டுமெனும் க‌ன‌வு
 வெய்யிலுக்குக் குடையின் கீழிருந்து க‌ல்லுடைக்கும் க‌ன‌வு
அழகான காலையொன்றில் ஆணாகிவிடும் கனவு
 க‌ல்லுடைப்ப‌த‌ற்கென‌ இர‌ட்டைச் ச‌ம்ப‌ள‌ம் பெறும் க‌ன‌வு

 அவ‌ள‌து க‌ன‌வு அவ‌ள‌து க‌ன‌வேதான்
 அடுத்த‌ நாள் காலையிலும் அவ‌ள்
 பெண்ணாக‌த்தான் க‌ல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 குடையில்லை,கிழிந்த‌ குடைகூட‌ இல்லை
 சுடுவெய்யிலில் அம‌ர்ந்த‌ப‌டி
 அவ‌ள் க‌ல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்

 அவ‌ள் உடைத்த‌ க‌ற்க‌ள் கொண்டு புதிய‌ தார்ப் பாதைக‌ளும்
 உய‌ர்ந்த‌ க‌ட்ட‌ட‌ங்க‌ளும் எழுந்துவிட்ட‌ன‌
 க‌டைசியாக‌ அடித்த‌ சூறாவ‌ளியில்
 அவ‌ள‌து வீட்டின் கூரையும் ப‌ற‌ந்துவிட்ட‌து
 அவ‌ள் குடிசையில் ம‌ழை ஊற்றுகிற‌து
 அவ‌ளுக்குத் த‌ன் குடிசைக்கு
 த‌க‌ர‌க் கூரை வேய‌வேண்டும் என்றும் ஒரு க‌ன‌விருந்த‌து

 அவ‌ள் க‌ன‌வு அவ‌ளுக்குக் க‌ன‌வேதான்
 காலையில் அவ‌ள‌து குடிசை மூழ்கிப் போயிருந்த‌து
 அவ‌ள் த‌ன‌து அண்டை வீட்டாரிட‌ம் உர‌த்துக் க‌த்தினாள்
 உல‌க‌த்தாரிட‌ம் உர‌த்துக் க‌த்தினாள்

 என‌க்கொரு க‌ன‌விருக்கிற‌து, என‌க்கொரு க‌ன‌விருக்கிற‌து
 இன்னும் என‌க்குக் குடையில்லை
 இன்னும் என‌க்குக் கூரையில்லை

 இங்கே பாருங்க‌ள்,
 அவ‌ள‌து அண்டை வீட்டார் சொன்னார்க‌ள்‍ -

 அவ‌ள‌து ஏழு குழ‌ந்தைக‌ளுக்கும் ப‌சி
 அவ‌ள‌து த‌லைக்கு எண்ணெய் வேண்டும்
 அவ‌ள‌து முக‌த்துக்கு ப‌வுட‌ர் வேண்டும்
 அவ‌ள் தின‌மும் க‌றுத்துக்கொண்டே வ‌ருகிறாள்
 அவ‌ள‌து கைக‌ள் ம‌ர‌த்துப் போயிற்று
 அவ‌ள் உடைக்கும் க‌ற்க‌ளைப்போல் இறுகிப் போயிற்று

 அவ‌ள‌து சுத்திய‌லோடு அவ‌ள் தொட‌ர்கிறாள்
 தொட‌ர்ந்து அவ‌ள் க‌ல்லுடைத்துக்கொண்டிருக்கிறாள்
 அவ‌ள் ஒரு க‌ல்லாகிப் போனாள்

 சூரிய‌னின் வெப்ப‌த்தினால் உடைக்க‌முடியாத‌ க‌ல்லாக‌
 அரைவ‌யிற்றுப் ப‌சியோடு
 க‌ன‌வு காணும் இத‌ய‌த்துட‌ன்

 (த‌ஸ்லீமா ந‌ஸ்ரினின்  ‘இது என‌து ந‌க‌ர‌ம் இல்லை’ என்ற‌க் க‌விதைத் தொகுப்பிலிருந்து
 மொழியாக்க‌ம் : ய‌முனா ராஜேந்திர‌ன்)

  படம் - வடகிழக்கு தைவானில் அமைந்துள்ள  ஒரு பாறை

No comments:

Post a Comment